தமிழ் இணைய இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையப் பரப்பில் முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிட வேண்டும். பேரறிமுக தமிழ் நாளிதழ்கள், தமிழ் கிழமை இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது. இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும்.[1]

தமிழ் இணைய இதழ்கள்[தொகு]

அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக தமிழ்ஆதர்ஸ்.காம், திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், மெளவல் செய்திகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவை தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.[1]

  • திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன.
  • வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இணையத்தின் இயல்புகளை உள்வாங்கிய வடிமைப்பு.
  • மெளவல் செய்திகள் அன்றாடம் புதிய செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. செய்திகள்- தமிழகம், இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு என்ற தலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆசிரியர் பக்கத்தில் இதுவரை 300க்கு மேலான அரிய கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இணைய இதழ்கள் இணையத்தளம், வலைப்பதிவு, வலைவாசல், செய்திக் கோர்வைத் தளம், சங்கம் அல்லது அமைப்பு சார் தளம், தனிப்பட்டோர் தளம், தகவல் தளம், இணைய நூல், இணையக் குழு ஆகியவற்றில் இருந்து சில முக்கிய வழிகளில் வேறு பட்டு நிற்கின்றன. அவ்வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு இணையத் தமிழ் இதழின் இலக்கணத்தை பின்வருமாறு வரையறை செய்யலாம்.

  • அச்சு இதழ்களின் இணையப் பரிமாற்றம்.
  • நேர்த்தியான காலவரைக்குள் வலையேற்றம்.
  • பலவகை எழுத்தாளர்களின் படைப்புக்கள்.
  • சீரமைக்கப்பட்ட படைப்புக்கள்.
  • முதன்மையான உள்ளடக்கமாக செய்திகளை கொண்டிருக்காத தன்மை.

பேரறிமுகமான இணைய இதழ்கள்[தொகு]

தமிழிலே பேரறிமுகமான இணைய இதழ்களாகவும் அதிக வாசகர்களைக் கொண்டவையாகவும் திண்ணை, பதிவுகள், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், வரலாறு.கொம், முத்துக்கமலம், அம்பலம், திசைகள், ஊடறு, ஆறாம்திணை, மரத்தடி, வெப். உலகம், தமிழ் சிபி, தோழி.கொம், மெளவல் செய்திகள் ஆகியன உள்ளன.

புகலிடத் தமிழர் இணைய இதழ்கள்[தொகு]

புகலிடத் தமிழர்களால் கொண்டு வரப்படும் இணைய இதழ்களாக பதிவுகள், அப்பால் தமிழ், ஊடறு, லும்பினி, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழமுதம், நெய்தல், வார்ப்பு, புகலி, ஈழம்.நெட், தூ, இனி ஆகியவை முக்கியமானவை.

இணையச் சிற்றிதழ்கள்[தொகு]

அச்சில் வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களைப் போலவே இணையத்தில் வெளிவரும் பல தமிழ் இணைய இதழ்களும் உள்ளது. குறிப்பிட்ட எல்லைக்குள் குறைவான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்களைப்போல் இணைய இதழ்களுக்கான இணைய எல்லை விரிவாக இருந்தாலும் இணைய இதழ்களைப் படிக்க இணையம் பயன்படுத்தக்கூடிய திறன் இன்றியமையா தேவையாக உள்ளன. மேலும் இணையத்தைப் பயன்படுத்தும் பலருக்கும் தமிழில் இலக்கிய ஆர்வம் குறைவாக இருக்கிறது. இதனால் தமிழ் இணைய இதழ்களுக்கான வாசகர்கள் எல்லை அகலமானதாக இருக்கிற நிலையிலும் வாசகர்களது எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. உலகில் புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தாலும், தமிழனின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எண்ணத்திலும் தோற்றுவித்த தமிழ் இணைய இதழ்கள் அதிகமாக இருக்கின்றன. இவைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த தமிழ் இணைய இதழ்களை சிற்றிதழ்களாகவே கருத வேண்டியிருக்கிறது.

கால வரையறை[தொகு]

இந்த இணைய இதழ்களும் அச்சு இதழ்களைப் போலவே நாள் , கிழமை , மாதமிருமுறை , மாதம் என்கிற அது வெளியாகும் கால அளவு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி புதுப்பிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இணைய இதழ்களில் படைப்புகளின் வரவிற்குத் தகுந்தவாறு புதுப்பிக்கப்படுகிறது.

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மு.பழனியப்பன் எழுதிய "இணையத்தில் தமிழ்" கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இணைய_இதழ்கள்&oldid=3607413" இருந்து மீள்விக்கப்பட்டது