தமிழ் அச்சிடல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் அச்சிடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதல் தமிழ்ப் புத்தகம் -உரோமன் எழுத்துருவில் அச்சிடப்பட்டது; ஆண்டு: 1554 (பெப்ருவரி 11).

தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1] இந்தத் தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். புதிதாகக் குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாகத் தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது.

கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது. இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.

எண்ணிக்கை[தொகு]

1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான "தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை" (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது.[2] தமிழ் அச்சுப் பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை "1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்" எனக் கூறுகிறது.

அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூல் (1554)[தொகு]

முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர். கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன.

இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.[3]

மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது.[4]

பதினாறாவது நூற்றாண்டில் என்றீக்கசு[தொகு]

தம்பிரான் வணக்கம் (1578); தம்பிரான் வணக்கம் (1578);
தம்பிரான் வணக்கம் (1578);
கிறிஸ்தியானி வணக்கம் (1579)

குடியேற்றவாத மற்றும் உள்ளூர் அரசியல் காரணங்களுக்காகவும் 1547ஆம் ஆண்டில் சோழமண்டலக் கடற்கரையில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றீக்கசு (1520–1600)[5] என்னும் இயேசு சபை மறைபரப்பாளரின் முயற்சியாலும் உரோமானிய வரிவடிவிலும் தமிழ் வரிவடிவிலும் தமிழில் அச்சிடுவது கைகூடியது. தமிழகத்தில் தங்கிப் பணியாற்றிய காலத்தில் ஐந்து வெவ்வேறான தமிழ் நூல்களை இந்திய மேற்கு கடற்கரையின் பல்வேறு இயேசு சபை குடியிருப்புக்களிலிருந்து தமிழ் வரிவடிவில் என்றீக்கசு வெளியிட்டார். மேலும் தமிழின் இலக்கணம் மற்றும் அகரமுதலி ஒன்றையும் தொகுத்திருந்தார். அச்சிடப்படாதபோதும் இந்நூல்கள் துவக்க கால ஐரோப்பியர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. "எந்தவொரு இந்திய மொழியிலும் ஆழ்ந்த புலமை பெற்ற முதல் ஐரோப்பிய அறிஞர்" என என்றீக்கசைப் பற்றிக் கிரகாம் ஷா குறிப்பிடுகிறார்.[6]

1575ஆம் ஆண்டுவாக்கில் தமது கிழக்குக் கடற்கரை திருத்தூதுப் பணிகளிலிருந்து கோவாவிற்கு மாற்றப்பட்டபிறகு, என்றீக்கசு தம் நூல்களைத் தொகுக்க துவங்கினார். இதற்குத் தமிழ் அந்தணராக இருந்து 1562ஆம் ஆண்டு இயேசு சபையில் இணைந்த தந்தை பெரோ லூயிஸ் துணையாயிருந்தார். லூயிசின் துணையுடன் கொல்லத்தில் இருந்த தந்தை யோவான் த ஃபாரியாவின் மேற்பார்வையில் கோவாவில் யோவான் கொன்சால்வசு முதல் தமிழ் அச்சுருக்களை வடித்தார்.

1577ஆம் ஆண்டு கோவாவில் என்றீக்கசின் ஐந்து நூல்களில் முதலாவதான டொக்ட்ரினா கிறிஸ்டம் என் லிங்குவா மலபார் தமுல் - தம்பிரான் வணக்கம் (Doctrina Christam en Lingua Malauar Tamul – Tampiran Vanakam) அச்சிடப்பட்டது. "மலபார் தமிழில் கிறித்தவ போதனை" என்பது இதன் பொருள்.

இந்திய வரிவுருவொன்றில் வெளியான முதல் நூல் இதுவே. இதுபற்றிச் சில அறிஞர்கள் ஐயம் எழுப்பியபோதிலும், கிரகாம் ஷா அந்த அச்சிடல் நிகழ்ந்ததென்றே உறுதியாகக் கூறுகிறார். இரண்டாவதாக வெளிவந்த நூல் ("கிரிசித்தியானி வணக்கம்", ஆண்டு: 1578) பதினாறு பக்கங்களே உடையதாக இருந்தது. மூன்றாவது நூல் போர்த்துக்கலில் பரவலாகியிருந்த மார்கோசு என்பவர் உருவாக்கிய "கிறித்தவ சமயப் போதனை" (Catechism) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 127 பக்கங்களாக வெளியானது. நவம்பர் 14, 1579ஆம் ஆண்டில் வெளியான இந்நூலுக்கான புதிய அச்சுகள் கொச்சியில் வார்த்தெடுக்கப்பட்டன. மூன்று கிறித்தவ சமயப் போதனை நூல்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அச்சுருக்களில் அடுத்த மூன்றாண்டுகளில் வெளியாயின. கொச்சியில் அச்சிடப்பட்ட என்றிக்கசின் மற்ற இரு நூல்கள்:

  1. பாவ அறிக்கை நூல் (Confessionario) 1580 (214 பக்கங்கள்)
  2. அடியார் வரலாறு (Flos Sanctorum), 1586 (669 பக்கங்கள்)

பதினேழாவது நூற்றாண்டில் இராபர்ட் தெ நோபிலி[தொகு]

பதினேழாவது நூற்றாண்டில் உரோமையில் உருவாக்கப்பட்ட அச்சுருக்கள் மூலம் அம்பலக்காட்டிலிருந்து தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டன. தமிழ் அச்சிடலின் இரண்டாம் கட்டமாகக் குறிப்பிடத் தக்க வகையில் அடுத்தடுத்த இரு ஆண்டுகளுக்குள் ஐந்து தொகுதிகள் (இரு நூல்கள் மட்டுமே) வெளியாயின. இதில் முதலாவது "தத்துவ போதகர்" என்று சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் நோபிலியின் கிறித்தவ போதனை நூலாகிய "ஞானோபதேசம்". இது அவரது மறைவிற்குப் பிறகு மூன்று தொகுதிகளாக, முதலாவது 1677இலும் மற்ற இரண்டும் 1678ஆம் ஆண்டிலும் வெளியாயின. இரண்டாம் நூல் 1679ஆம் ஆண்டில் வெளியான அன்டெம் டெ புரோன்சாவின் "தமிழ்- போர்த்துகீசிய அகரமுதலி" ஆகும்.

என்றீக்கசைப் போலன்றி இராபர்ட் தெ நோபிலி போர்த்துகீசியத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்காமல் தாமே தமது நூலைப் புதியதாக எழுதினார். புதிய மறையாகிய கிறித்தவத்தில் புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணரும் வண்ணம் தாமே இம்முயற்சியில் இறங்கினார்.

சென்னையில் சீகன்பால்க் அச்சிடல் (1680–1746)[தொகு]

'ஞானமுறைகளின் விளக்கம்'-முதற்பக்கம்,1781

சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார். 1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்துவந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை. 1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன. அச்சிடச் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாகச் சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677–1679 அளவில் அச்சாயின.

தரங்கம்பாடியில் வீரமாமுனிவர்[தொகு]

1715 ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியநூல்

தரங்கம்பாடியில் சீர்திருத்தத் திருச்சபையினரின் அச்சக முயற்சிகளைத் தவிர, இயேசு சபை போதகரான கான்ஸ்டண்டைன் பெசுகி (வீரமாமுனிவர், 1680–1747)யின் வளர்ச்சியால் தமிழ் அச்சிடலும் இலக்கியமும் பெரும் மாற்றத்தைக் கண்டது. கிறித்துவ சமயத்தினுள்ளேயே இருந்த பிரிவினரிடையே ஏற்பட்ட பிணக்குகளும் விவாதங்களும் கைகலப்பில் முடிந்து கொலைகளும் நிகழ்ந்த காலகட்டத்தில், அச்சிட்டப் புத்தகங்கள் மற்றும் கையேடுகள் மூலம் லூத்தரன் சபையினர் இந்தப் பிணக்குகளைப் பரப்பிவந்தபோதும்,[7] வீரமாமுனிவர் தமது தாக்கமிக்க இலக்கியங்கள்மூலம் எதிர்கொண்டுவந்தார். இயேசு சபையினரே தமிழில் அச்சிடுவதைத் துவக்கி வைத்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் நிலைமை மாறி அச்சகங்கள் பெரும்பாலும் சீர்திருத்தச் சபையினர் கட்டுப்பாட்டில் இருந்தன. லூத்திரன் திருச்சபையினர் பெரும்பான்மையாக இருந்த தஞ்சாவூர், திருவாங்கூர் பகுதிகளில் இயேசு சபையின் வீரமாமுனிவரின் முயற்சிகள் சீர்திருத்தச் சபை பாதிரிமார்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன. வீரமாமுனிவரின் வெற்றிக்கு "உரோமானிய வழக்கங்களை உள்ளூர் வழக்கங்களுக்கு" ஏற்ப மாற்றிக்கொண்டது ஆகும் எனப் பிளாக்பர்ன் [8] கருதுகிறார். அவரது தமிழ் வரலாற்றாளர் முத்துசாமிப் பிள்ளையின் நூல்களில் அவர் கிழக்கத்திய அரசரைப் போல அணிகலன்களுடன் நெற்றியில் சந்தனத்துடன் விவரிக்கப்படுகிறார்.[9] உள்ளூர் ஆட்சியாளர்களின், முக்கியமாக அவர் திவானாகப் பணியாற்றிய சந்தா சாகிப், ஆதரவால் அவர் தமிழ்மொழியில் சிற்றப்பான கல்வி பெறுவது இயல்பாயிற்று.

இந்த விவரிப்புக்கு மாற்றாக இவர் இலக்கிய திறன்மிக்க, கருத்துக்களை இயம்பிடும் ஆற்றல்மிக்க இந்திய துறவிக் கவிஞராகவும் ஆயப்படுகிறார். இவரது எழுத்துக்கள் தற்காலிக தமிழ் இலக்கியத்தின் அடிக்கல்லாகவும் புதுப்பண்பாட்டுக் கூறாகவும் அமைந்துள்ளன. இருபது நூல்களுக்கும் மேலாக, அகரமுதலிகள், காவியங்கள், உரைநடைத் தொகுப்புகள், இலக்கணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் என- எழுதியுள்ளார். முதன்மை உரைநடை நூலான "வேத விளக்கம்" 250 பக்கங்களைக் கொண்டதாக விளங்கியது. தமிழின் முதல் இருமொழி இலக்கண நூலை எழுதிய பெருமையும் அவரையேச் சாரும். அவர் பல மொழிமாற்ற அகரமுதலிகள் தொகுத்தார்: "தமிழ் - இலத்தீன்", "இலத்தீன் - தமிழ் - போர்த்துகீசு", "தமிழ் - பிரெஞ்சு" மற்றும் புகழ்பெற்ற நான்குவழி தமிழ்-தமிழ் நிகண்டான "சதுரகராதி" [10] இந்நூல் 1824 வரை அச்சிடப்படாது இருந்தது. எதிர்தரப்பிலிருந்த சீர்திருத்தவாதிகள் இவரது அனைத்து ஆக்கங்களையும் ஏற்றுக்கொள்ளாதபோதும், பிளாக்பெர்ன் கூற்றுப்படி, இவரது இலக்கியத் திறனைப் பாராட்டியதோடன்றி சில இலக்கண நூலையும் வேதியர் உலகம் என்ற நூலையும் அச்சிட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவை அவர்களின் வழமையான புத்தகங்களில் ஒன்றானது.[11] வீரமாமுனிவரின் "பரமார்த்த குருவின் கதை" அல்லது Guru Simpleton தமிழில் முதன்முதலாக அச்சிடப்பட்ட நாட்டுக்கதைத் தொகுப்பாக விளங்கியது.

பரமார்த்த குருவின் கதை[தொகு]

வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதை பாரசீக அராபிய இரவுகள் அல்லது வட இந்தியாவின் பஞ்சதந்திரக் கதைகள் போன்று பரவலான ஈர்ப்பைப் பெற்றது. தமிழ் நாட்டுப்புற செவிவழிக்ககதை சொல்லும் பாங்கையும் மேற்கத்திய கதைசொல்லும் பாங்கையும் ஒன்றிணைத்த கற்பனைவளத்துடன் புனையப்பட்ட கதைகளாகும். 1776ஆம் ஆண்டிலேயே இதனை எழுதி முடித்தாலும், 1822ஆம் ஆண்டு இலண்டனில் அச்சிடப்படும்வரை வெளியிடப்படவேயில்லை. தரவுகளின்படி வீரமாமுனிவர் முதலில் தமிழில் எழுதிப் பின்னர் இலத்தீனிற்கு மொழிபெயர்த்தார். இதனை உள்ளூர் மக்களுக்கும் சமய போதகர்களுக்கும் மனமகிழ்வைத் தரவே எழுதியதாக அவர் கூறினாலும்[12] அச்சிட்ட நூல்கள் மிகப்பலரையும் எளிதாகக் கவரும் என்ற உண்மையால் எழுத்துப்பிழையற்ற சமூகத்தை வளர்க்க விரும்பிய வீரமாமுனிவர் தமது அகராதிகளுக்கும் இலக்கண நூலுக்கும் இதனால் ஓர் அறிமுகம் கிடைக்குமென நம்பினார்.

பாண்டிச்சேரி மிசன் அச்சகம் ஆற்றிய பணி[தொகு]

1841இல் புதுவை மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்ட திருமறைச்சுவடி. இது தந்தை பெர்டிரான்ட், சே.ச. என்பவரால் உரோமை மறைபரப்பு பேராயத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டு, இப்போது பிரான்சில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது

தமிழகத்தில் அச்சுப் பணி புரிந்ததில் பிரான்சு நாட்டவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். Imprimerie de la Mission என்னும் பெயரில் செயல்பட்ட இந்த அச்சகம் இயேசு சபைத் துறவியரால் 1748ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கிருந்து நூல்கள் வெளிவரும் முன்னே, ஆங்கிலேயர் புதுச்சேரியை (முன்னாள் ”பாண்டிச்சேரி”) முற்றுகையிட்டு, அங்கிருந்த அச்சகத்தையும் 1761இல் அழித்துவிட்டு, அச்சு இயந்திரங்களைச் சென்னைக்குக் கொண்டுசென்றார்கள். இயந்திரங்களோடு, அச்சுக் கோப்பாளராக இருந்த சார்லஸ் டேலோன் (Charles Delon) என்பவரையும் கடத்திச் சென்றார்கள். பின்னர், பாரிசு வெளிநாட்டு மறைபரப்புக் குழு (Missions Etrangers de Paris) என்று அழைக்கப்படுகின்ற அமைப்பைச் சார்ந்த கத்தோலிக்க மறைபரப்பாளர் பாண்டிச்சேரி அச்சகத்தை 1828இல் மீண்டும் தொடங்கி நடத்தினார்கள்.[13] அச்சகம் தொடங்குவதற்கு பிரான்சு நாட்டு அரசு உதவியது. மறைத்திரு டுப்புயி என்பவர் அச்சகத்தின் மேலாளராய் இருந்து, 125 நூல்களை அச்சிலேற்றினார். தேம்பாவணி மூன்று பகுதிகளாகவும், அகர முதலிகள், கிறித்தவப் போதனை நூல்கள், "வேதசாட்சியான தேவசகாயம்பிள்ளை" (1858) போன்றவையும் அங்கிருந்து வெளியாயின.[14]

கிழக்கிந்தியக் கம்பனியின் தமிழர் அச்சகங்களுக்கான தடை[தொகு]

பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி தமிழ்நாட்டை கைப்பற்றியபோது அவர்கள் ஐரோப்பிய அல்லது தமிழ் கிறித்தவ சமய போதகர்களைத் தவிர பிறர் அச்சகங்களை வைத்திருக்கவோ, நூல் வெளியிடவோ அனுமதிக்கவில்லை. இந்தத் தடை 1835 வரை அமுலில் இருந்தது.[15] இந்தத் தடை எல்லிசு மற்றும் தோமஸ் முன்ரோ உட்பட்டோரின் முயற்சியால் தளர்த்தப்பட்டது. எனினும் தமிழர்களால் நூல்களைப் பதிப்பிப்பதற்கோ, அல்லது அச்சங்களை நடத்துவதற்கோ பல வகைத் தடைகள் தொடர்ந்து இருந்தன. குறிப்பாக 1878 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாட்டு மொழிகள் சட்டம் (Vernacular Press Act) ஊடகங்களில் வெளிவரும் அனைத்தையும் கட்டுப்படுத்த அரசுக்கு (கிழக்கிந்தியக் கம்பனிக்கு) அதிகாரத்தைக் கொடுத்தது.[16] இத்தகைய தடைகளாலும், வேறுபல காரணங்களாலும் அச்சுக்கலை தமிழ்நாட்டுக்கு வந்து சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு வளர்ச்சி பெறாமலேயே இருந்தது. இதனால் பெரும்தொகை தமிழ் ஆக்கங்கள் அழிந்து போயின. மிஞ்சிய தமிழ் ஆக்கங்களே 19 ம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பதிக்கப்பட்டு இன்று கிடைக்கின்றன.

எல்லிசும் புனித ஜார்ஜ் கல்லூரி அச்சகமும்[தொகு]

சென்னை மாவட்ட ஆட்சியாளர் பிரான்சிசு வைட் எல்லிசு தமிழ் ஆராய்ச்சி செய்ய 1812ஆம் ஆண்டு சென்னையில் புனித ஜார்ஜ் கல்லூரியைத் தோற்றுவித்தார். இதில் உள்நாட்டுத் தமிழ் அறிஞர்களும் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். 1813இல் கல்லூரியைச் சேர்ந்த ஒரு அச்சகமும் ஆரம்பிக்கப்பட்டது. எல்லிசு அவ்வச்சகத்துக்கு ஒரு அச்சு எந்திரத்தையும் தமிழ் அச்சு வார்ப்புருக்களையும் வழங்கி உதவினார். எழும்பூரிலிருந்த அரசு அச்சகத்திலிருந்து தெலுங்கு வார்ப்புருக்கள், அச்சு மை, வேலை செய்யத் தொழிலாளர்கள் போன்றவற்றைக் கொடுத்து உதவினர். சென்னை அரசே அச்சுக் காகிதங்களைத் தந்துதவியது. 1813இல் வீரமாமுனிவரின் “கொடுந்தமிழ் இலக்கணம்” இவ்வச்சகத்தின் முதல் புத்தகமாக வெளியானது. 1830கள் வரை சுமார் முப்பது நூல்கள் இவ்வச்சகத்தால் பதிப்பிக்கப்பட்டன. இலக்கண நூல்கள் தவிர எல்லிசின் திருக்குறள் மொழிபெயர்ப்பு, ராமாயண உத்தர காண்டம் போன்ற காப்பியங்கள், பஞ்சதந்திரக் கதைகள் போன்ற நீதி இலக்கியங்கள் ஆகியவையும் இவ்வச்சகத்தால் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர தெலுங்கு, அரபி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி நூல்களும் வெளியாகின.

செவிவழிக் கதைகள் தமிழில் அச்சிடல்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முனபகுதியில் இந்தியாவின் அச்சு வரலாற்றில் பல செவிவழி இலக்கியங்கள், முக்கியமாக நாட்டுப்புறக் கதைகள் பதிப்பிக்கப்பட்டன. 1800ஆம் ஆண்டு முதல் 1835 வரை தமிழில் பதிப்பிக்கப்பட்டவற்றில் பெரும்பான்மையாக, அகரமுதலிகளையும் இலக்கணங்களையும் தவிர்த்து, செவிவழிக் கதைகளின் தொகுப்புகள் இருந்தன. புகழ்பெற்ற இலக்கிய நூல்களான திருக்குறள், நாலடியார் போன்றவை பதிப்பிக்கப்பட்டன என்றாலும் இவற்றை விடப் பலமடங்கு செவிவழிக் கதைகளே பிரசுரமாயின.[17] இவற்றில் முதன்மையானதாக விக்கிரமாதித்தன் கதைகள் 1804ஆம் ஆண்டு வெளியானது. 1808ஆம் ஆண்டில் சதமுக ராவணன் கதை"யும் 1812ஆம் ஆண்டில் மரியாதைராமன் கதை மற்றும் தமிழறியும் மடந்தை கதை"யும் 1819ஆம் ஆண்டு "புரூரவ சக்கரவர்த்தி கதை"யும் 1820ஆம் ஆண்டில் சிறுகதைத் தொகுப்பான கதைமஞ்சரியும் வெளியாயின. 1822ஆம் ஆண்டு இலண்டனிலிருந்து தமிழ்,ஆங்கிலம் இருமொழிகளிலும் "பரமார்த்த குருவின் கதை" (குரு சிம்பிள்டன்) வெளியானது. 1826ஆம் ஆண்டு தமிழில் "பஞ்சதந்திரக் கதை"களும் 1833ஆம் ஆண்டு மற்றொரு செவிவழிக்கதைகளின் தொகுப்பான "கதாசிந்தாமணி"யும் பதிப்பிக்கப்பட்டன. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஈசாப் கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1850களில் வெளியிடப்பட்டன.

மதராஸ் பள்ளிப்புத்தக சமூகம்[தொகு]

1817ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் பள்ளிப் புத்தக சமூகம் தொடங்கிய சில நாட்களிலேயே சென்னையிலும் அத்தகைய சமூகம் ஒன்று நிறுவப்பட்டது. இருப்பினும் பல ஆண்டுகள் அது இயங்காநிலையிலேயே இருந்தது. 1850ஆம் ஆண்டு அதற்கு உயிரூட்டும் வகையில் பள்ளிகளுக்கான சிறந்தப் புத்தகங்களுக்குப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டது. இதன் பயனாகப் பல பிரசுரங்கள் வெளிவரத் துவங்கின. அவற்றில் எச். மோரிசு எழுதிய இந்திய வரலாறு சிறப்பாக அமைந்தது.

மதராசு பள்ளிப்புத்தகச் சமூகத்தின் நூல்கள் முதன்மையாக அரசுப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டதால், சமய உணர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன. கிறித்தவ மிசன் பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களில் கிறித்தவ சமயக் கூறுகள் சில சேர்க்கப்பட்டிருந்தன.[18]

வேப்பேரி அச்சகம்[தொகு]

குடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge – SPCK) சென்னையின் புறநகரான வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாகச் செயல்பட்டது. முன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது. 1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியைக் கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார். 1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டியொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விடப் பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவை யாகும்.[20]

1766ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான அச்சுப்பொறியையும் அச்சகத்தையும் பெற்ற வேப்பேரி, புதுச்சேரி பொறியைக் கோட்டைக்கே திருப்பிக் கொடுத்து விட்டது. புதுச்சேரிப் பொறியைக் கொண்டு மவுண்ட் சாலை (தற்போதைய அண்ணா சாலை)யில் அரசு அச்சகம் நிறுவப்பட்டது. வேப்பேரி அச்சகம் எசுபிசிகே அச்சகம் என்றழைக்கப்பட்டது. இங்கு பதிப்பிக்கப்பட்ட நால்களில் சில:பாப்ரிசியசின் புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பு (Translation of the New Testament, 1772); பாப்ரிசியசின் தமிழ், ஆங்கில அகரமுதலி, (1779) ஒரு பரதேசியின் புண்ணிய சரிதம் (பன்யனின் பில்கிரிம்ஸ் புரோக்கிரசின் மொழிபெயர்ப்பு) (1793). பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிந்தாதரிப்பேட்டையில் உள்ள அமெரிக்க வெளிநாட்டு இறைப்பணியாளர்களின் வாரியத்திற்கு (the American Board Mission – ABM) விற்கப்பட்டது. 1886ஆம் ஆண்டில் அவர்கள் வெளியேறியபோது எசுபிசிகே-மறைமாவட்டம் மீட்டு அதனை மறைமாவட்ட அச்சகமெனப் பெயரிட்டது. 250 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அந்த அச்சகம் "கிறித்தவ இலக்கியச் சங்க" (சிஎல்எஸ், Christian Literature Society) அச்சகமென இயங்கி வருகிறது.[21]

ஆறுமுக நாவலர்[தொகு]

ஆறுமுக நாவலர் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் சைவ சித்தாந்த சொற்பொழிவில் முதன்மையாக விளங்கினார். கிறித்தவ சமய போதகர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அச்சுத்துறையில் ஆறுமுக நாவலர் ஒரு பாரிய உடைவை ஏற்படுத்தினார். தமிழ் மொழிக்காகவும் சைவக் கோட்பாடுகளுக்காகவும் யாழ்ப்பாணம், சிதம்பரம் மற்றும் சென்னையில் பல பள்ளிகளைத் தவிர அச்சகச் சாலைகளையும் நிறுவினார். அவரது காலகட்டத்தில் தமிழில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். அவரது வாக்குவன்மையை பாராட்டி 27வது அகவையிலேயே "நாவலர்" என்றழைக்கப்பட்டார். பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து பதிப்பித்தார். அவற்றில் முதன்மையானவை: விளக்கவுரையுடன் மண்டலப்புரத்தாரின் சூடாமணி நிகண்டு (1849), உரையுடன் பழந்தமிழ் இலக்கண நூலான நன்னூல் (1851), நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, மாணிக்க வாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார், பரிமேலழகர் உரையுடன் திருக்குறள் (1861).[22]

தமிழ் புத்தகப் பதிப்பில் சில புதுமைகளை ஆறுமுக நாவலர் அறிமுகப்படுத்தினார். நிறுத்தற்குறிகளை தமிழில் முதன்முதலாகப் பயன்படுத்தினார். படிப்பதற்கும் புரிதலுக்கும் எளிதாக இருக்க கூட்டு சந்திகளைப் பிரித்து அச்சிட்டார்.

தமிழ் இலக்கிய அச்சுப் பதிப்பாக்கம் (1835–1950)[தொகு]

சென்னையில் பல அறிஞர்கள் 1830களில் தமிழ் அச்சக்கச்சாலைகளை நிறுவினர். இவை வணிக நோக்கில் நூல் வெளியீடுகளுக்கு வழி வகுத்தன. மேலும் இவை பொது அரசியலுக்கும் கிறித்துவ சமயப் போதனைகளுக்கு எதிரான இயக்கமாகவும் பயன்பட்டன. கல்லூரியிலும் அரசு அமைப்புகளிலும் பணியாற்றிய வேளையில் வளர்த்துக்கொண்ட திறன்களைத் தங்கள் அச்சகங்களை உருவாக்கப் பயன்படுத்திக்கொண்டனர்.

1834ஆம் ஆண்டு சரவணம்பெருமாள் ஐயரும் விசாகப்பெருமாள் ஐயரும் இணைந்து கல்வி விளக்கம் என்ற அச்சகத்தை நிறுவினர். 1850 வரை இயங்கிய இந்த அச்சகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. 1835ஆம் ஆண்டு திருவெங்கடாச்சல முதலியாரின் சரசுவதி அச்சகமும், 1839ஆம் ஆண்டு உமாபதி முதலியாரின் கல்விக் களஞ்சியம் அச்சகமும் துவங்கின.[23]

உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ச. வையாபுரிப்பிள்ளை உட்பட்ட பல சீரிய தமிழறிஞர்கள் தமிழ் செவ்விலக்கியங்களையும், உரைகளையும் பதிப்பித்தனர். இவர்களின் பணியாலேயே தமிழின் இன்றைய இலக்கிய வளம் உலகுக்கு தெரிய வந்தது.

இசுலாமிய பதிப்பாக்கங்கள் (1835)[தொகு]

1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களைத் தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.

இலங்கையில்[தொகு]

பேருவளையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா வலியுல்லா என்பவர் அரபுத் தமிழில் எழுதிய மீஸான் மாலை எனும் நூல் 1868 இல் வெளியானது. 1878 இல் சா. சேகுத்தம்பி எழுதிய சீறா நாடக மன்ற காரண மாலை எனும் 184 பக்கத் தமிழ் நூல் சென்னை மனோன்மணிய விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.[25]

அயோத்திதாசர், பெளத்த வெளியீடுகள் (1890–1950)[தொகு]

கிறித்தவர்கள் அச்சுக்கலையை தமிழ் மொழிக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இந்துக்களும் விரைவில் அந்தத் தொழிநுட்பத்தை தமது சமய தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். பெளத்தர்கள், தலித்துக்கள் ஆகியோரும் அச்சுக்கலையை பயன்படுத்தி தமது கருத்துக்களை வெளியிடலாயினார். 1890 களில் அயோத்திதாசர் பௌத்தம் தழுவினார். இவர் தானே முன்னின்று பல அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். இவர் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் பெளத்த சங்களையும் உருவாக்க உதவி, அந்தச் சங்கங்கள் ஊடாகவும் பல நூல்கள் வெளிவந்தன. அதுவரை புறக்கணிக்கப்பட்டு வந்த பல பெறுமதி மிக்க பெளத்த, சமண, மற்றும் சமயம் சாரா நூல்கள் இவர்களின் முயற்களால் அச்சேறின. அக்கால மறுமலர்ச்சி பெளத்த இயக்க அறிஞர்களாலும் பல நூல்கள் இயற்றிப் பதிப்பிக்கப்பட்டன.[26] இவற்றுள் கெளதமா அச்சியந்திர சாலை, சித்தார்த்தா புத்தக சாலை பதிப்பகங்களும், அயோத்திதாசர், ஏ. பி. பெரியசாமி புலவர், சிங்காரவேலர், ஜி. அப்பாத்துரை, இ. நா. அய்யாக்கண்ணுப்புலவர், எம். ஓய். முருகேசர் போன்ற அறிஞர்களின் பணிகளும் குறிப்பிடத்தக்கன. இக்காலத்தில் அயோத்திதாசரால் வெளியிடப்பட்ட தமிழன் இதழில் நூல்கள் பட்டியலிடப்பட்டு, புரவலர்கள் உதவி வேண்டப்பெற்று பல நூல்கள் அச்சிடப்பட்டன.[26]

தமிழக அச்சு வரலாற்றுக் கொண்டாட்டங்கள் (மார்ச்சு, 2012)[தொகு]

தமிழகத்தில் அச்சுக் கலை வளர்ந்த வரலாற்றைச் சிறப்பிக்கும் சில செய்திகள் வெளியாகியுள்ளன.[27]

அச்சகத்தோர் சங்க வைர விழா[தொகு]

இந்திய நாட்டிலேயே முதன்முறையாக "அச்சகத்தார் சங்கம்" தொடங்கியது சென்னை நகரில்தான். 1952, சூலை 28ஆம் நாள் "சென்னை அச்சகத்தார், கல் அச்சகத்தார் சங்கம்" (Madras Printers' and Lithographers' Association) தொடங்கப்பட்டது. அச்சங்கம் தனது அறுபதாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தை 2012, மார்ச்சு 3ஆம் நாள் சென்னையில் ஆரம்பித்தது. அச்சங்கத்தின் முதல் தலைவர் வி.எம். பிலிப்பு ஆவார். அப்போது அவர் "டயோசீசன் பிறெஸ்" (Diocesan Press) என்றழைக்கப்பட்ட "மறைமாவட்ட அச்சகத்தின்" மேலாளராக இருந்தார்.

அன்றிருந்த "டயோசீசன் பிறெஸ்" இன்று "சிஎல்எசு பிறெஸ்" என்னும் பெயரில் இயங்கிவருகிறது. அந்த அச்சகத்தின் தொடக்கம் 18ஆம் நூற்றாண்டு ஆகும். 1761இல் "வேப்பேரி அச்சகம்" என்ற பெயரில் கிறித்தவ மறைபரப்பாளர் யொகான் பிலிப் பப்ரிசியசு என்பவர் தொடங்கிய அச்சுக் கூடமே வளர்ச்சியடைந்து, 1798இல் "கிறித்தவ அறிவு வளர்ச்சி சங்க அச்சுக்கூடம்" (SPCK Press) என்னும் பெயர் பெற்றது.

"சென்னை அச்சகத்தார், கல் அச்சகத்தார் சங்கம்" 1952இல் தொடங்கப்பட்டபோது கீழ்வருவோர் அதன் தொடக்க மற்றும் குழு உறுப்பினராகச் செயல்பட்டனர்:

  • வி.எம். பிலிப்பு - மறைமாவட்ட அச்சகம் (Diocesan Press) - தலைவர்
  • என். ராமரத்தினம் - சென்னை சட்ட இதழ் அச்சகம் (Madras Law Journal Press)
  • எம்.ஆர். அப்பாத்துரை - ப்ரீமியர் கலை அச்சகம் (Premier Art Press)
  • எஸ். விசுவநாதன் - நடு கலை அச்சகம் (Central Art Press)
  • எஃப்.டி. பிதாவடியான் - ஃபென் தாம்சன் குழுவினர் (Fenn Thompson & Co.)
  • எஸ். சண்முகம் - கலையோர் அச்சகம் (Artisan Press)
  • எஸ்.பி. நாயுடு - நவீன அச்சுக் கூடம் (Modern Printers)
  • பி. மாதவராவ் - ஆனந்தா அச்சகம் (Ananda Press)
  • எஸ். சிறீராமன் - வணிக அச்சு, வெளியீட்டகம் (Commercial Printing & Publishing House)
  • ஜி. உமாபதி - உமா அச்சகம் (Uma Printers)
  • ஏ.எஃப். பிரியாம்ஷா - ஆசுபி கல் அச்சக நிலையம் (Aspy Litho Works)
  • கே. சாம்பமூர்த்தி - சூபிடர் அச்சகம் (Jupiter Press Ltd.)
  • ஆர். வேங்ககேசுவரன் - ஐக்கிய அச்சகம் (United Printers & Syndicate)
  • கே. கிருச்ணமூர்த்தி - ஒளிப்பட கல் அச்சகம் (Photo Litho Press)
  • எம்.இ. சுப்பிரமணியன் - அம்ரா அச்சகம் (Amra Press)

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் செயல்பட்டுவந்த மேலே குறிப்பிட்ட அச்சகங்களுள் இன்றும் தொடர்ந்து செயல்படுபவை யாவை என்று தெரியவில்லை.

இந்தியாவில் அச்சுக்கலை மறுமலர்ச்சியின் மூன்றாம் நூற்றாண்டு விழா[தொகு]

2012ஆம் ஆண்டு, இந்திய மற்றும் தமிழக அச்சுக் கலையின் மற்றொரு வரலாற்றுக் கட்டம் ஆகும். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1712இல் இந்திய அச்சுக் கலை மறுபிறப்பு அடைந்தது. 1680 இலிருந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் தமிழகத்திலும் முடங்கிக் கிடந்த அச்சுப்பணி புத்துயிர் பெற்றது.

இந்த மறுமலர்ச்சிக்குக் காரணமானவர் பர்த்தலோமேயு சீகன்பால்க் ஆவார். அவரது முயற்சியால் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1712 சூன் மாதம் ஆங்கில அச்செழுத்துகள், தாள் உட்பட ஓர் அச்சகம் சென்னை வந்திறங்கியது. பின் அது தரங்கம்பாடிக்குக் கொண்டுபோகப்பட்டு, அங்கு நிறுவப்பட்டது. இங்கிலாந்தில் ஓர் அச்சுக்கூடத்தில் பணியாற்றியிருந்த ஒருவரின் துணையோடு, சீகன்பால்க் தம் அச்சுக்கூடத்தில் சில போர்த்துகீசிய வெளியீடுகளை 1712இல் அச்சிட்டார்.

இவ்வாறு, அச்சுக் கலை தமிழகத்திலும்.இந்தியாவிலும் மீண்டும் காலூன்றியது. டேனியரின் குடியேற்றமாகிய தரங்கம்பாடியில் மறுபிறப்படைந்த அச்சுக் கலை, வங்காளத்தில் அமைந்திருந்த டேனிய குடியேற்றமாகிய செரம்பூரிலும் வளர்ந்தது. பர்த்தலோமேயு சீகன்பால்குவின் ஒரே மகன் காட்லீப் எர்னஸ்ட் சீகன்பால்கு என்பவர் செரம்பூரின் ஆளுநராக இருந்தபோது, கல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயரால் வெளியேற்றப்பட்ட வில்லியம் காரே மற்றும் இரு பாப்திஸ்து மறைபரப்பாளர் செரம்பூரில் அடைக்கலம் புகுந்தனர். அங்கிருந்து காரேயும் தோழர்களும் அச்சுக்கலையை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் பரப்பினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. நெய்தல் யூ. அண்டோ, தமிழகத்தின் முதல் அச்சகம், வைகறைப் பதிப்பகம்: திண்டுக்கல், 2010.
  2. Classified catalogue of Tamil printed books
  3. Kamil Zvelebil, Companion Studies to the History of Tamil Literature, Handbuch Der Orientalistik Series, Brill Academic Publishers, ISBN 9004093656, 1992, pp. 151-152.
  4. கற்க...நிற்க... தமிழிலக்கியம் குறித்த வலைப்பதிவு
  5. என்றிக்கே என்றீக்கசு
  6. Stuart Blackburn
  7. Stuart Blackburn (2006), Page 45
  8. Stuart Blackburn (2006)
  9. Stuart Blackburn (2006), Page 48
  10. A. Raman[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Stuart Blackburn (2006),Page 49
  12. Stuart Blackburn (2006), Page 66
  13. புதுச்சேரி மிஷன் அச்சகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Stuart Blackburn, Print, Folklore, and Nationalism in Colonial South India, Orient Longmans: New Delhi, 2003, pp. 57-58
  15. "தமிழிலக்கியப் பாரம்பரியப் பிரக்ஞையின் அடுத்த கட்டமாக அமைவது, அச்சுச் சாதனம், மத வேறுபாடின்றி எல்லோருக்கும் திறந்து விடப்பட்டமையுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 1835இல், சேர்சான்ஸ் மெற்காஃப் (Sir Charles Metcalfe) அது காலவரை அச்சுப் பயன்பாட்டிலிருந்து கட்டுப்பாடுகளை நீக்கிய பொழுது தொடங்கிற்று." கா.சிவத்தம்பி (2000), தமிழில் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
  16. seema lal. Print Culture
  17. Stuart Blackburn (2004), பக்கம் 122
  18. John Murdoch, 1865
  19. J.B. Prashant More, Page 80
  20. Stuart Blackburn(2006) Page 58
  21. A. Raman
  22. Stuart Blackburn(2006). Page 125
  23. Rimi B. Chaterjee
  24. Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant Google Book
  25. எஸ். எச். எம். ஜெமீல். (19947). சுவடி ஆற்றுப்படை. கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்
  26. 26.0 26.1 ஸ்டாலின் ராஜாங்கம். (2007). தீண்டப்படாத நூல்கள். சென்னை: ஆழி.
  27. இந்து நாளிதழ், இணையப் பதிப்பு, மார்ச்சு 4, 2012

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_அச்சிடல்_வரலாறு&oldid=3766283" இலிருந்து மீள்விக்கப்பட்டது