தமிழ்நேசன் (அருட்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நேசன்
பிறப்புஅக்டோபர் 19, 1969
முருங்கன், மன்னார்
பெற்றோர்சந்தான் பாவிலு, சந்தாக்குட்டி

வண. பாவிலு கிறிஸ்து நேசரெட்னம் அடிகளார் (பிறப்பு: அக்டோபர் 19, 1969) மன்னார் மறை மாவட்ட அருட்தந்தையும், தமிழ், ஆங்கில மொழி மூலமாக எழுதிவரும் ஒரு எழுத்தாளரும், பத்திரிகையாசிரியருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மன்னார் மாவட்டம், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 'முருங்கன்' கிராமத்தில் சந்தான் பாவிலு, சந்தாக்குட்டி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த நேசரெட்னம் அவர்கள் முருங்கன் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் உயர்தரக் கல்வியை பெற்றார். 1986ஆம் ஆண்டில் யாழ். புனித மாட்டீனார் ஆரம்ப குருமடத்தில் இணைந்து தனது குருத்துவ உருவாக்கத்தை ஆரம்பித்தார். கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கல்வியையும் B.Ph (Rome), யாழ்ப்பாணம் புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இறையியல் கல்வியையும் B.Th (Rome) நிறைவு செய்தார்.

சமயப்பணிகள்[தொகு]

மன்னார் மறைமாவட்டக் குருவாக 1997இல் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 'வங்காலை புனித ஆனாள் ஆலயம்' (1997-1998), 'மன்னார் புனித செபஸ்தியார் பேராலயம்' (1998-2000) ஆகிய இடங்களில் உதவிப் பங்குத்தந்தையாகவும், 'தலை மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தின்' பங்குத் தந்தையாகவும் (2000-2003) பணியாற்றினார். 2003 முதல் மன்னார் மறைமாவட்டத்தின் மறைக்கல்வி, கல்வி, விவிலியப்பணிகள் ஆணைக்குழுவின் இயக்குனராகவும்ää 2006ஆம் ஆண்டிலிருந்து மன்னார் மறைமாவட்டத்தின் மறைத்தூதுப் பணிகள் ஆணைக் குழுவின் இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத்துறையில்[தொகு]

அருட்தந்தை பாவிலு கிறிஸ்து நேசரெட்னம் அவர்கள் தமிழ் எழுத்துத்துறையில் அருட்தந்தை 'தமிழ்நேசன்' எனும் பெயரில் நன்கு பரிச்சயமானவர். இவரின் கன்னி ஆக்கம் இலங்கையின் முதுபெரும் கத்தோலிக்க பத்திரிகையான 'பாதுகாவலன்' பத்திரிகையில் 'அகதிகளை அரவணைப்பீர்' எனும் தலைப்பில் 1986ஆம் ஆண்டு பிரசுரமானது. இதைத் தொடர்ந்து 12 சிறுகதைகளையும், 30 கவிதைகளையும், 46 கட்டுரைகளையும் எழுதியுள்ள இவரின் இத்தகைய ஆக்கங்கள் பாதுகாவலன், மன்னா, தொண்டன், நான், இறையியல் கோலங்கள், புதிய உலகம், தாய், மல்லிகை, அன்புமயம், ஞானம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் மற்றும் தினகரன், வீரகேசரி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

எழுதிய நூல்கள்[தொகு]

  • தண்ணீருக்குள் தாகமா? - முதற்பதிப்பு ஜனவரி 2007, ISBN 955-1627-00-8
  • வெளிச்சத்தின் வேர்கள் முதற்பதிப்பு சூன் 2007

மன்னா[தொகு]

மன்னார் மறைமாவட்டத்திலிருந்து வெளிவரும் 'மன்னா' மாதப்பத்திரிகைக்கு 2000 ஆண்டு முதல் ஆசிரியராக இருந்து அதனை வளப்படுத்தி வருகின்றார் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்கள்.

விருதுகள்[தொகு]

  • சமாதானத்திற்கு இவர் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி 2005ஆம் ஆண்டு சர்வதேச சமாதானப் பேரவையும், உலக அமைதிக்கான சர்வமத, சர்வதேச அமைப்பும் இணைந்து (Universal Peace Federation and Interreligious and International Federation for Peace) 'சமாதானத் தூதுவர்' (Ambassdor for Peace) என்ற விருதை வழங்கி கௌரவித்தது.
  • மன்னா பத்திரிகை ஊடாக இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தேசிய கத்தோலிக்க சமூகத் தொடர்பு ஆணைக்குழு ஒவ்வோர் ஆண்டும் வழங்கும் தேசிய கத்தோலிக்க ஊடகத்துறை விருதுக்காக (National Catholic Media Awards) இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
  • இலங்கையின் இலக்கிய ஏடான 'மல்லிகை' தனது 2007 நவம்பர் இதழில் அருட்தந்தை தமிழ் நேசனின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நேசன்_(அருட்தந்தை)&oldid=2993831" இலிருந்து மீள்விக்கப்பட்டது