தமிழ்நாட்டு ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தன்னவாசல் ஓவியம். இதன் நிறங்கள், தாவரத்திலிருந்து பெறப்பட்டன.

தமிழ்நாட்டு ஓவியம் தமிழ்நாட்டில் வளர்ந்து வந்த ஓவியக்கலையைத் தமிழிலக்கியங்கள் சான்றுகளாகக் காணலாம். எழுத்து என்னும் சொல்லே, எழுத்துக்களை எழுதுவதற்கும், ஓவியங்களை வரைவதற்கும் பயன்படுகிறது. 'ஒவ்வு' என்னும் வினையடியாகப் பிறந்த ஓவு, ஓவம், ஓவியம் என்னும் இம்மூன்று சொற்களும் சித்திரத்தையே குறிக்கின்றன. தமிழர்களும் ஒரு பொருளை ஒத்திருக்கும் தன்மையால் படவடிவத்தை, மேற்கூறிய மூன்று சொற்களாலும் விளக்கினர் போலும். ஓவியம் எழுதுபவர்கள் ஓவர், ஓவியர் எனப்பட்டனர். தமிழ் நாட்டின் தலைசிறந்த நகரங்களில் எல்லாம் ஓவியர்களுக்கு எனத் தனியாக ஒரு வீதி இருந்ததைத் தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் சித்திர எழுத்துக்கள் பயன்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்று, யாப்பருங்கல இறுதிச்சூத்திரச் செய்யுளில் உள்ளது.[1] ஓவியத்தை வெறுந் தொழிலாகக் கருதாது ஒரு யோகமாகவே கருதினர் தமிழர். தமிழ்நாட்டு ஓவியர்கள் புறக்கண் பார்த்ததை, அகக்கண்ணால் கண்டு, அதை இதய வெளியிலே எழுதிப் பின்னர், சுவரிலோ, துணியிலோ வரைந்தார்கள். 'சுவரை வைத்துச் சித்திரம் எழுதவேண்டும்' என்ற பழமொழி, சுவரோவியங்களின் பரந்த பழக்கத்தையும், தொன்மையையும் காட்டுகிறது. கோயில்களிலும், பௌத்த, சமணப் பள்ளிகளிலும், சுவர்களில் சித்திரங்கள் வரைவதை, வழக்கத்தைக் கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட ஓவியங்களைத் தாம் வரையலாம்; மற்றவர் வரையக் கூடா என்ற முறை, தமிழர் இடையே முற்காலத்தில் இருந்தது.

இலக்கியங்கள்[தொகு]

பண்டையத் தமிழக ஓவியர், கூரிய அறிவோடு ஆழ்ந்த நோக்கும் அமையப்பெற்ற ஓவியர்கள்[2] என மதுரைக் காஞ்சி பாராட்டுகிறது. உலகில் காணப்பெறும் உயிருள்ளன, உயிரில்லன ஆகிய எல்லாப் பொருள்களையும், கற்பனையால் காணப்பெறும் பொருள்களையும் அவ்வவற்றின் உருவங்கள் போலத் தோற்றும்படி, தமிழ்நாட்டு ஓவியர்கள் ஓவியங்களாகத் தீட்டினர்[3] என மணிமேகலையும் கூறுகின்றன. உச்சயினி நகரத்தைச் சார்ந்த மகாகாளவனத்தில் உள்ள மண்டபத்தே , பார்ப்பவர் நடுங்கும் பேய் உருவம் வரையப்பட்டிருந்தது என்று பெருங்கதை[4] கூறுகிறது. இராசமாபுரத்துப் பரத்தையர் வீடுகளிலே, சுவர்கள் தோறும் நாடகம் எழுதியிருந்தது என்று சீவக சிந்தாமணி[5] கூறுகிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர், இந்நாடகக் காட்சிகள் காமக் குறிப்புள்ள ஓவியங்கள் என்று சொல்கிறார்.

சமயம்[தொகு]

கரிகாற்சோழன் காலத்துக் காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள கோயிலின் சுவர்கள் மீது தீட்டப் பெற்ற பலவகை ஓவியங்கள், அருகிலிருந்த தெருவில் ஓடும் தேர்களினின்றும், எழுந்த தூளியால், புழுதியை மேலே பூசிக்கொண்ட யானையைப் போல், அழுக்கேறி இருந்தன என்று பட்டினப்பாலை[6] கூறுகிறது.

பரிபாடலில், [7] திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலின் அருகே இருந்த எழுத்து நிலை மண்டபத்தையும், அங்கே தீட்டப்பெற்ற ஓவியங்களையும். அம்மண்டபத்தில் ஒருபுறம் சூரிய சந்திரர்கள், மற்றொருபுறம் மன்மதனும் இரதியும், வேறொரு புறம் அகலிகையின் சோகக்கதையும் அழகாகக் கூறுப்பட்டுள்ளது.

வஞ்சி மாநகரத்தில் இருந்த பௌத்தப் பள்ளியில், பௌத்த மத நிதானங்கள் பன்னிரண்டும் உருவகப்படுத்தி ஓவியங்களால் தீட்டப் பெற்றிருந்தன என மணிமேகலைத் தெரிவிக்கிறது.[8] சமணப் பள்ளிகளின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பெற்றிருந்தன என்பதை மதுரைக் காஞ்சியால்[9] அறியலாம் . கோயில்களைத் தவிர, அரசர்களின் மாளிகைகளிலும், சாதாரண மக்களின் வீடுகளிலும் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன.

ஓவிய மண்டபம்[தொகு]

பாண்டிய மன்னனுடைய ஓவிய மண்டபத்தைப் பற்றிச் சிலப்பதிகாரம்[10] குறிப்பிடுகிறது. தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் வெளிக்கோபுரத்துக்கு அருகில் இருந்த, ஓவிய மண்டபத்தைக் கூறுகிறது.[11] காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புதிதாக வந்த மக்கள் அங்குள்ள வீடுகளின் நீண்டுயர்ந்த வெளிச்சுவர்களிலே வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களைக் கண்டுவியத்தலை மணிமேகலைக் கூறுகிறது. [12] மாளிகைகளில் சித்திரங்கள் வரைவது இன்றியமையாத இன்பவழக்காய் விட்டதை, மாளிகைக்குச் சித்திரம் எவ்வாறு இன்றியமையாதிருக்கிறதோ, அதுபோல எவ்வகை நூலுக்கும் பாயிரம் வேண்டும் என்று கூறும் பவணந்தியின் செய்யுள் கூறுகிறது.[13]

பல்லவர்[தொகு]

தமிழ் இலக்கியத்தில் பிரதிபலிக்கும் ஓவியக்கலையின் சின்னங்கள், அவை வரையப்பெற்ற கோயில்கள், பள்ளிகள், மாளிகைகள் அழிந்து போக, இப்பொழுது நாம் காண்பவற்றுள் மிகப் பழமைவாய்ந்தவை பல்லவர் காலத்து ஓவியங்களே ஆகும். மாமண்டூர் குகைகளின் வெளிமண்டபத்திலும், தூண்களிலும், மாமல்லபுர ஆதிவராக மண்டபத்தில், துர்க்கை விக்கிரகத்தின் மேலுள்ள விதானத்திலும், அருகிலுள்ள தூண்களிலும் ஓவியச் சின்னங்கள் தென்படுகின்றன. இவை மகேந்திரவர்ம பல்லவன் காலத்தவை ஆகும். பனைமலைக் கோயிலின் கிழக்குப் பிராகாரச் சுவரில் காணப்படும் கந்தர்வர்களின் உருவங்களும், காஞ்சி கைலாசநாதர் கோயிலைச் சுற்றி உள்ள மண்டபங்களிற் சிலவற்றுள் காணப்பெறும் சோமாஸ்கந்தர் முதலிய உருவங்களும் ராஜசிம்மன் என்ற இரண்டாவது நரசிம்மவர்ம பல்லவன் காலத்தவை ஆகும். அவனிபசேகரன் என்ற பாண்டியன் ஸ்ரீ வல்லபன் காலத்தில் (330-62) சிற்றண்ணல் வாயில் அர்த்தமண்டபம் புதுப்பிக்கப்பட்டு, முகமண்டபம் கட்டப்பட்டது. இவற்றோடு குகை முழுதும் ஓவியங்கள் தீட்டப்பட்டன.

இடங்கள்[தொகு]

தென்காசியை அடுத்த, திருக்குற்றாவத்துச் சித்திர சபையில் காணும் ஓவியங்கள், மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் காலத்தவை ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் [14]பொற்றாமரைத் தடாகத்துக்கு, மேற்கே உள்ள சடையலம்பு மண்டபத்து விதானத்தில், மீனாட்சியின் திருக்கலியாணமும் அஷ்டதிக்கு விஜயமும் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. திருக்கலியாணக் காட்சியை, இராணிமங்கம்மாளும், தளவாய் நரசப்பையரும் தரிசிப்பதாகத் தீட்டி இருக்கிறார்கள்.

தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னர்கள் காலத்தில், காகிதங்களில் சித்திரங்கள் தீட்டுவதைப் போல, கண்ணாடியின் கீழும் வண்ணங்களைப் பெய்து சித்திரம் எழுதும் முறையைச் சீனாவிலிருந்து, சென்ற நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்து, அது தஞ்சாவூரில் திறம்படக் கையாண்டனர். சரபோஜி சிறந்த ஓவியங்களைச் சேகரித்ததோடு ஓவியர்களையும் நன்கு ஆதரித்தார்.[15] சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்வரை, தஞ்சாவூரில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டன.

சிதம்பரம் நடராசர் கோவிலில் உள்ள ஓவியங்களும் புகழ் வாய்ந்தவையாகும்.[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 'காணப்பட்ட வுருவமெல்லாம்-மாணக் காட்டும் வகைமை நாடி வழுவிலோவியன் கைவினை போல - எழுதப்படுவ துருவெழுத்தாகும்'
  2. மதுரைக் காஞ்சி - 'நுண்ணிதின் உயர்ந்த நுழைந்த நோக்கின்-கண்னுள் வினைஞர்' (517-518)
  3. மதுரைக் காஞ்சி -'எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி ' (516), மணிமேகலை - ' மையறு படிவத்து வானவர் முதலா-எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி' (3:128129)
  4. பெருங்கதை - 2:8:110
  5. சீவக சிந்தாமணி - 108
  6. பட்டினப்பாலை - 48
  7. பரி பாடல் - 19: 48-53
  8. மணிமேகலை (காப்பியம்) - 28:67; வேங்கடசாமி நாட்டார் உரை
  9. மதுரைக் காஞ்சி - 485
  10. சிலப்பதிகாரம் - 28 : 86-7
  11. ' ஸ்ரீ ராஜ ராஜ தேவர் தஞ்சாவூர்ப் பெரிய செண்டு வாயில் சித்திர கூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி ' என்ற கல்வெட்டுப் பகுதி
  12. மணிமேகலை - 3:126-131
  13. நன்னூல், 55
  14. https://musivagurunathan.blogspot.com/2010/09/blog-post_28.html
  15. https://thanjavure.blogspot.com/2008/05/thanjavur-paintings.html
  16. https://karthigainathan.wordpress.com/2011/07/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டு_ஓவியம்&oldid=2890405" இலிருந்து மீள்விக்கப்பட்டது