தமிழ்நாடு கட்டிட வாடகை முறைப்படுத்துதல் சட்டம், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017 (Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) வாடகை ஒப்பந்த நிபந்தனைகள், விதிகளின்படி வாடகையை முறைப்படுத்துதல், சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை நேர் செய்தலே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இச்சட்டத்திற்கான விதிகள் 22 பிப்ரவரி 2019 வரையறை செய்யப்பட்டது.[1] [2]

சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் வகையில் 2018-இல் கொண்டுவரப்பட்ட சட்டம் மற்றும் 2019-இல் இயற்றப்பட்ட விதிகள், 22 பிப்ரவரி, 2019 முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.[3] [4] இந்த சட்ட விதிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு அரசு புதிய இணையதளம் தொடங்கியுள்ளது. இப்புதுச் சட்டத்தின் வருகையால் முன்னிருந்த தமிழ்நாடு கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம், 1960 நீக்கப்பட்டுவிட்டது.

வரலாறு[தொகு]

இந்திய நடுவண் அரசு அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது, 1960-ஆம் ஆண்டின் வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்க பரிந்துரைத்தது. இதை ஏற்று, முந்தைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்கும் வகையில், தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தை, தமிழகச் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு, 2017-ல் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது இந்த சட்டம் மற்றும் அதற்கான விதிகள், தமிழக அரசு அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் எளிதாக பின்பற்றுவதற்காகவும் தமிழ்நாடு அரசு ஒரு இணையதளம் நிறுவியுள்ளது.[5]

வாடகை ஒப்பந்தங்களை இ - சேவை மையத்தில் பதிவு செய்தல்[தொகு]

சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் வாடகை அல்லது குத்தகை ஒப்பந்த விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவுசெய்ய வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், வாடகை அதிகார அமைப்பின் மூலம் வாடகை ஒப்பந்த பதிவு எண் வழங்கப்படும். இதன்மூலம் சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள் இடையே ஏற்படும் பிணக்குகளை களைய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிணக்குகளை தீர்க்கும் அமைப்புகள்[தொகு]

சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, வருவாய் கோட்டாட்சியர் அளவில், வாடகை அதிகார அமைப்பு ஏற்படுத்தி அதனை செயல்படுத்த துணை ஆட்சியர் தகுதிக்கு குறையாத அலுவலர், அரசின் முன் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்படுவார். இப்புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். குத்தகை விடுபவர் 3 மாத வாடகையை முன்பணமாக பெறமுடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டிட வாடகை ஒப்பந்த விதிமுறைகள் & தீர்ப்பாயங்கள்[தொகு]

வாடகை, குத்தகைக்கான உடன் படிக்கைகளை மேற்கொள்ளுதல், அதில் இடம்பெற வேண்டிய விஷயங்கள், உள்வாடகைக்கு விடுவதில் உள்ள கட்டுப்பாடுகள், செலுத்தப்பட வேண்டிய வாடகை, அதை மாற்றி அமைப்பதற்கான விதிமுறைகள், வாடகைதாரருக்கு மூல உடன்படிக்கைக்கான பிரதி வழங்கப்படுதல், சொத்து மேலாளர் யார், அவர் குறித்த தகவல் அளித்தல், நில உரிமையாளர் முன்பணம்செலுத்தும் நடைமுறை உள்ளிட்டபல்வேறு நிகழ்வுகளுக்கான விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் வாடகை வழக்கு நீதிமன்றம் அமைத்தல், மேல்முறையீடு செய்தல், வாடகை தீர்ப்பாயம், தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு அமைத்தல், தீர்ப்பாயத்தால் வாடகை நிர்ணயிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம், தீர்ப்பாயம் இவற்றுக்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் இடையே சிக்கல்களை தீர்க்கும் சட்டம்
  2. சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்
  3. THE TAMIL NADU REGULATION OF RIGHTS AND RESPONSIBILITIES OF LANDLORDS AND TENANTS RULES, 2019[தொடர்பிழந்த இணைப்பு]
  4. சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் இடையே சிக்கல்களை தீர்க்கும் சட்டம்
  5. "The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017". Archived from the original on 2019-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-25.
  6. சொத்து உரிமையாளர் மற்றும் வாடகை முறைப்படுத்தும் சட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]