உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறை, தமிழ்நாடு அரசு நிதித் துறையின் கீழ் இயங்கும் அரசின் தணிக்கை துறைகளில் ஒன்றாகும். அரசின் பிற தணிக்கைத் துறைகள் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, இந்து சமய அறநிலைய தணிக்கைத் துறை, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தணிக்கைத் துறை மற்றும் அரசின் வணிக நிறுவனங்களில் தணிக்கைத் துறை ஆகும். கூட்டுறவுத் தணிக்கைத் துறை தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை இயக்குநர் தலைமையில் இத்துறை செயல்படுகிறது.

கூட்டுறவு தணிக்கைத் துறையின் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1983, பிரிவு 80-இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் 80-ஆவது பிரிவின் கீழ் பதிவாளரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கூட்டுறவு தணிக்கைப் பதிவாளர் ஆவார்.

தணிக்கை செய்வதற்கான சட்ட அதிகாரம்

[தொகு]

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983, பிரிவு 80-இன் கீழ் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (தணிக்கை) எனும் பதவி அரசினால் இயக்குநர் என்ற நிலையில் நியமனம் செய்யப்பட்டு இத்துறை செயல்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (தணிக்கை) தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள் 1988 விதி 101, 102 மற்றும் 103, கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 72, 80 மற்றும் 140 ஆகியவற்றின்படி பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்கள் தவிர்த்து 14 நிர்வாகப் பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கூட்டுறவு சங்கங்களின் தணிக்கையினை மேற்கொள்கிறது.[1]

கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலகம்

[தொகு]

தணிக்கை இயக்குநருக்கு பணியில் உதவிட 1 தணிக்கை இணை இயக்குநர் (தலைமையிடம்), 1 தணிக்கை உதவி இயக்குநர் (நேர்முக உதவியாளர்), 1 தணிக்கை உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளும் மற்றும் 10 கூட்டுறவு தணிக்கை அலுவர்கள், 9 முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் அலுவலகப் பணிக்கு உதவிடுவர்.

கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலக முகவரி

[தொகு]

தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கை இயக்ககம், இரண்டாம் தளம், கால்நடை மருத்துவமனை வளாகம், கதவு எண் 571, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 600 035. மின்னஞ்சல்:addoca.chn@tn.gov.in / தொலைபேசி எண்: 044-24353193

கூட்டுறவு தணிக்கை இயக்குநரின் கீழ் செயல்படும் அலுவலகங்கள்

[தொகு]

மேலும் தணிக்கை இயக்குநரின் கட்டுப்பாட்டில் மண்டலம் மற்றும் சரக அளவில் கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர்களும், கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர்களும் பணிபுரிகின்றனர்.

 • 7 மண்டல கூட்டுறவு தணிக்கை இயக்குநர்கள் - சென்னை மண்டலம், திருச்சி மண்டலம், மதுரை மண்டலம், கோயம்புத்தூர் மண்டலம், சேலம் மண்டலம், விழுப்புரம் மண்டலம் மற்றும் திருநெல்வேலி மண்டலம்
 • சரக கூட்டுறவு தணைக்கை இயக்குநர்கள் - கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர்களின் கீழ் செயல்படுவார்கள்.
 • சென்னை மண்டல இணை இயக்குரின் கீழ் செயல்படும் சரக உதவி இயக்குநர்கள்: சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்
 • திருச்சி மண்டல இணை இயக்குநரின் கீழ் செயல்படும் சரக உதவி இயக்குநர்கள்; திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை
 • கோயம்புத்தூர் மண்டல இணை இயக்குநரின் கீழ் செயல் சரக உதவி இயக்குநர்கள்: கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், உதகமண்டலம்
 • சேலம் மண்டல இணை இயக்குநரின் கீழ் செயல் சரக உதவி இயக்குநர்கள்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல்
 • விழுப்புரம் மண்டல இணை இயக்குநரின் கீழ் செயல் சரக உதவி இயக்குநர்கள்: விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர்
 • திருநெல்வேலி மண்டல இணை இயக்குநரின் கீழ் செயல் சரக உதவி இயக்குநர்கள்: கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோயில்

தணிக்கை இயக்குநரின் செயல்பாடுகள்

[தொகு]
 1. கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைக்கான நடைமுறைகள் உருவாக்குதல்.
 2. தணிக்கை முன்னேற்றத்தினை கண்காணிக்க தணிக்கை குறியீடு நிர்ணயித்தல்.
 3. கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர் வாயிலாக அதனை நடைமுறைப்படுத்துதல்.
 4. சார் அலுவலர்களிடமிருந்து மாதாந்திர மற்றும் காலமுறை அறிக்கைகள் வாயிலாக தணிக்கை முன்னேற்றம் குறித்த விவரங்களை பெற்றும் அதனை கண்காணித்தல்.
 5. மாநில தலைமைக் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை திட்டம் அங்கீகரித்தல் மற்றும் தணிக்கைச்சான்று வழங்குதல்.
 6. தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படை விதிக்கட்டணங்கள் நிலுவையின்றி வசூலிப்பதை கண்காணித்தல்.
 7. தணிக்கையின் போது கண்டறியும் சீரிய குறைகள் தொடர்பாக தனிஅறிக்கைகளை பரிசீலித்து குறைநிவர்த்திக்காக நிர்வாகப் பதிவாளர்களுக்கு அனுப்பி வைத்தல்.
 8. நிதியாண்டின் முடிவில் கூட்டுறவு சங்கங்களில் சட்டப்பூர்வ சரக்கிருப்பு பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை கண்காணித்தல்.
 9. துறைவருவாய் தணிக்கை மேற்கொள்ளுதல்.
 10. கலைத்தல் தணிக்கையினை கண்காணித்தல்.
 11. வருவாய் வைப்புத் தொகையினை திருப்பி அளித்தல்
 12. மறுதணிக்கை குறித்து ஆணையிடல் மற்றும் திருந்திய தணிக்கைச்சான்று வழங்குதல்.
 13. சிறப்பு தணிக்கை புலனாய்வுக் குழுவினை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்.
 14. தணிக்கைக்குழுவின் மூலம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளுதல்.

மண்டல கூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் செயல்பாடுகள்

[தொகு]
 1. மாவட்ட அளவிலான மற்றும் சில குறிப்பிட்ட கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை திட்டம் அங்கீகரித்தல் மற்றும் தணிக்கைச்சான்று வழங்குதல்.
 2. சரக உதவி இயக்குநர் அளவிலான மாதாந்திர பணித்திறனாய்வு கூட்டங்களை நடத்தி தணிக்கை முன்னேற்றத்தினை கண்காணித்தல்.
 3. தணிக்கை கட்டண வசூல் தொடர்பாக மண்டல அளவில் கண்காணித்தல்.
 4. மண்டல அளவிலான நிர்வாகப் பதிவாளர்களுக்கு தனியறிக்கைகளை குறைநிவர்த்திக்காக நேரிடையாக அனுப்பி வைத்தல்.
 5. மேலே குறிப்பிட்ட பொருள் குறித்து இயக்குநர் அலுவலகத்திற்கு அறிக்கைகளை தொகுத்து அனுப்புதல்.
 6. சிறப்பு தணிக்கை புலனாய்வுக் குழுவினை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல். சரக உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக ஆய்வு மற்றும் துறைவருவாய் தணிக்கைப்பணி மேற்கொள்ளுதல்.
 7. குறிப்பிட்ட சங்கங்களில் சோதனைத் தணிக்கை மேற்கொள்ளுதல்.

சரக உதவி இயக்குநர் செயல்பாடுகள்

[தொகு]
 1. ஒவ்வாரு ஆண்டும் கூட்டுறவு சங்கங்களின் இறுதி தணிக்கையினை மேற்கொள்ளுதல்.
 2. அனைத்து தணிக்கையாளர்களின் மாதாந்திர தணிக்கை திட்டத்தினை அங்கீகரித்தல்.
 3. தணிக்கையாளர்களின் நாட்குறிப்பு மற்றும் நேர்முக அறிக்கைகளை பெறுதல் மற்றும் ஆய்வுசெய்தல்.
 4. கூட்டுறவு சங்கங்களின் இறுதி தணிக்கை அறிக்கைகளை தணிக்கையாளர்களிடமிருந்து பெற்று தணிக்கைச்சான்று வழங்குதல்
 5. இறுதி தணிக்கை அறிக்கைகளை சம்பந்தப்பட்ட சங்கம், நிர்வாக அலுவலர் மற்றும் நிதியுதவி வழங்கும் வங்கிக்கு அனுப்பி வைத்தல்.
 6. தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படைவிதி கட்டணம் விதித்தல் மற்றும் வசூலித்தல்.
 7. சரகம் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகப் பதிவாளர்களுக்கு தனியறிக்கைகளை குறைநிவர்த்திக்காக நேரிடையாக அனுப்பி வைத்தல்.
 8. குறிப்பிட்ட சங்கங்களில் சோதனை தணிக்கை மேற்கொள்ளுதல்.
 9. கலைக்கப்பட்ட சங்கங்களின் தணிக்கை மேற்கொள்ளுதல்.
 10. அனைத்து கூட்டுறவு சங்கங்களில் நிதியாண்டின் முதல் நாளில் சட்டப்பூர்வ சரக்கிருப்பு பரிசோதனைக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
 11. மேலே குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இயக்குநர் மற்றும் மண்டல இணை இயக்குநர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்புதல்.
 12. அடிப்படைவிதிப் பணியிடங்களுக்கான வருவாய் வைப்புத் தொகையினை வசூலித்தல், திருப்பியளித்தல்.
 13. மறுதணிக்கை மேற்கொள்ளுதல் மற்றும் திருந்திய தணிக்கைச்சான்று வழங்குதல்.

துறை வருவாய் தணிக்கை

[தொகு]

துறை வருவாய் தணிக்கையினை மேற்கொள்ள 9 முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் மாநிலம் முழுவதும் மேற்கொள்வார்கள். இவர்களின் முக்கியப் பணி தணிக்கையாளர்களின் நாட்குறிப்பின்படி தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படைவிதிக் கட்டணம் விடுதலின்றி முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல். இதுமட்டுமின்றி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ரொக்கப் புத்தக கணக்குகளை தணிக்கை செய்தல். துறை வருவாய் மற்றும் ரொக்கப் புத்தககணக்கு தணிக்கை குறித்து மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு காலாண்டு தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பித்தல். அவ்வறிக்கையின்படி குறைவாக தணிக்கை கட்டணம் வசூலித்திருந்தாலோ அல்லது அதிகமாக வசூலித்திருந்தாலோ அது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

துறை வருவாய் சோதனை தணிக்கை

[தொகு]

கூட்டுறவு தணைக்கை இயக்ககம், அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து சரக உதவி இயக்குநர் அலுவலகங்களில் துறை வருவாய் தணிக்கை மீது சோதனை தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கூட்டுறவு தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் 1 கூட்டுறவு தணிக்கை அலுவலர் பணியிடம் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இவரது முக்கியப்பணி மேற்கூறிய துறைவருவாய் தணிக்கையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துறைவருவாய் தணிக்கையினை சோதனை முறையில் சரிபார்த்தல் மற்றும் தணிக்கையாளர்களின் நாட்குறிப்பின்படி தணிக்கை கட்டணம் மற்றும் அடிப்படைவிதிக் கட்டணம் விடுதலின்றி முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை முறையில் சரிபார்த்தல். இதுமட்டுமின்றி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் ரொக்கப் புத்தக கணக்குகளை சோதனை முறையில் தணிக்கைசெய்தல். துறைவருவாய் மற்றும் ரொக்க புத்தக கணக்கு தணிக்கைகுறித்து இயக்குநர் அலுவலகத்திற்கு உரியகாலத்திற்குள் துறைவருவாய் சோதனை தணிக்கை குறைகளை சமர்ப்பித்தல் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]