தமிழிசை இயக்கம்
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக கூடும் இசை நிகழ்ச்சிகளில் தமிழில், தமிழிசையில் பாடல்கள் பாடப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட சமூக இயக்கம் தமிழிசை இயக்கம் ஆகும். தெலுங்கு மொழி ஆதிக்கத்தில் சீரழிந்து இருந்த தமிழிசையை மீட்டெடுப்பதும், மீளுருவாக்கம் செய்வதும் இந்த இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.
வரலாறு[தொகு]
சங்க காலத்தில் தமிழிசை சிறப்புற்று இருந்தது. சங்கம் மருபிய காலத்தில் சமணர்கள் செல்வாக்குப் பெற்ற போது இசை நலிவுற்றது. பக்தி காலத்தில் தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாக தமிழிசை மீண்டும் சிறப்புற்று இருந்தது. ஆனால் 14 ம் நூற்றாண்டில் தமிழ்நாடு தெலுங்கு விசயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இதன் காரணமாக தெலுங்கு மொழி இசையில் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கியது. தமிழர் இசை மரபு தெலுங்கு இசையினுள் உள்வாங்கப்பட்டது. 20 ம் நூற்றாண்டிலும் இந்த நிலையே தொடர்ந்தது. இசையரங்குகளில் தெலுங்கு அல்லது பிற மொழிகளிலேயே பாடல்கள் பாடப்பட்டன. "இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் 'துக்கடா' என்ற பெயரில் பாடப்பட்டுவந்தன."[1] இந்தச் சூழ்நிலையில் தோன்றியதே தமிழிசை இயக்கம்.
இந்த நிலையில் ராஜா அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் 1941 இல் முதலாவது தமிழிசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு ஒரு இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியமும் மதிப்பும் வழங்கப்படவேண்டும் தீர்மானம் நிறைவேற்றியது. இதை சங்கீத வித்வத் சபை கடுமையாக விமர்சித்தது. இதைத் தொடர்ந்து 1943 இல் நடந்த தமிழிசை மாநாட்டில் வானொலிகளில் தமிழ்ப் பாடல்களே பெரும்பான்மையாக ஒலிபரப்பப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விமர்சனங்கள்[தொகு]
தமிழிசை இயக்கம் நோக்கிய விமர்சனங்களை சங்கீத வித்வத் சபை மிகக் கடுமையாக முன்வைத்தது.[2]
- தமிழில் நல்ல பாடல்கள் இல்லை. தமிழ்ப் பாடல்கள் கருநாடக இசைக் கச்சேரிகளில் பாட தகுதி அற்றவை. கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடக் கோருவது இசை நிகழ்ச்சிகளின் தரத்தைத் தாழ்த்தும்.
- தமிழ்ப் பாடல்களை பாடக் கோருவது பாடகர்களின் விருப்பத்தில் தலையிடுவதாகும். தமிழ்ப் பாடல்கள் கூடப் பாடப்பட வேண்டும் ஆயினும், அது பாடகர்களில் தெரிவாக அமைய வேண்டும்.
- இசைக்கு மொழி இல்லை. இசையே மொழியை விட முதன்மை பெற வேண்டும். இசையில் மொழி கருத்தில் கொள்ளப்படக் கூடாது.
- தமிழிசை இயக்கம் ஒரு அரசியல் இயக்கம். இது இசையில் பிராமணர் அல்லாதவர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு சாதி இயக்கம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பி. டி. செல்லத்துரை. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம். பக்கம்: 194.
- ↑ 2008 - Yoshitaka Terada - Tamil Isai as a Challenge to Brahmanical Music Culture in South India - (ஆங்கில ஆய்வுக் கட்டுரை)
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: |