தமிழர் திருமணம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் திருமணம் எனும் நூல், 1956 ஆம் ஆண்டில் தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டது. நூலாசிரியர் தேவநேயப் பாவாணர் நூல் முகவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

இல்லறமாகிய நல்லறம் பூணும் மக்கள் வாழ்க்கையில் திருமணமே திருமணமே தலைசிறந்த மங்கல நிகழ்ச்சி ஆதலாலும், நீண்ட காலமாக தமிழுக்கும், தமிழனுக்கும் இழுக்கு நேரும் வண்ணம் ஆரியமுறையில் பெரும்பால் தமிழ திருமணங்கள் நடைபெற்றுவருவதாலும், அண்மையில் யான் நடத்திவைத்த பலதிருமணங்களில் யான் உணர்ந்த குறையை நிறைத்தற்பொருட்டும், இந்நூல் எழுதப்பெற்றது.

இந்நூலின் முன்னுரையிலே வாழ்க்கை நோக்கம், வாழ்க்கைமுறை, இல்லறச்சிறப்பு, திருமணமும் கரணமும், மணமக்கள் பெயர், அன்பும் காதலும் காமமும் எனும் தலைப்புக்களில் திருமணம் என்பதை வரையறுக்கின்றார் பாவாணர். நூலிலே, பண்டைத்தமிழ்மணம் எனும் குறுந்தலைப்பின் கீழ் பண்டைக்காலத்தில் நிலவிவந்த மணவகை, மணத்தொகை, மணநடைமுறை முதலியன பற்றி பேசுகிறார்; இடைக்கால மாறுதல்கள் எனும் குறுந்தலைப்பின் கீழ் பிராமணப் புரோகிதமும் வடமொழிக்கரணமும், ஆரியக்கரணத்தால் விளைந்த தீமைகள், குலக்கட்டுப்பாடு மிகை, பொருந்தா மணமும் வீண்சடங்கும் என்ற தலைப்புக்களில் திருமண முறையிலுள்ள குறைகளைச் சாடுகின்றார்; திருமணச் சீர்திருத்தம் எனும் தலைப்பின் கீழ் சீர்திருத்த இயக்கம், பெற்றோர் கவனிக்க வேண்டியவை, மணமக்கள் கவனிக்க வேண்டியவை, உற்றார் உறவினர் கவனிக்க வேண்டியவை, அரசியலார் கவனிக்க வேண்டியவை, போலிச்சீர்திருத்த மணங்கள், பெண்டிர் சமன்மை ஆகிய எவ்வெவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் உரைக்கின்றார்.