தமிழர் தாயக்கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழர் தாயக்கொள்கை தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் தமிழ் மூவேந்தர்க்கும், குடி மக்கட்கும் கொள்கைகளை இயம்புவது பொதுவாய் மிகுந்தனவாகும்.

தமிழர் கொள்கை[தொகு]

தமிழர் கொள்கைகளுள் தாயமுறை என்பது ஒன்று. தொல்காப்பிய உரையாசிரியர் தாயத்தான் எய்துதல் என்பதற்கு தந்தை பொருள் மகற்குறுதல் என்று உரைத்துள்ளார். அவ்வாறு நோக்கின் தாய முறை என்பது சொத்து உரிமை முறையாகும். தந்தையின் சொத்து வழிவழியாய் மகனுக்கு சேருதல் என்பதாம்.

இல்லறம், துறவறம்[தொகு]

இல்லறம், துறவறம் என்ற இரு வழியும் தொல்காப்பியத்தில் தந்தை, தாய், மக்களே கூறப்படுகின்றனர். அவ்வாறன்றி மாமன், உடன்பிறந்தாள், மருமகள் ஆகியோர் சுட்டப்பெறவில்லை. தந்தை மகன் தொடர்பினை 'அந்தமிழ் சிறப்பின் மக' என்று சிறப்பிக்கிறது தொல்காப்பியம்.

சங்கத் தமிழ் வழி[தொகு]

கோப்பெரும்தேவி தான் பெற்றெடுத்த அரசிளங் குமரனை நோக்கி வெற்றியிலும், செங்கோன்மையிலும் தந்தையை ஒப்பாய் பரத்தமையில் ஒவ்வாய் எனவும் கூறுதலைச் சங்கத் தமிழ் வழி அறியலாம். இதனால் தந்தையின் அரசுரிமை மகனுக்கு உரியது. சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப் பெறா. அகப்பாடற் செய்தி மூவேந்தர்கும் உரியது. வினை முடித்து வந்த வேந்தனை தலைவியரும், புதல்வரும் மாலை ஏந்தி எதிர்கொண்டனர்.

இளங்கோவடிகள் கூற்று[தொகு]

இளங்கோவடிகள் சிலப்பதிகார மூன்று காண்ட இறுதியிலும் 'முடியுடை வேந்தர் மூவருள்ளும் சோழ குலத்துதித்தோர்' எனவும், 'பாண்டியக் குலத்தோர்' எனவும் 'சேரகுலத்துதித்தோர்' என்று குறிப்பிடுகிறார். 'குலத்துதித்தோன்' என்பதற்கு வழித்தோன்றல் என்பது பொருள். 'வழி வழி சிறக்க நின்வலம்பழ கொற்றம்' என மதுரைக் காஞ்சியுள் பாண்டியனை வாழ்த்துதலாகும்.

பதிற்றுப்பத்து[தொகு]

பதிற்றுப்பத்துள் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொரையை

'காவற்கமைந்த வரசு துறைபோகிய வீறுசால் புதல்வற்பெற்றனை' என புலவர் குறிப்பிடுகிறார். வழி வழி வாழ்தல் வேண்டின் புதல்வனை பெற்றனை என ஐயமற தெரிவிக்கிறது. அரிசில்கிழார் பாட்டும், கபிலர் பாட்டும் இம்முறையை ஒத்துக்காணப் பெறுதலால் தமிழ் தாய முறை சிறப்பிற்குரியதாக போற்றப்படுவதாக அறிய முடிகிறது.

மேற்கோள்கள்[தொகு]

1. சிலப்பதிகாரம்[தொடர்பிழந்த இணைப்பு]

2. தொல்காப்பியம்[தொடர்பிழந்த இணைப்பு]

3. தமிழ் மொழி வரலாறு - இராகவையங்கார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_தாயக்கொள்கை&oldid=3598363" இலிருந்து மீள்விக்கப்பட்டது