தமிழன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழன் என்ற இதழ் சென்னை ராயப்பேட்டையில்1907 சூன். 19 ஆன்று ஒரு பைசா தமிழன் என்ற பெயருடன் வார இதழாக அயோத்திதாசரால் தொடங்கப்பட்ட தமிழ் இதழாகும். ‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர். ஓராண்டுக்குப் பின் 1908 இல் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’ என்று பெயர் மாற்றப்பட்டது.[1] 1914 மே. 5 அன்று அயோத்தி தாசர் மரணித்தவரை இதழ் தொடர்ச்சியாக வந்த நிலையில் அதன்பிறகு சிறுசிறு இடை வேளைக்கு நடுவே வெளிவந்தது. 1933 இல் ‘தமிழன்’ முற்றிலுமாக நின்றுபோனது.[2] பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்ட ‘தமிழன்’ இதழில் நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், முற்போக்கு, பவுத்தம் போன்றவை குறித்த தீவிர கருத்துகள் இடம்பெற்றன. இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை, வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் இடம்பெற்று, நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின. "தமிழன் இதழில் உலக அளவிலும், தமிழிலும் வெளியாகும் நூல்கள், இதழ்கள், புதிய புத்தகங்கள் ஆகியவற்றின் அறிமுகங்கள் தொடர்ந்தன."

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழன்_(இதழ்)&oldid=3577441" இருந்து மீள்விக்கப்பட்டது