தமிழக விவசாயிகள் போராட்டம் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழக விவசாயிகள் போராட்டம் 2017 

2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் தமிழ்நாட்டில் ஐதரோகார்பன் திட்ட அமலாக்கம் ஆகியவை தமிழக விவசாயிகளை வெறுப்படையச் செய்ததன் காரணமாக தமிழக விவசாயிகள் நாட்டின் தலைநகர் புது தில்லியில், சந்தர் மந்தர் பகுதியில் புதுமையான முறைகளில் தங்கள் எதிரப்புகளைத் தெரிவித்து அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றனர்.

2016 பஞ்சம்[தொகு]

2016 ஆண்டில் ஏற்பட்ட மிக மோசமான மழைப்பொழிவு காரணமாக தமிழக வறட்சி 2016-2017 கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமானதாக இருந்தது. 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சராசரி மழைப்பொழிவானது 62% அளவிற்கு குறைவாக இருந்தது. வடகிழக்குப் பருவக்காற்றுக் காலம் தமிழகத்தில் வழக்கமான அளவிலிருந்து மிகவும் குறைவான அளவு மழையையே கொடுத்தது.

சில  பகுதிகளில் மட்டடுமே  மழையானது பெய்தது என்றே கூறலாம். இந்திய மாநிலங்களில் இயல்பான மழைப்பொழிவிற்கும்  குறைவான,  உயர்ந்தபட்ச பற்றாக்குறையைக் கொண்ட மாநிலமாக தமிழகத்தின் மழையளவு பதிவாகியிருந்தது. 2016 ஆம் ஆண்டில் மழையின்  பற்றாக்குறையானது 82% அளவிற்கு இருந்தது.[1]

தங்கள் வயல்களில் பயிர்கள் கருகுவதைக் காணப் பொறாமால் விவசாயிகள் மாரடைப்பின் காரணமாகவும்,  தற்கொலை செய்து கொண்டும்  இறக்கத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு வறட்சி நிவாரணமாக ரூ. 40,000 கோடிகளைக் கேட்க, மத்திய அரசாங்கமோ வெறும் ரூ.2014 கோடிகளை மட்டுமே நிவாரணத் தொகையாக அறிவித்தது. இந்த குறைந்த அளவு நிதியானது தமிழக விவசாயிகளின் தேவைைய நிறைவேற்றும் அளவிற்குப் போதுமானதாக இல்லை.

ஐதரோகார்பன் திட்ட எதிர்ப்பு[தொகு]

மத்திய அரசாங்கத்தால் நெடுவாசல் போன்ற தமிழக கிராமங்களின் விவசாய நிலங்களில் செயல்படுத்தப்பட இருந்த ஐதரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டம் தமிழ் விவசாயிகளைக் கோபப்படுத்தியது. நெடுவாசல் பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துப் போராடத் தொடங்கினர் [2]

புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம்[தொகு]

தமிழக விவசாயிகள் மாநில மற்றும் மத்திய அரசுகளால் நிவாரண நிதிகள் வழங்கப்படாமலும், விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யாமலும் வஞ்சித்து விட்டதாக கருதிய விவசாயிகள் புது தில்லி, சந்தர் மந்தர் பகுதியில் தங்கி தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தனர். தமிழக விவசாயி அய்யாக்கண்ணு அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அவர்கள் செய்தனர். இந்த எதிர்ப்புப் போராட்டங்களின் போது அவர்கள் பல புதுமையான வழிகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். உதாரணமாக, தங்களின் தலைமுடி மற்றும் தாடியை பாதியளவு சவரம் செய்து கொள்வது, எலிக்கறி மற்றும் பாம்புக்கறியைத் திண்பது போன்றவையாகும். நுாதனமாக போராட்டங்களின் உச்சக்கட்டமாக, சந்தர் மந்தரில் தங்கியிருந்த தமிழ்நாடு விவசாயிகள் ஏப்ரல் 22, 2017 அன்று தங்கள் சிறுநீரைத் தாங்களே அருந்தப் போவதாக சவால் விடுத்தனர். மத்திய அரசு இதற்குப் பிறகும் தங்கள் கோரிக்கைகள் மீது கவனம் செலுத்தாவிடில் மனித மலத்தை உண்டு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் போராட்டத்தின் 22 ஆம் நாளில் அய்யாக்கண்ணுவால் தொடரப்பட்ட வழக்கில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பானது விவசாயிகளின் விருப்பப்படியே கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.[3] தமிழக விவசாயிகளின் போராட்டத்தின் போது தில்லி சீக்கிய குருத்துவார் நிர்வாகக் குழுமம் சார்பாக சந்தர் மந்தர் பகுதியில் தங்கியிருந்த விவசாயிகளுக்கு அவர்கள் அங்கிருந்த காலம் முழுவதும் உணவளித்தனர். [4] சந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நடத்தி வந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் 28 தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Northeast Monsoon to end on deficit note for Tamil Nadu". Skymet Weather. 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2017-02-23.
  2. timesofindia.indiatimes.com › City News › Trichy News
  3. http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/apr/04/madras-hc-asks-tamil-nadu-government-to-waive-farmers-loans-in-cooperative-banks-1589735.html
  4. https://www.ndtv.com/india-news/for-tamil-nadu-farmers-protesting-in-delhi-daily-langar-from-gurdwara-1731687
  5. https://timesofindia.indiatimes.com/city/delhi/28-tamil-nadu-farmers-arrested-for-staging-protest-at-jantar-mantar/articleshow/60464665.cms