தமிழக அரசர் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரசர் விழாக்கள், பொதுவும் சிறப்பும் என இருபாற்படும் அவற்றுட் பொதுவாவன:

தொல்காப்பியம் குறிப்பிடும் அரசு வழா[தொகு]

பிறந்த நாளில் கொண்டாடப்படுவது பெருமங்கலம்
பகைவரை வென்று சிறந்த நாளில் கொண்டாடப்படுவது - சிறந்த மண்ணுமங்கலம்
மக்களுக்கு நல்-நிழல் தந்து காப்பதைக் காட்டும் விழா - குடைநிழல் மரபு
கொடியவரை வெல்லும் வாளைக் கழுவுவது - வாள்மங்கலம்
கோட்டை வெற்றிக்குப் பின் குளியலாடுவது - மண்ணுமங்கலம் [1]

மண்ணு மங்கலம்[தொகு]

அரசன் முதன் முறையாக முடிசூடும் போதும், ஆண்டுதொறும் வரும் முடிசூடிய நாளிலும், கொண்டாடப்பெறும் விழா, மண்ணுமங்கலம் ஆகும். அது நீராடி முடிசூடும் மங்கல வினையாதலால் மண்ணுமங்கலம் எனப்பட்டது. மண்ணுதல்-நீராடுதல். தொல்காப்பியர் இதனைச் சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலம் என்பர்(1037)

உழிஞைப் போரில், மதிற்கண் ஓரரசன் மற்றோரரசனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்டவேந்தன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலம், 'குடுமி கொண்ட மண்ணுமங்கலம்' (தொல்காப்பியம்1014) எனப்படும். அது அகத்தோன் மண்ணுமங்கலமும் புறத்தோன் மண்ணுமங்கலமும் என இருவகை. மாற்றரசன் மதிலையழித்துக் கழுதையேரால் உழுது வெள்ளைவரகுங் கொள்ளுங் கவடியும் வித்தி, அமங்கலமாயின் செய்த வெற்றிவேந்தன். அவற்றிற்குக் கழுவாயாக நீராடும் மங்கலம், 'மன்னெயில் அழித்த மண்ணு மங்கலம்' (தொல்.1037 )எனப்படும்

பெருமங்கலம்[தொகு]

ஆண்டுதொறுங் கொண்டாடப் பெறும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டம் பெருமங்கலம் ஆகும்.அது பெருநாள் எனவும்படும். அதில், அரசன் உயிர்களிடத்துக் காட்டும் அருட்கறிகுறியாகத் தூய வெள்ளணி யணிந்து, சிறைப் பட்டவரை விடுதலை செய்து, கொலையுஞ் செருவும் ஒழிந்து, இறைதவிர்தலும் தானஞ் செய்தலும் பிறவும் மேற்கொள்வது வழக்கம்.

வெற்றி விழா[தொகு]

அரசன் போரில் பெற்ற வெற்றியைத் தன்னகரிலாயினும், மாற்றான் நகரிலாயினும், ஈரிடத்துமாயினும், கொண்டாடுவது வெற்றிவிழாவாகும். இதையொட்டி, அம்பலம் பொன்வேய்தல் திருவீதியமைத்தல் முதலிய திருப்பணிகளும், துலாபாரம் இரணிய கருப்பம் முதலிய தானங்களும், செய்வது வழக்கம்.

மகப்பேற்று விழா[தொகு]

அரசனுக்குப் பிள்ளை பிறந்தபோது கொண்டாடப்படும் விழா மகப்பேற்று விழாவாகும். பெண் மகப்பேற்றினும் ஆண் மகப்பேறும், ஆண் மகப்பேற்றிலும் பட்டத்திற்குரிய முதன் மகற்பேறும், சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.

அரங்கேற்று விழா[தொகு]

முத்தமிழும் ஓரிரு தமிழும் பற்றி நூலியற்றிய ஆசிரியர், அரங்கேற்றியதைக் கொண்டாடும் விழா அரங்கேற்று விழாவாகும். அரங்கேறிய புலவரை வெண்பட்டணிவித்து யானை மேலேற்றி நகர்வலம் வருவித்து, அவருக்குச் சிறந்த பரிசும் சின்னமும் முற்றூட்டும் அளிப்பது அரசர் வழக்கம்.

நடுகல் விழா[தொகு]

நடுகல்-மாதிரிப்படம்

போரில்பட்ட சிறந்த மறவர்க்குக் கல்நடும் விழா நடுகல் விழாவாகும்.

பத்தினி விழா[தொகு]

சிறந்த பத்தினிப் பெண்ணுக்கு, அவள் இறந்தபின் கல் அல்லது சிலை நாட்டும் விழா பத்தினி விழாவகும். இனி, சிறப்பாவன: பஃறுளி நெடியோன் எடுத்து முந்நீர் விழாவும், முசுகுந்தனும் நெடுமுடிக்கிள்ளி வரைப்பட்ட அவன் வழியினரும் கொண்டாடிய இந்திர விழாவும், [[|முதலாம் இராசராச சோழன்|முதலாம் இராசராசன்]] பிறந்த நாளிற் கொண்டாடப்பட்ட சதயத் திருவிழாவும், போன்றவை சிறப்பு விழாவாகும். (பழந்தமிழ்ஆட்சி)

வெள்ளணி விழா[தொகு]

மன்னனின் முடிசூட்டு விழா வெள்ளணி விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் விவசாயிகள், புலவர்கள் போன்றவர்களுக்கு தானங்கள் கொடுக்கப்பட்டன.[2][3] கம்பராமாயணத்தில் வரும் வெள்ளணி ஒத்த என்ற வரியைக்கொண்டு கம்பர் காலத்திலும் இவ்விழா வெள்ளணி என்றே கூறப்பட்டது என்பதை அறியலாம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. தொல்காப்பியம் புறத்திணையியல் 30
 2. அடித்தளை நீக்கும் வெள்ளணி யாமெனும்
  தொடுப்பேர் உழவ ரோதைப் பாணியும்
  சிலம்பு-வஞ்சிக்காண்டம்-நீர்ப்படைக் காதை
 3. கள்ளமர் கோதையர் வெள்ளணி விழவில் ஐங்கணைக் கிழவன் காட்சியுள் மகிழ
  கல்லாடம் 22 பிறை தொழுகென்றல்
 4. வள் உறை வயிர வாள் மகர கேதனன்
  வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே.
  கம்பராமாயணம்-பால காண்டம்-உண்டாட்டுப் படலம்

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_அரசர்_விழா&oldid=3215156" இருந்து மீள்விக்கப்பட்டது