தமிழகப் பறவைகள் சரணாலயங்கள்
இந்திய மாநிலங்களில் தமிழகம் வனப்பரப்பில் 17% பெற்று 14-ம் இடத்தில் உள்ளது. தமிழகக் காடுகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, செந்நாய், ஓநாய், குள்ளநரி போன்ற விலங்கினஙளும், இருவாட்சி, பிணம் தின்னிக் கழுகு, மரகதப் புறா (தமிழகத்தின் மாநில பறவை), பூஞ்சிட்டு, பலவித குக்குறுவான்கள், கொண்டைக் குருவிகள், சிரிப்பான்கள், வானம்பாடிகள் உள்ளிட்ட பறவைகளும், பலவித பூச்சிகள், நீர்நிலைகள், ஏரி, ஆறு,குளம் என பல்வேறு சூழலமைப்புகள் உள்ளன. தமிழகத்தில் 60 குடும்பங்களில் 360 வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. நீர்நிலைகளில் பறவைகளை பாதுகாக்க 13 பகுதிகளை பறவைகள் சரணாலயங்களாக தமிழக அரசு அறிவித்துப் பாதுகாத்து வருகிறது.[2][3]
ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் வந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி செல்கின்றன. சாதாரணமாக காணும் வெள்ளைக் கொக்கு, நாரைகள், நீர்க்காகங்கள் யாவும் தமிழகத்திற்கே உரித்தான பறவைகள் ஆகும். இதில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடியதும், நீண்ட தூரமான சைபீரியா, ஐரோப்பிய நாடுகள், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பலவித வாத்துக்கள், உள்ளான்கள், ஆலாக்கள் என அனைத்தும் அடங்கும்.
ஏரி, குளங்கள், ஆறுகள், போன்ற நீர்நிலைகளைப் பலவித நீர்ப்பறவைகள் தங்களது வாழிடமாகக் கொண்டு வாழ்கின்றன.
பழவேற்காடு பறவைகள் சரணாலயம்
[தொகு]
தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையோரத்தில் 481 ச.கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ள பழவேற்காடு காப்பகத்தில், 153 ச.கி.மீ., பரப்பளவு தமிழக எல்லைக்குட்பட்டதாகும். சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ., தொலைவிலும் பழவேற்காடு பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது. 800 முதல் 2000 மி.மீ., வரை ஆண்டுதோறும் மழை வளம் பெறும் சூழலமைப்பு பழவேற்காட்டில் காணப்படுகிறது. நவம்பர் முதல் பிபரவரி வரையிலான மாதங்கள் சரணாலயத்தைக் காண ஏற்ற நாடகளாகும்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
[தொகு]
77.85 ஏக்கர் பரப்பில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து 12 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள வெள்ளோட்டில், உள்ளூர் வலசை பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்றவைகளை ஆண்டின் கடைசி நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் பெருந்திரளாக காணலாம்.
கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
[தொகு]
சென்னையில் இருந்து 86 கி.மீ., தொலைவில் மதுராந்தகம், செங்கல்பட்டிற்கு அருகில் 61.21 ஏக்கர் பரப்பளவில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கத்தில் கரிக்கிலியை நாடி வரும் பறவைகளை மார்ச், ஏப்ரல் வரை காணப்படுகின்றன.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
[தொகு]
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பளவில் பல வண்ணப் பறவைகளுடன் மனதை கவரும் வண்ணம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 50.கி.மீட்டரும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளது. 321 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சரணாலயத்திற்கு அருகாமை நகராக அரியலூர் 15 கி.மீ., தொலைவில் உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் வரத் தொடங்கும் பறவைகள், இங்கு வெப்பம் அதிகமாக வரத் தொடங்கும் மே மாதத்தில் திரும்பத் தொடங்குகின்றன. ஆண்டிற்கு 800 முதல் 2000 மி.மீ., வரை மழை பொழியும் இடமாக வேட்டக்குடி அமைந்துள்ளது.
உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
[தொகு]
திருவாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், 1999-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 68 கி.மீ. தொலைவிலும் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீரே, உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆதாரமாக உள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள உதயமார்தாண்டபுரம் சரணாலயத்திற்கு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பறவைகளின் வருகைக் காலமாகும். கோடையின் துவக்கமான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நீர் வரத்தின்றி வறண்டு காணப்படும்.
வடுவூர் பறவைகள் சரணாலயம்
[தொகு]
1999-ம் ஆண்டு சூலை மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயம், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்த வடுவூர், 40 விதமான நீர்ப் பறவைகளின் வருகை தரும் இடமாகும்.[4] நவம்பர் மாதத்தில் 20,000 பறவைகள் இங்கு வந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் துவங்கி டிசம்பர், சனவரி வரையிலான காலத்தில் பறவைகள் இங்கு வந்து செல்லும்.
சித்திரன்குடி பறவைகள் சரணாலயம்
[தொகு]
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தில் பலவித வண்ணப் பறவைகளால் எழிலுடன் காட்சி தரும் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம், 1989-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 47.63 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள சித்திரன்குடியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் சாயல்குடியும், 45 கி.மீ., தொலைவில் இராமநாதபுரமும் அமைந்துள்ளது.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்
[தொகு]
திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ள கூந்தன்குளம், 1994-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, செம்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கூந்தன்குளம், காடன் குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள பறவைகள் புகலிடத்தில் பூநாரைகளின் வரவு அதிகமாக இருக்கும் இடமாகும். கூந்தன் குளம் கிராம மக்களின் அரவணைப்பில், பறவைகள் யாவும், மனிதர் பயம் இன்றி அனைத்து வீடுகளின் மரங்களிலும் கூடுகள் அமைந்து முட்டையிட்டு, குஞ்சுகளை பாதுகாத்துக் கொள்கின்றான.
மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம்
[தொகு]
இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்-கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம், தமிழகத்தின் பெரிய பறவைகள் சரணாலயமாகும். 593.06 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள பறவைகள் புகலிடம் 1998-ம் ஆண்டு முறைப்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.சாயல்குடியில் இருந்து 12 கி.மீட்டரும், கடலாடியில் இருந்து 15 கி.மீட்டரும், இராமநாதபுரத்தில் இருந்து 45 கி.மீ., தொலைவிலும் இப்பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
கஞ்சிரன் குளம் பறவைகள் சரணாலயம்
[தொகு]
170 பறவை இனங்களுக்கு வாழ்விடமாக உள்ள கஞ்சிரன் குளம், 1989-ம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ., தொலைவிலும், மதுரையில் இருந்து 117 கி.மீ., தொலைவிலும் கஞ்சிரன் குளம் அமைந்துள்ளது.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
[தொகு]
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடியாகும். 38.4 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலுடன் காணப்படும் வேட்டங்குடி, 1977-ம் ஆண்டு சூன் மாதம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. காரைகுடியில் இருந்து 32 கி.மீ., தொலைவில் வேட்டங்குடி அமைந்துள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
[தொகு]
தமிழகத்தின் பழமையான சரணாலயங்களில் வேடந்தாங்கலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கிராம மக்களின் பாதுகாப்பில் 250 ஆண்டு காலமாக பறவைகள் வாழிடமாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து 75 கி.மீ., தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவிலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. வேடந்தாங்கலில் இருந்து கிழக்கு பக்கமாக சற்றேறக் குறைய 7 கி.மீ., தொலைவில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
கோடியக்கரை பறவைகள் சரணாலயம்
[தொகு]
கோடியக்கரை சரணாலயம் தமிழகத்தின் கடைகோடியில் இயற்கையான முறையில் அமைந்துள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ., தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவிலும் கோடியக்கரை அமைந்துள்ளது.
உசாத்துணை
[தொகு]- தமிழ்நாடு வனத்துறையின் இணையத்தளம்.
- பறவைகளும், வேடந்தாங்கலும் - மா.கிருஷ்ணன் - பதிப்பாசிரியர் - பெருமாள் முருகன் - காலச்சுவடு வெளியீடு.
- தமிழ்நாட்டுப் பறவைகள் - முனைவர்.சு.ரத்னம் - மெய்யப்பன் தமிழாய்வகம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Forest Dept.Eco-Tourism
- ↑ Tamil Nadu Department of Environment (2006) State of the Environment, retrieved 9/9/2007, Report பரணிடப்பட்டது 2010-09-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Tamil Nadu Forest Dept., Bird sanctuaries
- ↑ Tamil Nadu Forest Dept., Bird Sanctuaries in Tamil Nadu Vaduvoor பரணிடப்பட்டது 2013-10-21 at the வந்தவழி இயந்திரம்