தமிழகக் காட்டுவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 22,643 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே காடுகள். இது தமிழ்நாட்டின் முழுநிலப்பரப்பில் 15 சதவீதம் மட்டுமே. ஒரு நிலப்பகுதி சுற்றுச்சூழல் சமநிலையுடன், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். தமிழகத்தின் காடுகள் மாநில எல்லை பிரிவினையின் போது குறைந்தது. இன்று எஞ்சியிருக்கின்ற 17% வனப்பகுதியில் தான் 60 குடும்பங்களை சேர்ந்த 360 க்கும் மேற்பட்ட பறவைகளும், புலி, சிறுத்தை, யானை, காட்டெருது, கரடி, கடமான், கேளையாடு, வரையாடு (தமிழகத்தின் மாநில விலங்கு) சருகுமான், வெளிமான், கழுதைப்புலி, மரநாய், நீர்நாய், சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), செந்நாய், மலை அணில், மலைப்பாம்பு பல சிறப்பினங்கள் வாழ்கின்றன.

தமிழகத்திலுள்ள காடுகளில் 3,305 சதுர கிலோமீட்டர்களே, (2.5 சதவீதமே) பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகும். பாதுகாக்கப்பட்ட 2.5 சதவீதக் காடுகளில் தான் காட்டுயிர்கள் மனிதத் தலையீடின்றி வாழ முடிகிறது. பாதுகாக்கப்பட்ட காடுகளின் வரிசையில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகம் 14வது இடத்தில் உள்ளது. நமது தமிழகத்தில் 2 உயிர்க் கோளக் காப்பகங்களும், 5 தேசிய பூங்காக்களும் நமது சுற்றுச்சூழலைக் காக்க அமைக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள காட்டுயிர்களை காக்க 8 காட்டுயிர் சரணாலயங்களும், 13 பறவைகள் சரணாலயங்களும், 4 யானை, 3 புலி காப்பிடங்களும் உள்ளன. (முழு விவரம் பின்னிணைப்பு -2 மற்றும் 3, 4 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.)

மேற்குத் தொடர்ச்சி மலை[தொகு]

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் 1,60,000 ச.கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளே தமிழ்நாட்டின் ஆதாரங்களாகும். தரை மட்டத்தில் இருந்து 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பலவேறு வகை காடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உலக அளவில் சிறப்பு வாய்ந்த உயிர் கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகவும் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது.

காடுகள்[தொகு]

  • முட்புதர், வறண்டக் காடுகள் (Tropical Dry Thorn Forest)
  • இலையுதிர்க் காடுகள் (Deciduous Forest)
  • பசுமையான இலையுதிர்க் காடுகள் (Moist Deciduous Forest)
  • அடுக்கு காடுகள் (Gallery or Riverine Forest)
  • சோலை (அல்லது) புல்வெளிக காடுகள் (Shold Grass Land)

போன்ற பல்வேறு வகை காடுகளை கொண்டுள்ளது. இங்கு 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 179 வகை தவளைகளும், 102 மீன் வகைகளும், 6000 பூச்சியினங்களும், சற்றேறக் குறைய 258 வகையான மெல்லுடலிகளும் இங்கு வாழ்கின்றன. உலகில் எங்கும் காண இயலாத, பெரும் அழிவுக்குள்ளான உயிரினங்கள் 325 வகைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்கின்றன.

ஆறுகள்[தொகு]

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, சித்தாறு, மணிமுத்தாறு, குண்டலி, பஞ்சையாறு, பெண்ணாறு, பெரியாறு உள்ளிட்ட ஆறுகள் நமது மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்தே உற்பத்தியாகின்றன.

அணைக்கட்டுகள்[தொகு]

முல்லை பெரியாறு, பரம்பிக் குளம், பிளங்காமடச்சி, சிவாஜி-சாகர் அணை போன்ற 50 முக்கிய அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகள் தமிழகத்தின் வாழ்வின் ஆதார புள்ளியாக அமைந்துள்ளன.

தமிழகத்திலுள்ள காட்டுயிர்க் காப்பிடங்களும் சரணலயங்களும்[தொகு]

தமிழக புவியியலில் முக்கியத்துவம் வாய்ந்த இடமான மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் தமிழகத்தின் எட்டுக்கும் மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காட்டுயிர்க் காப்பிடங்கள் உள்ளன. இது தவிர, சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை (கரடி, முள்ளம்பன்றி), வேலூரில் ஜவ்வாது மலை (யானை, காட்டெருது), திருச்சியில் பச்சை மலை, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை (அரிய மூலிகைகள்) போன்ற சிறிய குன்றுத் தொடர்களும் முக்கியமானவை.

1940இல் உருவாக்கப்பட்ட முதுமலை தேசிய பூங்கா, தென்னிந்தியாவின் முதல் நவீன காட்டுயிர் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 2 உயிர்க்கோளக் காப்பகங்கள் (BioSphere Reserves), 5 தேசிய பூங்காக்கள் - ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை பாதுகாக்க அமைக்கப்பட்டவை. அவை:ஆனை மலை பகுதியில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா, முதுமலை தேசிய பூங்கா, முக்குருத்தி தேசிய பூங்கா, மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா, கிண்டி தேசிய பூங்கா,மற்றும் 8 காட்டுயிர் சரணாலயங்கள் - குறிப்பிட்ட உயிரினத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டவை காணாப்படுகின்றன: சிறீவில்லிப்புத்தூர் மலை அணில் காட்டுயிர் உய்விடம், இந்திரா காந்தி சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கன்னியாகுமரி புலி சரணாலயம், முதுமலை சரணாலயம், சத்தியமங்கலம் சரணாலயம், வல்லநாடு வெளிமான் சரணாலயம். ம்மஏலும், 4 யானை காப்பிடங்கள் உள்ளன. அவை; நீலகிரி, கோயம்புத்தூர், ஆனைமலை, சிறீவில்லிப்புத்தூர், 3 புலி காப்பிடங்கள் அப்வையாவன; களக்காடு-முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை- பரம்பிக்குளம், இன்னும், 13 பறவை சரணாலயங்கள் (சித்திரங்குடி, கஞ்சிராங்குளம், கரைவெட்டி, கரிக்கிலி, கூந்தங்குளம், மேல் செல்வனூர் – கீழ் செல்வனூர், கோடிக்கரை, பழவேற்காடு, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், வேடந்தாங்கல், வெள்ளோடு, வேட்டங்குடி) ஆகியவை உள்ளன.

தமிழக சரணாலயங்களில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருது (Gaur), கரடி, கடமான், கேளையாடு (மான் வகை), புள்ளி மான், வரையாடு, சருகுமான், வெளிமான், செந்நாய், கழுதைப்புலி, நரி, மரநாய், நீர்நாய், மந்தி, கருமந்தி, சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), மலைஅணில், ராஜநாகம், மலைப்பாம்பு, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்[தொகு]

ஐ.நா.வின் துணையமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ உயிரியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த உயிர்க்கோளக் காப்பகங்களை உலகம் முழுவதும் அறிவித்துள்ளது. தாவர, காட்டுயிர், பறவைகளை மனித இடையூறு இன்றி பாதுகாப்பதும், பழங்குடிகளை பாரம்பரிய ரீதியில் முன்னேற்றம் காண வைப்பதுமே இதன் நோக்கம். அந்த வகையில் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (5,520 சதுர கிலோ மீட்டர் பரப்பு) அறிவிக்கப்படது. தமிழகத்தின் முதுமலை, முக்குருத்தி சரணாலயங்கள் இதற்குள் அடங்கும். கடல் உயிரினங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட 10,500 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகமும் முக்கியமானது.

பறவை சரணாலயங்கள்[தொகு]

பறவைகள் இரண்டு வகைப்பட்டவை:

  1. . வலசை போகும் பறவைகள்
  2. . வலசை போகாத பறவைகள்.

ஐரோப்பா, மேற்கத்திய நாடுகளில் வாழும் சில பறவை இனங்கள் பனிக்காலத்தில் இந்தியாவுக்கு இரை தேடி வருகின்றன. ஆனால் அவை இங்கு கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்வதில்லை. உணவு பெறுவது மட்டுமே அவற்றின் நோக்கம். இந்தப் பறவைகள் அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. மிகவும் பழைமையான பிரபலமான பெயர் செங்கால் நாரை (White Stork).

இப்படிப்பட்ட பறவைகள் தமிழகத்துக்கு வரும் இடங்கள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள பறவை சரணாலயங்கள் 13ம் நீர்நிலைகளில் அமைந்தவை.தமிழக பறவை சரணாலயங்களில் கூடுகட்டும் வெண்கொக்கு, வக்கா, அரிவாள் மூக்கன், நத்தைகுத்தி நாரை, நீர்க்காகம், மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா போன்றவை இந்திய நாட்டுப் பறவைகளே. வெளிநாட்டில் இருந்து வரும் நீர்வாத்து, செங்கால் நாரை, உள்ளான் போன்றவை இந்திய நாட்டுக்கு இரை தேடி மட்டுமே வாருகின்றன, கூடு கட்டுவதில்லை. வெளிநாட்டுப் பறவைகளைப் போலவே இமயமலையின் பனிப்பகுதிகள் அருகே வசிக்கும் பட்டைத்தலை வாத்துகள், குஜராத் கட்ச் பகுதியில் இருந்து பூநாரைகள் போன்ற பறவைகள் பழவேற்காடு, கோடிக்கரை போன்ற தமிழக பகுதிகளுக்கு வருகின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகக்_காட்டுவளம்&oldid=2744999" இருந்து மீள்விக்கப்பட்டது