தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தந்தை பெரியார் அரசு மருத்துவமனை, ஈரோடு நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கும், புகைவண்டி நிலையத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையாக அமைந்துள்ள இந்த மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

பெயர்க்காரணம்[தொகு]

ஆரம்ப காலங்களில் ஈரோடு நகருக்கான அரசு மருத்துவமனை பன்னீர்செல்வம் பூங்கா அருகிலுள்ள கனி மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது. நகர வளர்ச்சிக்கேற்ப மருத்துவமனையை மேம்படுத்த வேண்டியும் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் இம்மருத்துவமனை தற்போதுள்ள இடத்திற்கு மாற்ற 1950 ஆம் ஆண்டுதிட்டமிடப்பட்டது. அரசானது மக்களின் பங்களிப்பாக ரூபாய் ஒரு இலட்சம் கட்ட வேண்டும் என்று கூறியது. அன்றைக்கு ஈரோடு நகரின் முக்கிய பிரமுகர்கள் தந்தை பெரியாரிடம் சென்று , "நாம் அனைவரும் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டி இந்த மருத்துவமனையை கொண்டு வரலாம்" என்று கூறியபோது, தந்தை பெரியார், "நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறார்கள்? அந்த ஒரு இலட்சம் ரூபாயை நானே கட்டுகிறேன்" என்று சொல்லி, அந்த பணத்தை அரசுக்கு செலுத்தியதன் விளைவாக[சான்று தேவை], இம்மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு ஈரோட்டுக்கு வந்து, "தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை" என்ற பெயருடன் தற்போது இயங்கி வருகிறது.

வசதிகள்[தொகு]

இம்மருத்துவமனையில், ஒவ்வொரு வியாதிக்கென்றும் தனித்தனி பிரிவுகள் உள்ளன. இதன் மூலம் உள்நோயாளிகளும், வெளிநோயாளிகளுமாக பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர். இங்கு 700 படுக்கைகளுடன் சுமார் 80 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை[தொகு]

பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பொருட்டு 2019ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து முதுநிலை மருத்துவ சிகிச்சைகளும் அதற்கான வசதிகளும் கிடைக்கும்படி 8 தளங்களுடன் உயர் சிறப்பு மருத்துவமனைக்கான பலநோக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மேலும் 500 படுக்கை வசதிகளும் 124 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பேருந்துகள்[தொகு]

ஈரோடு மாநகரப் பேருந்து வழித்தடத்தின் மூலம் சிறப்பான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றாம் இலக்கமுள்ள (1, 1C, K1) மருத்துவமனையை மற்ற பகுதிகளுடன் இணைக்கின்றன. பெருந்துறை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகளும், சவிதா மருத்துவமனை வழியாக பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகளும் மருத்துவமனையின் பக்கவாட்டு பகுதியில் நிறுத்தங்களை கொண்டுள்ளனன். [1]

மேலும் பார்க்க[தொகு]

அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]