தத்துவப்பிரகாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீர்காழி தத்துவப்பிரகாசர் இயற்றிய நூல் தத்துவப்பிரகாசம்.[1] இந்நூலுக்குத் தத்துவசரிதை என்ற வேறு பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்களை விரிவாகக் கூறும் நூல்களுள் இதுவும் ஒன்று.

நூலமைப்பு[தொகு]

இந்நூல் 337 விருத்தங்களை உடையது.முதல் 304 பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,பிற பாடல்கள் அறுசீர் விருத்தம். பாடல்கள் பெரும்பாலும் செம்மையான எளிய நடையுடையன.

பெயர்க் காரணம்[தொகு]

தத்துவப்பிரகாசத்தால் தத்துவம் பிரகாசிக்கும் என்ற குறிப்பு ஏற்படுகிறது. தத்துவங்கட்கும் ஆன்மாவுக்கும் சிவனுக்கும் தத்துவம் என்ற பெயர் ஆதலால் நூலின் பெயர், தத்துவப்பிரகாசம் ஆயிற்று.

நூற்சிறப்புகள்[தொகு]

சித்தாந்த சாத்திர நூல்கள் யாவும் ஞானநெறியையே விரிவாகக் கூறுகின்றன. இந்நூல் சரியை, கிரியை, யோகம்(ஓகம்) ஆகிய நெறிகளை விவரித்துக் கூறுகின்றது. இந்நூல் புறச்சமய, அகச்சமய பேதங்கள் 48 என்ற பாகுபாடும் அவற்றின் விளக்கமும் கூறுகின்றது. ஓகத்தில் கிரியை என்ற பகுதியில் 108 வகையான வகைமை இருப்புநிலைகளைப்(ஆசனங்களைப்) பற்றி விரிவாக கூறுகின்றது. 108 வகை மூச்சுப் பயிற்சிகளைப்(பிராணா யாமங்களைப்) பற்றியும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.

உரையும் பதிப்பும்[தொகு]

ஞானாவரண விளக்கம் எனும் நூல் செய்த குருஞானசம்பந்தர் இந்நூற் பாடலைச் சித்தியாரோடு ஒருங்கு வைத்துத் தொகுத்துள்ளார். இந்நூலுக்குத் தத்துவப்பிரகாசருடைய மாணக்கரே உரை செய்திருக்கிறார்.இந்நூலை வேலணை வி. கந்தப்பிள்ளை 1893 இல் பதிப்பித்துள்ளார்.[2][3]

மேலும் காண்க[தொகு]

  1. தத்துவப்பிரகாசர், "தத்துவப்பிரகாசம்"- தருமையாதீன வெளியீடு.
  2. மு.அருணாசலம், "தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு" தி பார்க்கர் வெளியீடு.

மேற்கோள்கள்[தொகு]

  1. LIST OF AUTHORS QUOTED IN THE TAMIL LEXICON-பக்கம் 5
  2. அ. சதாசிவம்பிள்ளை அவர்களின் பாவலர் சரித்திர தீபகம் - பகுதி 2 - பக்கம் 293 - தத்துவப்பிரகாசம். நூலகம்-மின்னூல் வடிவம் (noolaham.net/project/10/962/962.pdf)
  3. சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவப்பிரகாசம்&oldid=3743301" இலிருந்து மீள்விக்கப்பட்டது