தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெரிய கோயிலின் தேரோட்டத் திருவிழா நூறாண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நிலையில் அதிக ஆர்வத்தோடு மக்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டனர்.

வரலாறு[தொகு]

இதற்கு முன்னர் தஞ்சாவூரில் தேரோட்டம் நடைபெற்றது குறித்து சில விவரங்களை அறியமுடிகிறது. கி.பி.18ஆம் நூற்றாண்டு முதல் அவ்விழா தொடர்பான நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன.

18ஆம் நூற்றாண்டு[தொகு]

கி.பி.1776இல் 20,200 நபர்கள் இழுத்து தஞ்சாவூரில் தேர் உலா வந்தததாக ஆவணமொன்று தெரிவிக்கிறது. சரபோஜி மன்னர் காலத்தில் கி.பி.1813இல் நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் இழுப்பதற்காக 27,394 நபர்கள் பல தாலுக்காக்களிலிருந்தும் அழைக்கப்பட்டுள்ளனர். திருவையாறு (1900), பாபநாசம் (2800), கும்பகோணம் (3494),மாயவரம் (3484), திருவாரூர் (2920), மன்னார்குடி (4200), கீவளூர் (4500), நன்னிலம் (3200) என்ற நிலையில் தேருக்காக 26,494 நபர்களும், வாகனங்களுக்காக திருவையாற்றிலிருந்து 900 நபர்களுமாக மொத்தம் 27,394 நபர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். [1]

19ஆம் நூற்றாண்டு[தொகு]

1801இல் மன்னர் தேர் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரம் வழங்கியுள்ளார். கி.பி.1801 மற்றும் கி.பி.1811இல் குறிக்கப்பட்டுள்ள சரபோஜி மன்னரின் மோடி ஆவணங்களில் அவ்வாண்டுகளில் தேரினை இழுப்பதற்காக 30150 சக்கரங்களைச் செலவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [1] இம்மன்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு 5 பெரிய தேர்களையும், 4 ராஜவீதிகளில் தேர்முட்டிகளையும் அமைத்தார்.[2] 1801இல் தேரில் சக்கரங்களைப் புதுப்பிக்க 500 சக்கரங்கள் (அக்காலத்தின் பண மதிப்பு) செலவிடப்பட்டதாகவும், 1801, 1811ஆம் ஆண்டுகளின் தொடர்புடைய ஆவணங்கள் அந்த ஆண்டுகளில் தேர்த் திருவிழா நடத்துவதற்காக 30,150 சக்கரங்கள் செலவிடப்பட்டதாகவும் மோடி ஆவணங்களில் பதிவு காணப்படுறது. [3]

21ஆம் நூற்றாண்டு[தொகு]

பெரிய கோயிலில் தேரோட்டம் நடந்து, 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. தேர் கட்டுமானம் என்பது பல்வேறு நிலைகளைக் கடந்து நிறைவுற்றது. [4] தேர் சிற்பங்கள் இலுப்பை மரத்தைக் கொண்டு செய்யப்படுகின்றன. ஆகம சாத்திரங்களின்படி சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. [5]

தேரில் முதல் அங்கணம் அமைக்கும் பணியாக முதல் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 40 சிற்பங்களும், 2ம் கட்ட பணியில் இரண்டேகால் அடி உயரத்தில், 56 சிற்பங்களும், 3ம் கட்ட பணியில், ஒன்றரை அடி உயரத்தில், 56 சிற்பங்களும் செதுக்கப்பட்டன. இந்தத் தேரானது தரைமட்டத்தில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை, பதினாறு அரை அடி உயரத்தில் [6] தேர் அமைந்தது.

இரண்டாம் கட்ட பணி முடிவடைந்து, இறுதிக்கட்ட பணி நடந்து [7] நிறைவுற்ற நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேருக்கு அச்சு பொருத்தும் பணி நிறைவுற்றது. [8] பதினாறரை அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள இந்தத் தேரில் மூன்று நிலைகள் பொருத்தப்பட்டன.

தேரின் சிறப்புக்கூறுகள்[தொகு]

அதிக எதிர்பார்ப்புடன் காணப்பட்ட இந்தத் தேர் பல சிறப்புக்கூறுகளைக் கொண்டு அமைந்திருந்தது.

 • 30க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உழைப்பு[9]
 • 25 டன் இலுப்பை மற்றும் நாட்டுத்தேக்கு
 • மூன்று அடுக்கு
 • மூன்றடுக்கின் மேல் சிம்மாசனம் (சுவாமி பீடம்)எனப்படும் இடத்தில் உற்சவர்
 • பெரியநாயகி, விநாயகர், முருகன், துவாரபாலகர், பூமாதேவி, கல்யாணசுந்தரமூர்த்தி, அகத்தியர், சரபமூர்த்தி, கண்ணப்பநாயனார் கதை, சிவராத்திரி தோன்றிய வரலாறு, அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், வீரபத்ரன், பிட்சாடணமூர்த்தி, விருஷ்பரூடர், ஏகபாதமூர்த்தி உட்பட பல்வேறு சிற்பங்கள் [4]
 • நான்கு திசைகளிலும் குதிரை மற்றும் யாளி உருவங்கள்
 • முதல் படிநிலையில் ஒன்றரை அடியில் 67 மரச்சிற்பங்கள்
 • இரண்டாம் படிநிலையில் இரண்டேகால் அடியில், 67 சிற்பங்கள் என மொத்தம் 360 சிற்பங்கள்
 • தேரின் முன்பக்கம், ஐந்தரை அடியில் கைலாசநாதர் கைலாய காட்சி சிற்பம், பின்புறம் அதே அளவில் நந்தி மண்டபத்துடன் கூடிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிற்பம்
 • பதினாறரை அடி உயரம், பதிமூன்றரை அடி அகலம்[10]

வெள்ளோட்டம்[தொகு]

நூறாண்டுகளுக்குப் பின் 20.4.2015 அன்று தேரோட்டத்திற்கான வெள்ளோட்டம் [9] [11] [2] திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு மேல் தொடங்கியது. தேர் புறப்படும் முன்பாக, தேரில் இறைவனைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள சிம்மாசனத்திற்குச் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. [12] அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்தனர். மேலவீதி விஜயராமர் கோவில் அருகில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி வழியாக மேலவீதிக்குச் சென்றது. காலை 9.30 மணியளவில் மேலவீதியில் உள்ள நிலையைச் சென்றடைந்தது. [13]

தேர் முட்டி[தொகு]

புதிய தேர் செய்யப்படும் பணி மேலவீதியில் அமைந்துள்ள விஜயராமசாமி கோயில் எதிரில் உள்ள தேர்முட்டியில் நடைபெற்று நிறைவுற்றது.
தேரோட்டத்துக்கு பின் தேரை நிலைநிறுத்துவதற்காக மேலவீதியில் தெற்கு வீதி சந்திப்பின் அருகே உள்ள மற்றொரு பழைய தேர்முட்டி புனரமைக்கப்பட்டது.
அப்போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முந்தைய தேரின் 20 மரச்சக்கரங்கள், 15 தேர் நிறுத்திகள் ஆகியவை கிடப்பது தெரியவந்தது. [14]

தேரோட்டம்[தொகு]

தேரோட்டத்தின் முதல் நாளன்று (28.4.2015) கோயில் களை கட்ட ஆரம்பித்தது. முளைப்பாரி ஊர்வலமாக நடராஜர் மண்டபத்திலிருந்து மேள வாத்தியங்களுடன் கிளம்பி ராஜராஜன் வாயில்,கேரளாந்தகன் வாயில் வழியாக கோயில் வெளியே வந்தது. பக்தர்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு சென்றனர். 29.4.2015 அன்று தேரோட்டத் திருவிழா [10] சிறப்பாக நடைபெற்றது. [15] தேரோட்ட நாளன்று தேர் காலை 5.15 மணிவாக்கில் பெரிய கோயிலிலிருந்து விநாயகர், சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு, சோழன் சிலை, சிவகங்கைப் பூங்கா வழியாக மண்டபம் வந்தடைந்தனர். கிளம்பத் தயாராக இருந்த தேரின் சிம்மாசனத்தில் இறைவனும் இறைவியும் வைக்கப்பட்டனர். காலை 6.15 மணிவாக்கில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் கிளம்பியது. அலங்கரிக்கப்பட்ட யானை அழகாக நடந்து வர விநாயகர், சுப்பிரமணியர் ரதங்கள் முன்னே செல்ல தியாகராஜர் - கமலாம்பாள் எழுந்தருளிய தேர் அசைந்து அசைந்து சென்றது.தேரின் முன்னர் தப்பாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை கலைஞர்கள் சிறப்பாக நிகழ்த்திக்கொண்டு வந்தனர். ஓதுவார்கள் தேவாரம் ஓத, மேள வாத்தியங்கள் இசைக்க தேர் அழகாக பவனி வந்தது. தேரை நீலோத்தம்மன், சண்டீகேசுவரர் ரதங்கள் பின்தொடர்ந்தன. கீழ்க்கண்ட இடங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தேர் நிறுத்தப்பட்டது. அவ்விடங்களில் பக்தர்கள் அளித்த தேங்காய்கள் உடைக்கப்பட்டன. தீபாராதனை காட்டப்பட்டது. [16]

 • மேல ராஜ வீதி : கொங்கணேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில்
 • வடக்கு ராஜ வீதி : ராணிவாய்க்கால் சந்து எதிரேயுள்ள பிள்ளையார் கோயில், காந்தி சிலை அருகேயுள்ள ரத்தினபுரீஸ்வரர் கோயில்
 • கீழ ராஜ வீதி : மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கொடிமரத்துமூலை, அரண்மனை எதிரே உள்ள விட்டோபா கோயில், தமிழ்ப்பல்கலைக்கழக அலுவலகம் அருகேயுள்ள மணிகர்ணிகேஸ்வரர் கோயில், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகேயுள்ள வரதராஜப்பெருமாள் கோயில்
 • தெற்கு ராஜ வீதி : கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில், இந்தியன் வங்கி அருகேயுள்ள காசி விசுவநாதர் கோயில், தங்கசாரதா அருகில் உள்ள காளியம்மன் கோயில்

மேற்கண்ட இடங்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெற்றன. [17]நான்கு வீதிகளையும் சுற்றிய பின் தேர் மதியம் 1.45 மணியளவில் தேர்நிலையை வந்தடைந்தது.[18]

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 எஸ்.பாபாஜி ராஜா பான்சலே சத்ரபதி, மாமன்னர் சரபோஜியின் மகத்தான கொடை, தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
 2. 2.0 2.1 231 பொம்மைகள், 245 மணிகளுடன் 40 டன் எடை கொண்ட பெரியகோவில் தேர் 20–ந்தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது, தினத்தந்தி, 17.4.2015
 3. நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம், தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்பு மலர், விளம்பரச் சிறப்பிதழ், தினமணி, 29.4.2015
 4. 4.0 4.1 தஞ்சை கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் புதிய தேர், தினமலர், ஏப்ரல் 6, 2013
 5. Sculpture works apace for Big Temple car, The Hindu, October 30, 2013
 6. தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர் அமைப்பு! தினமலர், டிசம்பர் 13, 2013
 7. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்காக உருவாகும் பிரமாண்டமான தேர் : இரண்டு மாதத்தில் வெள்ளோட்டம் விட ஏற்பாடு தினமலர், ஜுலை 27, 2014
 8. கோயில் தேரில் அச்சு பொருத்தம், தினமணி, ஆகஸ்டு 23, 2014
 9. 9.0 9.1 Big temple car set for a comeback,The Hindu, 9.4.2015
 10. 10.0 10.1 100 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை பெரியகோயிலில் ஏப். 29-ல் தேரோட்டம், 20இல் வெள்ளோட்டம், தினமணி,7.4.2015
 11. 100 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் இன்று வெள்ளோட்டம், தி இந்து, 20.4.2015
 12. Trial run of Big Temple car, Rolls; out after 100 years; maiden run on April 29, The Hindu, 21.4.2015
 13. தஞ்சை பெருவுடையார் கோயில்புதிய தேர் வெள்ளோட்டம், தினமணி, 21.4.2015
 14. பெரிய கோயிலில் 29ல் தேரோட்டம், 100ஆண்டு பழமையான சக்கரங்கள் கண்டுபிடிப்பு, தினகரன், 12.4.2015
 15. தஞ்சை பெரிய கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!, தினமலர் கோயில்கள், 29.4.2015
 16. ஏப்ரல் 29இல் தஞ்சைப் பெருவுடையார் கோயில் தேரோட்டம், சுவாமி தரிசன நிறுத்துமிடங்கள் அறிவிப்பு, தினமணி,25.4.2015
 17. Big temple chariot festival held after 100 years, The Hindu, 30.4.2015
 18. தஞ்சாவூரில் நூறாண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்தனர், தினமணி, 30.4.2015

மேலும் பார்க்க[தொகு]

வெள்ளோட்டம் படத்தொகுப்பு[தொகு]

தேரோட்ட முதல் நாள்[தொகு]

தேரோட்டம் படத்தொகுப்பு[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thanjavur Temple Festival
என்பதின் ஊடகங்கள் உள்ளன.