உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் வீணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் வீணை தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உருவாக்கம் பெறும் வீணையாகும். தஞ்சாவூர் கலைத்தட்டைப் போலவே தஞ்சாவூர் வீணையும் தஞ்சாவூரின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக உள்ளது.

வரலாறு[தொகு]

17ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட இரகுநாத மன்னர் காலத்தில் முதன்முதலில் இவ்வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாத வீணை என்றும் பெயர்பெற்றது.

இருவகை வீணை[தொகு]

தஞ்சாவூரில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று, ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளியின் தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் ’ஏகாண்ட வீணை’யாகும். மற்றொன்று குடம், தண்டி, யாளியின் தலை ஆகியவற்றைத் தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் ’ஒட்டு வீணை’ அல்லது ’சாதா வீணை’யாகும்.[1]

உருவாக்கம்[தொகு]

தஞ்சாவூர் வீணை பலா, வாகை மரங்களில் செய்யப்படுகிறது. எனினும் பலா மரமே, வீணை செய்யும்போது செதுக்குவதற்கும், இழைப்பதற்கும் எளிதானதாகும். பண்ருட்டியிலிருந்து பலாமரங்கள் வாங்கப்படுகின்றன. பண்ருட்டியின் மண் வளம் பலாமரம் வளர ஏற்றதாக உள்ளதால் அங்கு அதிகமாக பலா வளர்க்கப்படுகிறது. அருகிலுள்ள கிராமங்களில் பலா மரம் கிடைத்தாலும் வாங்கி வீணை செய்கின்றார்கள். மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. கடினமான வேலையாகிய குடம், தண்டி, யாளித் தலை செய்வது போன்ற பணிகளை ஆண்கள் மேற்கொள்கின்றனர். சுமார் 15 வருடங்களுக்கு முன் மான் கொம்பினை இழைத்து குடத்திலும் தண்டியிலும் ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்துவந்துள்ளனர். தற்போது நவீன தொழில் நுணுக்க வேலைப்பாடுகள் செய்வதால் பிளாஸ்டிக் அட்டையை ஒட்டி பூ வேலைப்பாடுகள் செய்து வருகின்றனர்.[1]

நம்பிக்கை[தொகு]

நல்ல நேரம் பார்த்து குல தெய்வமான காமாட்சியம்மனை வணங்கி வீணை செய்யும் பணி ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் குறைகள் இல்லாமல் நல்ல முறையில் வீணை செய்யமுடியும் என வீணையைத் தயாரிப்பவர்கள் நம்புகின்றனர்.[1] பல்வேறு சிறப்புகள் நிறைந்த வீணை தயாரிக்கும் தொழிலில் தற்போது ஈடுபட்டுள்ளவர்களின் வாரிசுகள்கூட ஈடுபடவில்லை என்பதால், தஞ்சாவூருக்குப் பெருமை சேர்க்கும் இத்தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனினும் வேறு யாராவது இத்தொழிலைத் தொடர்ந்து கொண்டு செல்ல வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையும் உள்ளது.[2]

புவிசார் குறியீடு[தொகு]

மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை தஞ்சாவூரில் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 முனைவர் கா.ஆ.செல்வராஜ், தமிழர் கைவினைப்பொருட்கள் (தஞ்சை வட்டாரம்), நாட்டுப்புற ஆய்வுகள், அகரம், தஞ்சாவூர், நவம்பர் 2006
  2. உலகிலுள்ள வீணைகளின் சொந்த ஊர் தஞ்சை, தினமணி, 31. ஆகத்து 2014
  3. "தஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு சான்று கிடைத்தது". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 25 மே 2014. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_வீணை&oldid=3556980" இலிருந்து மீள்விக்கப்பட்டது