தஞ்சாவூர் மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
தஞ்சாவூர் மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் மானம்புச்சாவடியில் வெங்கடேசப்பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
அமைப்பு
[தொகு]இக்கோயில் நுழைவாயில் கோபுரம், கருவறை விமானம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையின் வாயிலில் வலப்புறம் ஜெயனும், இடது புறம் விஜயனும் உள்ளனர்.
முன் மண்டபத்தில் வலப்புறம் ஜெயவீர ஆஞ்சனேயர் உள்ளார். இடது புறம் ஸ்ரீபாதம் உள்ளது. நடுவில் பலி பீடம் காணப்படுகிறது. திருச்சுற்றின் வலப்புறத்தில் அலமேலு மங்கைத்தாயார் சன்னதியும், இடப்புறத்தில் ஆண்டாள் சன்னதியும் உள்ளன. திருச்சுற்றில் ஏகாசதி மண்டபம், திருக்கல்யாண மாலை மாற்றும் மண்டபம் ஸ்ரீனிவாச மண்டபம் ஆகியவையும், சக்கரத்தாழ்வார், நிகமாந்த தேசிகர், ராமானுஜர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன.
மூலவர்
[தொகு]கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி, அலமேலு மங்கையுடன் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உள்ளார்.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலில் 8 சூன் 1887 (விய ஆண்டு ஆனி மாதம் 25ஆம் நாள்), 24 ஏப்ரல் 1928 (விபவ ஆண்டு வைகாசி மாதம் 11ஆம் நாள்), 21 ஆகஸ்டு 1947 (சர்வஜித்து ஆண்டு ஆவணி மாதம் 5ஆம் நாள்), 14 செப்டம்பர் 1978 (காளயுக்தி ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் நாள்), 9 மே 1996 (தாது ஆண்டு சித்திரை மாதம் 27ஆம் நாள்), 23 மார்ச் 2011 (விக்ருதி ஆண்டு பங்குனி மாதம் 9 ஆம் நாள்) ஆகிய நாள்களில் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் உள்ளன.
திருவிழாக்கள்
[தொகு]இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் திருவிழா சிறப்பானதாகும். அவ்விழாவின்போது காலை 4.30 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை 6.30 மணிக்கு பெருமாள் பாகவத கோஷ்டியுடன் திருவீதியுலாவும் நடைபெறும். தொடர்ந்து கருடசேவை நடக்கிறது. அதற்கடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. திருக்கல்யாணம், வசந்த மகோற்சவம், ஹனுமந்த வாகன புறப்பாடு, குதிரை வாகன பெருமாள் புறப்பாடு போன்றவற்றுடன் தொடர்ந்து நடைபெறுகின்ற திருவிழா விடையாற்றியுடன் நிறைவு பெறுகிறது. [1]
நவநீத சேவை
[தொகு]நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [2] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.
மற்றொரு கோயில்
[தொகு]இதே பெயரில் தஞ்சாவூரில் மற்றொரு கோயில் நாலுகால் மண்டபத்தில் அமைந்துள்ளது. அக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் ஒன்றாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மகர்நோன்பு சாவடி வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை திருவிழா, தினகரன், 28 ஏப்ரல் 2017[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை, மாலை மலர், 30 மே 2016[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997