உள்ளடக்கத்துக்குச் செல்

தசை நடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசை நடுக்கம் (Tic) அல்லது சொடுக்கு அல்லது தசை இழை அனிச்சை இயக்கம் என்பது குறிப்பிட்ட சில தசை இழைகளில் திடீரென தன்னிச்சையாக, ஒரே மாதிரியாக, அனேகமாக அடுக்காகத் தோன்றும், சீரற்ற, கட்டுப்படுத்த கடினமான தசை நடுக்கம் அல்லது துடிப்பு ஆகும்[1][2]. வயிற்றிலோ, அல்லது கால்விரல் நுனிகளிலோ, கண் இமைகளிலோ இவ்வகையான இயக்கத் துடிப்பு ஏற்படுவதுண்டு. சில சமயம் தொண்டைத் தசைகளில் ஏற்படும் இவ்வகைத் துடிப்பில் குரலைச் சரிப்படுத்திக் கொள்ளவேண்டி நேருவதும் உண்டு. இவ்வகையான பல தசை நடுக்கம் வெளியிலிருந்து பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவதில்லை.

இவ்வாறான தசை நடுக்கமானது மன அழுத்தம், களைப்பு, சலிப்பு, மேலும் மனக்கலக்கம், தவிப்பு, பரபரப்பு, எதிர்பார்ப்பு போன்ற உணர்ச்சிகள் அதிகரித்த நிலைகளில் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த தசை நடுக்கம் சில சமயம் ஆசுவாசமாக தொலைக்காட்சி பார்த்தல், கணினியைப் பயன்படுத்தல் போன்ற நேரங்களில் அதிகரிக்கவும், குறிப்பிட்ட ஒரு செயலை அதிக கவனமெடுத்து செய்ய ஆரம்பிக்கும்போது குறையவும் தொடங்கலாம்.[3][4].

தசை நடுக்கம் ஆரம்பிக்கு முன்னரே, கொட்டாவி, தும்மல், நமைச்சல், இமைத்தல் போன்ற சில தூண்டுதல்களை நபர்கள் உணரத் தலைப்படுவர்[5]. இதனால் ஒரு இறுக்கமான மனநிலை [6] ஏற்படுவதுபோலவும், அந்த இறுக்க நிலையைக் குறைப்பதற்காகவே இந்த துடிப்பு போன்ற அசைவு, தெரிந்தே நிகழ்வதாகவும், நிகழ வேண்டிய தேவை இருப்பதாகவும்".[7] அவர்கள் உணர்கின்றார்கள். தொண்டைக்குள் எதுவோ இருப்பது போன்ற தூண்டுதல் ஏற்படும்போது, குரலைச் சரிப்படுத்திக் கொள்வது போன்ற ஒலியெழுப்பும் அசைவும், தோளில் அல்லது கண்ணில் எதுவோ ஒரு அசெளகரியமாக உணரும்போது, தோளை உயர்த்தல் அல்லது இமைத்தல் போன்ற அசைவுகளும் உருவாகின்றது. இப்படியான அனுபவத்தை அவர்கள் உணர்வதனால், இந்த தசை நடுக்கத்தை முற்று முழுதாக தன்னிச்சையானது என்று சொல்ல முடியாமல் உள்ளது. அதனால் இதனை பகுதியான தன்விருப்ப செயற்பாடு என்றும் விளக்கலாம்[8]. இவ்வகையான தசை நடுக்கத்தை உணர்பவர்கள், இது தவிர்க்க முடியாததாயினும், ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியது என்று உணர்வதனால், ஏனைய அசைவு ஒழுங்கின்மை/சீர்குலைவு நிலைகளிலிருந்து இதனை வேறுபடுத்த முடிகின்றது;[9]. அதாவது தவிர்க்க முடியாத ஒரு செயலானது வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக உணர்கின்றனர்[8]. இருப்பினும் சிலருக்கு தசை நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னான இந்த உணர்வு ஏற்படுவதில்லை. பொதுவாக குழந்தைகளில் வயது வந்தவர்களைவிட இந்த உணரும் தன்மை குறைவாகவே உள்ளது. வளரும்போது இதனை உணரும் தன்மையும் அதிகரிக்கும்.[8]

இந்த தசை நடுக்கமானது மிகவும் சிறிய அளவிலிருந்து, மிகவும் தீவிரமான நிலைவரை காணப்படலாம்.

வகையீடு

[தொகு]

தசை நடுக்கங்கள் 1) இலகுவானது, 2) சிக்கலானது என்றும், 1) இயக்கத்துடிப்பு 2) ஒலித்துடிப்பு என்றும் பிரிக்கப்படுகின்றன.
இயக்கத்துடிப்பு என்பது தனியான தசைக் கூட்டத்தில் ஏற்படும் அசைவினால் உண்டாகும் துடிப்பாகும். ஒலித்துடிப்பு என்பது மூக்கு, வாய், தொண்டையில் ஏற்படும் வளி அசைவினால் தோன்றும் தன்னிச்சையான ஒலிகளை ஏற்படுத்தும் அசைவாகும். பொதுவாக இலகுவான தசை நடுக்கம் இல்லாமல் சிக்கலான தசை நடுக்கம் மிக அரிதாகவே தோன்றும். சிக்கலான தசை நடுக்கத்தை, ஒரு நிர்ப்பந்தத்தில் கத்துதல் அல்லது கூச்சலிடுதல் போன்ற, தன் விருப்பமின்றி ஒரு நிர்ப்பந்தத்துக்குட்பட்டு செய்யும் செயல்களிலிருந்து வேறுபடுத்துவது கடினம் என்று கருதப்படுகின்றது[10].

இலகுவான தசை இழை அனிச்சை இயக்கம்

[தொகு]

இலகுவான அனிச்சை இயக்கத் துடிப்பு

[தொகு]

குறிப்பாக குறிப்பிட்ட தசையில் திடீரெனத் தோன்றும், குறுகிய, கட்டுப்படுத்த கடினமான கண் சிமிட்டல், தலையாட்டுதல் (தலையை இழுத்தல் போன்ற அசைவு), தோளை உயர்த்துதல் போன்ற அனிச்சையான, அர்த்தமற்ற அல்லது அவசியமற்ற கை கால் அசைவுகள் ஆகும்[11].

இலகுவான அனிச்சை ஒலிப்பு துடிப்பு

[தொகு]

இவை குரலைச் சரிப்படுத்தல் போன்ற, உறுமுதல் அல்லது கத்துதல் போன்ற, நுகர்தல் அல்லது மோப்பம் பிடித்தல் போன்ற சத்தம் அல்லது ஒலிகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட இடத்திலுள்ள தசைகளில் ஏற்படும் துடிப்பாகும்[11].

சிக்கலான தசை இழை அனிச்சை இயக்கம்

[தொகு]

சிக்கலான அனிச்சை இயக்கத் துடிப்பு

[தொகு]

இவை ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கக் கூடிய, ஓரளவு நீண்ட நேரத்துக்குரிய அசைவாகும். இந்த அசைவானது தனி ஒரு தசையில் அல்லாமல் சில தசைகளில் ஒரே நேரத்தில் ஏற்படும் ஓர் ஒருங்கிணைந்த அசைவு போன்று தோன்றும்[11]. உதாரணமாக நுணுக்கமாக தனிவிதமாக பொருட்களை அல்லது நபர்களைத் தொடுவது, துணிகளை இழுப்பது போன்றவை.

சிக்கலான அனிச்சை ஒலிப்பு துடிப்பு

[தொகு]

குறிப்பாக வேறொருவர் சொன்ன சொல்லை திரும்ப கூறுவது (echolalila), தானே முதலில் சொன்ன சொற்களை திருப்பியும் சொல்வது (palilalia), வாசித்த சொற்களை மீண்டும் சொல்வது (lexilalia), சமூகத்தால் விலக்கப்பட்ட சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் கொண்ட தொடை நயச்சொல், புலம்பல், நையாண்டி, மற்றும் இன்னும் பல அனிச்சை ஒலிப்புக்களைக் சொல்வது (corolalila) போன்றவை இவ்வகையான தசை துடிப்புகளால் ஏற்படுவனவாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Leckman JF, Bloch MH, King RA, Scahill L. "Phenomenology of tics and natural history of tic disorders". Adv Neurol. 2006;99:1–16. PubMed
  2. American Psychiatric Association (2000). DSM-IV-TR: Tourette's Disorder. Diagnostic and Statistical Manual of Mental Disorders, 4th ed., text revision (DSM-IV-TR), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89042-025-4. Available at BehaveNet.com Retrieved on August 10, 2009.
  3. National Institutes of Health (NIH). Tourette Syndrome Fact Sheet. Retrieved on March 23, 2005.
  4. Packer, L. Tourette Syndrome "Plus". Retrieved on February 12, 2006.
  5. Cohen AJ, Leckman JF. Sensory phenomena associated with Gilles de la Tourette's syndrome. J Clin Psychiatry. 1992 Sep;53(9):319–23. PubMed
  6. Bliss J. Sensory experiences of Gilles de la Tourette syndrome. Arch Gen Psychiatry. 1980 Dec;37(12):1343–47. PubMed
  7. Kwak C, Dat Vuong K, Jankovic J. "Premonitory sensory phenomenon in Tourette's syndrome". Mov Disord. 2003 Dec;18(12):1530–33. PubMed
  8. 8.0 8.1 8.2 "The Tourette Syndrome Classification Study Group. Definitions and classification of tic disorders". Arch Neurol. 1993 Oct;50(10):1013–16. PubMed Full text, archived April 26, 2006.
  9. Dure LS 4th, DeWolfe J. Treatment of tics. Adv Neurol. 2006;99:191-96. PubMed
  10. Scamvougeras, Anton. "Challenging Phenomenology in Tourette Syndrome and Obsessive–Compulsive Disorder: The Benefits of Reductionism". Canadian Psychiatric Association (February 2002). Retrieved on June 5, 2007.
  11. 11.0 11.1 11.2 Singer HS. "Tourette's syndrome: from behaviour to biology". Lancet Neurol. 2005 Mar; 4(3):149–59. எஆசு:10.1016/S1474-4422(05)01012-4 PubMed
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசை_நடுக்கம்&oldid=3417059" இலிருந்து மீள்விக்கப்பட்டது