உள்ளடக்கத்துக்குச் செல்

தசரத் மான்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தசரத் மான்ஜி (Dashrath Manjhi 1934[1]- 2007[2]): இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர். மலை மனிதன்[3] என்றழைக்கப்படுபவர். தனி ஒரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர்.

பின்னணி

[தொகு]

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.[1] Man.[3] இச்சிற்றூர் மலையின் ஒரு பக்கத்தில் குடிசைகளில் வாழும் மக்களைக் கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில்,மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.

தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனி ஒரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார். இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை உருவாக்கினார்.[4] அதுவரை 80 கி. மீ மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் 13 கி. மீ தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.

தனது மனைவி மீதுள்ள காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறிய மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு " அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது. ஆனால் அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.[5]

இறுதிக் காலம்

[தொகு]

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர்மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. ஆனால் நோயின் தீவரம் காரணமாக 2007, ஆகஸ்ட் 18 அன்று மான்ஜ்ஜியின் உயிர் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[6] மான்ஜி அமைத்த பாதை இன்றுவரை செப்பனிடப்படாமலேயே உள்ளது.

திரைப்படம்

[தொகு]

தசரத் மான்ஜியின் கதை திரைப்படமாகத் தயாரிக்கப்படுவதாகவும் இப்படத்தினை மானிஷ் ஜா என்ற இயக்குநர் இயக்க, மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் மான்ஜியின் பாத்திரத்தில் நடிப்பதாகவும் உதான் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் சிங் இப்படத்தினைத் தயாரிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.[7]

உசாத்துணை

[தொகு]

புதிய தலைமுறை, சமூக விழிப்புணர்வு வார இதழ், 09 ஆகஸ்ட் 2010 பக்கம்18-20

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-31. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "CM visits ailing Dashrath Manjhi". The Times Of India. July 23, 2007. http://timesofindia.indiatimes.com/articleshow/2225477.cms. 
  5. புதிய தலைமுறை, சமூக விழிப்புணர்வு வார இதழ், 09 ஆகஸ்ட் 2010 பக்கம்18-20
  6. http://www.dnaindia.com/report.asp?newsid=1116306
  7. "One film at a time: Sanjay Singh". The Times of India. Jul 19, 2010. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/One-film-at-a-time-Sanjay-Singh/articleshow/6183507.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசரத்_மான்ஜி&oldid=3556960" இலிருந்து மீள்விக்கப்பட்டது