தக்கர் பப்பா
தக்கர் பப்பா | |
---|---|
பிறப்பு | அமிர்தலால் விட்டல்தாசு தக்கர் 29 நவம்பர் 1869 பவநகர், குசராத்து |
இறப்பு | 20 சனவரி 1951 | (அகவை 81)
தேசியம் | இந்தியன் |
கல்வி | கட்டிட பொறியாளர் உரிமம் (தற்போதைய கட்டிடப் பொறியாளர் பட்டத்திற்கு இணையானது) |
பணி | சமூகச் சேவகர் |
அமிர்தலால் விட்டல்தாசு தக்கர் (Amritlal Vithaldas Thakkar) (29 நவம்பர் 1869 - 20 சனவரி 1951) தக்கர் பப்பா என பிரபலமாக அழைக்கப்படும் இவர் இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய ஒரு இந்தியச் சமூக சேவகர் ஆவார். 1905 ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலே அவர்களால் நிறுவப்பட்ட இந்திய சேவகர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். 1922 இல், பில் சேவா மண்டலை நிறுவினார். பின்னர், 1932 இல் மகாத்மா காந்தி நிறுவிய அரிசன சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரானார். பாரதிய ஆதிம்ஜதி சேவை சங்கம் இவரது முயற்சியின் பேரில் அக்டோபர் 24, 1948 அன்று நிறுவப்பட்டது. [1] இந்திய அரசியலமைப்பு செயல்பாட்டில் இருந்தபோது, இந்தியாவின் தொலைதூர இடங்களுக்கும், மிகவும் கடினமான பகுதிகளுக்கும் சென்று பழங்குடியினர், அரிசனர் ஆகியவர்களின் நிலைமை குறித்து விசாரணை நடத்தினார். அரசியலமைப்பின் செயல்பாட்டில் இவர் மதிப்புமிக்க உள்ளீடுகளைச் சேர்த்தார் . மகாத்மா காந்தி இவரை 'பப்பா' என்று அழைப்பார்.
இவர் அசாம், கிராமப்புற வங்காளம், ஒடிசாவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குசராத்தில் பில் பகுதிகள், சௌராட்டிராவின் அரிசனப் பகுதிகள், மகாராட்டிராவின் மகர் பகுதிகள், சென்னையில் தலித்துகள், சோட்டா நாக்பூரின் மேட்டுநிலங்கள், தார்பார்க்கர் மாவட்டத்தின் பாலைவனம், இமயமலையின் அடிவாரங்கள், திருவிதாங்கூரின் கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களுக்கு பழங்குடி மற்றும் அரிசன மக்களின் மேம்பாட்டு நோக்கத்துடன் சென்றுள்ளார். இவர் எப்போதும் மூன்றாம் வகுப்பு இரயில்வேயில் பயணிப்பார். இவர் தனது வாழ்க்கையின் 35 ஆண்டுகளை பழங்குடி மற்றும் அரிசன மக்களின் சேவையில் கழித்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இந்தியாவின் குசராத் மாநில சௌராட்டிரா பகுதியில் பவநகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1869 நவம்பர் 29 அன்று இவர் பிறந்தார். இவரது தந்தை விட்டல் தாசு தக்கர் இவருக்கு அம்ரித லால் என்று பெயரிட்டார். இவர் தனது தந்தையிடமிருந்து மனிதநேயத்திற்கான நன்மை மற்றும் சேவைக்காக தனது முதல் படிப்பைப் பெற்றார். இவர் 1890 இல் புனேவிலிருந்து தனது கட்டிடப் பொறியாளர் உரிமத்தைப் பெற்றார். இவர் போர்பந்தரில் ஒரு பொறியாளராக பணிபுரிந்தார். சில காலம் சாங்குலி மாவட்டத்தின் தலைமை பொறியாளராகவும் பணியாற்றினார். பின்னர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் முதல் ரயில் பாதையை அமைப்பதில் பணியாற்றுவதற்காகச் சென்றார். பின்னர் மும்பை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றினார். மும்பை நகரம் முழுவதுமுள்ள தூய்மைப்பணியாளர்களின் பரிதாப நிலைமைகளை முதன்முறையாக பார்த்தார். அவர்கள் வாழ்ந்துவரும் மோசமான காலனிகளைக் கண்டு இவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த மக்களுக்கு உதவ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க உறுதியான தீர்மானத்தை மேற்கொண்டார். பின்னர் சமூகப் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். இவர் இந்திய சேவகர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். மேலும், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை ஆதரித்தார்.
மரியாதை
[தொகு]இவரது நினைவாக இந்திய அரசு 1969 இல் ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. நன்கு அறியப்பட்ட ஒரு பகுதியான மும்பையில் உள்ள பாப்பா காலனிக்கு இவரது பெயரிடப்பட்டது. ஏழை, பாதிக்கப்பட்ட மற்றும் முற்றிலும் பின்தங்கிய பழங்குடி சமூகத்திற்கு அர்ப்பணிப்பு சேவைகளுக்காக மத்தியப் பிரதேச மாநில அரசு இவரது நினைவாக ஒரு விருதை நிறுவியுள்ளது. மகாராட்டிரா அரசு 2007 ஆம் ஆண்டில் தக்கர் பாப்பா ஆதிவாசி வஸ்தி சுதாரனா என்ற ஆதிவாசி கிராமங்களையும் காலனிகளையும் மேம்படுத்தும் திட்டத்தை வகுத்துள்ளது.
பரவலர் பண்பாட்டில்
[தொகு]தமிழ்நாட்டில், தக்கர் பிரபலமாக "தக்கர் பப்பா" என்பதின் தமிழ் பதிப்பான "அப்பா தக்கர்" என அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் அறிவுள்ளவராகவும், பெரும்பாலும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிப்பதால், சென்னைத் தமிழில்"அப்பா தக்கர்" (எல்லாம் தெரிந்தவர்) எனற சொல்லாடல் ஏற்பட்டது. [2] [3] இந்தச் சொல் 2010 ஆம் ஆண்டுவெளியான தமிழ் திரைப்படமான பாஸ் என்கிற பாஸ்கரனில் அதன் பயன்பாட்டின் மூலம் பிரபலத்தைப் பெற்றது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bharatiya Adimjati Sevak Sangh (BAJSS) – Introduction". Bharatiya Adimjati Sevak Sangh website. பார்க்கப்பட்ட நாள் 30 December 2009.
- ↑ Gowri, Madan (15 November 2017). "Who is Appatakkar". YouTube. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
- ↑ "'Tamil is semma gethu language machi'". 7 February 2016. https://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-is-semma-gethu-language-machi/articleshow/50884605.cms.
- ↑ Balachandran, Logesh. "Therikavidalama to Senjiduven: Quirky K'wood dialogues". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Therikavidalama-to-Senjiduven-Quirky-Kwood-dialogues/articleshow/49337190.cms.
மேலும் படிக்க
[தொகு]- Hari, Viyogi. Thakkar Bapa (in Gujarati), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India.