உள்ளடக்கத்துக்குச் செல்

டெண்டு கொட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெண்டு கொட்டாய் அல்லது டூரிங் டாக்கீஸ் என்பது திரையரங்குகளில் ஒரு வகையாகும். இந்த வகையான திரையரங்குகள் தமிழ்நாட்டின் நகரங்கள், சிறுநகரங்களில் ஓரிரு தசப்தங்கள் முன்புவரை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்தன. செயற்கைக்கோள் தொலைக்காட்சி, கம்பிவடத் தொலைக்காட்சி போன்றவற்றின் வருகைக்குப் பிறகு பழைய படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் வசதி பெருகிறது. இதனால் பார்வையாளர்களிடையே டெண்டு கொட்டாய்களுக்கு வரவேற்பு குறைந்ததன. இதனால் இவை படிப்படியாக இவை முடப்பட்டன. இவை தற்போது சில ஊர்களில் பெயரளவுக்கு மட்டுமே டெண்டு கொட்டாய்கள் உள்ளன.

வரலாறு

[தொகு]

டெண்டு கொட்டாயே தமிழ்நாட்டின் முதல் திரையரங்கு எனப்படுகிறது. திரைப்படம் என்ற கலை தமிழ்நாட்டுக்கு ஊமைப் படமாக வந்தபோது, திரைப்பட புரொஜக்டர் எனப்படும் ஒளிப்படக்காட்டியை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று தற்காலிகமாக கூடாரம் அமைத்து அதில் திரையிடுவந்தனர். அவ்வாறு திரையிட்டுவந்த பிரான்சைச் சேர்ந்த டுபாண்ட் என்பவர் இங்கையிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒளிப்படக்காட்டியை சாமிக்கண்ணு வின்சென்ட்ட்டுக்கு விற்றுவிட்டார். இது 1905 வாக்கில் நடந்தது. சாமிகண்ணு திருச்சிராப்பள்ளியில் தற்காலிக கூடாரம் அமைத்து Life of Jesus என்ற படத்தைத் திரையிட்டார்.[1] அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய நகரங்களில் கூடாரம் அமைத்து திரைப்படத்தை திரையிட்டார். 1909 ஆம் ஆண்டு சென்னை பாரிமுனையில் திரைப்படங்களைத் திரையிட ஒரு டெண்டு கொட்டாயை அமைத்தார். தென்னிந்தியாவில் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் என்ற திரையரங்கை கோயமுத்தூரில் உருவாக்கி படங்களை திரையிடத் தொடங்கினார். இந்த வகையில் தென்னிந்தியாவில் டெண்டு கொட்டாயின் முன்னோடியாக சாமிகண்ணு அறியப்படுகிறார்.[1] இந்த கொட்டாய்களுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே அரசாங்கத்தால் உரிமம் வழங்கப்படும். உரிமம் முடிந்த பிறகு சில மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும்.[1] கீற்றுக் கொட்டகைகளில் தீவிபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர். அதன்பிறகு தீபிடிக்க வாய்ப்புள்ள ஓலைக் கீற்றுகள் கொண்டு டெண்டு கொட்டாய் அமைக்க கட்டுப்பாடுகள் வந்தன. தீ பிடிக்காத தகரம், தார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு கொட்டகைகள் அமைப்பது கட்டாயமாக்கபட்டது. இந்த புதிய கட்டமைப்புக்கு கூடுதல் காலம் உரிமம் வழங்கப்பட்டது.

அமைப்பு

[தொகு]

பொதுவாக கீற்று அல்லது தார் அட்டையினாலான கூரையைக் கொண்டதாக டெண்டு கொட்டாய் அமைக்கபட்டிருக்கும். இவை பொதுவாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் அமைந்திருக்கும். இந்த அரங்குகளில் பெரும்பாலும் பழை திரைப்படங்களும், வயது வந்தோருக்கான படங்களுமே திரையிடப்படும். வார நாட்களில் மாலை வேளையில் முதல் ஆட்டமும், இரண்டாம் ஆட்டமும் ஒளிபரப்பப்படும். வார இறுதிகளில் நண்பகல் காட்சி ஒளிபரப்பப்படும்.

இத்தகைய திரையரங்குகள் பலவற்றில் ஒரே ஒரு ஒளிப்படக்காட்டி மட்டுமே இருக்கும். படத்தில் இரண்டு அல்லது மூன்று ரீல்களுக்கு இடையில் ஒரு சிறு அடைவெளி விடப்படும். ஒளிப்படக்காட்டியில் அடுத்தடுத்த ரீல்களை மாட்டிய பிறகு படம் ஓடும்.[2] திரையின் முன்பகுதி மணல் தரையாக இருக்கும். அதில் தரையில் அமர்ந்து படத்தை பார்க்கவேண்டும்.[2] அதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். அதற்கு அடுத்து நீண்ட பலகைகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் அமர்ந்து பார்க்கலாம் இதற்கு சற்று கூடுதலான கட்டணம் உண்டு. படம் துவங்கப் போகும்போது திரையரங்கன் வெளியே உள்ள ஒலிபெருக்கியில் முருகன் பாடலை ஒலிபரப்புவார்கள்.[2] அந்தப் பாடலைக் கேட்டால் படம் போடப்போகிறார்கள் என்று இரசிகர்கள் விரைவாகச் செல்வார்கள்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெண்டு_கொட்டாய்&oldid=4331708" இலிருந்து மீள்விக்கப்பட்டது