உள்ளடக்கத்துக்குச் செல்

டி. பி. எஸ். ஜெயராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. பி. எஸ். ஜெயராஜ்
D. B. S. Jeyaraj
பிறப்புடேவிட் புவெல் ஜெயராஜ்
(1954-05-21)மே 21, 1954
கொழும்பு, இலங்கை
இறப்புமே 17, 2026(2026-05-17) (அகவை 71)
இசுக்கார்பரோ, கனடா
தேசியம்கனடா
இனம்இலங்கைத் தமிழர்
பணிஊடகவியலாளர்
சமயம்கிறித்தவர்

டி. பி. எஸ். ஜெயராஜ் (David Buell Sabapathy Jeyaraj, மே 21, 1954 – மே 17, 2026) இலங்கைத் தமிழ் ஆங்கில ஊடகவியலாளர் ஆவார். பல தசாப்தங்களாக இலங்கையின் இன அரசியல், மோதல், சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான செய்தியறிக்கைகளுக்காகவும் பகுப்பாய்வுகளுக்காகவும் ஜெயராஜ் பரவலாக அறியப்பட்டார். தொடக்கத்தில் இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றினார்.[1] இவருடைய கட்டுரைகள் தி ஐலண்டு, சண்டே லீடர், தி இந்து, புரொன்ட்லைன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. Transcurrents எனும் ஒரு வலைப்பதிவையும் 2012 வரை நடத்தி வந்தார். பிபிசி, கனேடிய வானொலி என்பவற்றில் இலங்கை தொடர்பான அரசியல் அலசல்களில் பங்குபற்றினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழியிலும் புலமை பெற்ற மிகச் சொற்பமான இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஜெயராஜ் யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த குடும்பத்தில் கொழும்பில் பிறந்தார்.[2] கொழும்பு தூய தோமையர் தொடக்கப் பள்ளியிலும், பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.[2] 1977 ஏப்பிரலில் வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராகப் பணியில் சேர்ந்தார்.[1][2] 1981 இல் "தி ஐலண்ட்" ஆங்கிலப் பத்திரிகையில் சேர்ந்தார்.[1][2] ஜே. ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில், இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் குறித்த தனது செய்தியறிக்கையின் காரணமாக, ஜெயராஜ் 1987-இல் கைது செய்யப்பட்டார்.[1] அதன்பிறகு, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நீமன் ஆய்வு உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அங்கிருந்து அவர் 1989 இல் கனடாவிற்கு குடிபெயர்ந்தார், ஆனாலும், இலங்கை அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வந்தார்.[1] தனது சொந்த எழுத்துக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை அரசு, பாதுகாப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள், சக பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு பரந்த தகவல் தொடர்பு வலையமைப்பை வளர்த்துக் கொண்டார். பிற்காலத்தில், ஜெயராஜ் டெய்லி மிரர், டெய்லி எஃப்.டி உள்ளிட்ட இலங்கை ஆங்கில நாளிதழ்களில் வாராந்திர பத்தி ஒன்றை எழுதி வந்தார். இவற்றில் பெரும்பாலும் அரசியலில் கவனம் செலுத்தியதோடு, இந்தியாவில் உள்ள தமிழ் மக்கள் கலாச்சாரம் குறித்தும், குடும்ப வம்சாவளிகள், நடிகர்கள், பின்னணிப் பாடகர்கள் பற்றிய குறிப்புகளும் இலங்கையுடனான அவர்களின் தொடர்புகளையும் ஆராய்ந்து எழுதி வந்தார்.[1]

இவரது கடைசிக் கட்டுரை த மோர்னிங் இதழில் 2026 மே 17 இல் வெளிவந்தது.[1]

இறப்பு

[தொகு]

டி.பி.எஸ். ஜெயராஜ் சுகவீனமுற்றிருந்த நிலையில், 2026 மே 17 அன்று தனது 71-ஆவது அகவையில் கனடா, இசுக்கார்பரோவில் காலமானார்.[3][1]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._எஸ்._ஜெயராஜ்&oldid=4543440" இலிருந்து மீள்விக்கப்பட்டது