டிரான் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரான் நீரிணையின் அமைவிடம்

டிரான் நீரிணை என்பது, சினாய்க்கும், அரேபியக் குடாநாட்டுக்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு ஒடுக்கமான கடல்வழி ஆகும். 13 கிமீ (8 மைல்) அகலம் கொண்ட இந்நீரிணை அக்காபா குடாவையும், செங்கடலையும் இணைக்கிறது. இந்நீரிணையின் நுழைவழியில் இருக்கும் டிரான் தீவின் பெயரைத் தழுவியே இந் நீரிணைக்குப் பெயரிடப்பட்டது. எகிப்து-இசுரேல் அமைதி உடன்பாட்டுக்கு அமைய, டிரோன் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை எகிப்து அனுமதிக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கான பன்னாட்டுப் படைகளுக்கும், அவதானிகளுக்குமான நிலையமும் இத் தீவிலேயே உள்ளது.


ஜோர்தானின் ஒரே துறைமுகமான அக்காபாவுக்கும், இசுரேலின் ஒரே இந்துப் பெருங்கடற் துறைமுகமான எய்லாட்டுக்கும் இதனூடாகவே செல்ல வேண்டும். இதனால், டிரான் நீரிணை பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. 1956 ஆம் ஆண்டிலும் பின்னர் 1967 ஆம் ஆண்டிலும் இந்த நீரிணையூடாக இசுரேலின் கப்பல்கள் செல்வதைத் தடுத்ததின் மூலம், 56 ஆம் ஆண்டில் சூயெசு நெருக்கடியும், 67 ஆம் ஆண்டில் ஆறு நாள் போரும் ஏற்பட்டது.


எகிப்துக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையில் உள்ள தீவுகளினால் இவற்றுக்கிடையே பல வழிகள் உள்ளன. இவற்றுள் மேற்கு அந்தலையில் அமைந்துள்ள வழியே டிரான் நீரிணை ஆகும். எகிப்து நாட்டில் உள்ள சார்ம் எல்-சேக் என்னும் நகரம் இந்த நீரிணையைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இதில் பெரிய கப்பல்கள் போக்குவரத்துச் செய்வதற்கு ஏற்ற ஆழம் கொண்ட இரண்டு வழிகள் உள்ளன. இவற்றுள் எகிப்தை அண்டியுள்ள என்டர்பிரைசு வழி 290 மீட்டர் (950 அடி) ஆழம் கொண்டது. இதற்குக் கிழக்கே டிரான் தீவுக்கு அருகேயுள்ள வழி கிராஃப்ட்டன் வழி எனப்படுகின்றது. இது 73 மீட்டர் (240 அடி) ஆழம் கொண்டது. டிரான் தீவுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையில் இன்னெரு வழி உள்ளது. திட்டுகளையும், ஆழம் குறைவான பகுதிகளையும் கொண்ட இது 16 மீட்டர்கள் (52 அடி) ஆழம் உடையது.


இந்த நீரிணைக்குக் குறுக்கே எகிப்தையும், சவூதி அரேபியாவையும் இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றும் எகிப்து அரசின் பரிசீலனையில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரான்_நீரிணை&oldid=1362391" இலிருந்து மீள்விக்கப்பட்டது