உள்ளடக்கத்துக்குச் செல்

டிடூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிடூர்
சுவரொட்டி
இயக்கம்எட்கர் ஜி. உல்மர்
தயாரிப்புலியோன் புரோம்கெஸ்
திரைக்கதைமார்ட்டின் கோல்ட்ஸ்மித்
கதைசொல்லிடாம் நீல்
இசைலியோ எர்டோடி
நடிப்புடாம் நீல்
ஆன் சாவேஜ்
ஒளிப்பதிவுபெஞ்சமின் எச். கிலைன்
படத்தொகுப்புஜார்ஜ் மெக்குயர்
கலையகம்புரொடியூசர்ஸ் ரிலீசிங் கார்ப்பரேசன்
விநியோகம்புரொடியூசர்ஸ் ரிலீசிங் கார்ப்பரேசன்
வெளியீடுநவம்பர் 15, 1945 (1945-11-15)(Boston)
நவம்பர் 30, 1945(limited)[1]
ஓட்டம்68 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20,000-$100,000
மொத்த வருவாய்$1 மில்லியன்[2]

டிடூர் (Detour) என்பது 1945 ஆம் ஆண்டு எட்கர் ஜி. உல்மர் இயக்கி, டாம் நீல், ஆன் சாவேஜ் ஆகியோர் நடித்த ஒரு அமெரிக்க சுயாதீன [3] [4] பிலிம் நோயர் திரைப்படம் ஆகும். கோல்ட்ஸ்மித்தின் 1939 ஆம் ஆண்டு எழுதிய இதே தலைப்பிலான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மார்ட்டின் கோல்ட்ஸ்மித் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மார்ட்டின் மூனி ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டது. மேலும் இது 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆலிவுட்டில் இருந்த பாவர்டி ரோ திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான புரொடியூசர்ஸ் ரிலீசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. ஒரு சாமானிய மனிதன் தற்செயலான நிகழ்வுகளால் எப்படி ஒரு குற்றவாளியாக மெல்ல மெல்ல மாறுகிறான் என்பதை இப்படம் காட்டுகிறது.

இன்று பொது உரிமையில் உள்ள இத்திரைப்படம் பல்வேறு இணைய தளங்கள் மூலம் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கிறது. திரைப்படம், 2018 இல் அகாடமி ஃபிலிம் ஆர்க்கைவ் மூலம் மீட்டெடுக்கப்பட்டது [5] அதே ஆண்டு ஏப்ரல் மாதம், 4கே மறுசீரமைப்பு செய்யபட்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டி. சி. எம் விழாவில் திரையிடப்பட்டது. [6] 1992 ஆம் ஆண்டில், "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" என்று அமெரிக்க காங்கிரசு நூலகத்தால் டிடோர் திரைப்படம் அமெரிக்க தேசிய திரைப்படக் காப்கப்பகத்தில் பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. [7] [8]

கதை

[தொகு]

வேலையில்லாத பியானோ இசைக் கலைஞனான அல் ராபர்ட்ஸ், நெவாடாவின் ரெனோவில் ஒரு சாலையோர உணவகத்திற்கு லிஃப்ட் கேட்டு வந்து சேர்கிறான். அங்குள்ள ஜூக்பாக்ஸ் என்னும் இசை ஒளிபரப்புக் கருவியில் வாடிக்கையாளர் ஒருவர் பாடல் போடுவதால் அவன் கோபமடைகிறான். ஏனெனில் அது நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு மலிவான இரவு விடுதியில் தனது திறமையை வீணடித்த நாட்களை அவனுக்கு நினைவூட்டுவதாக இருந்தது. அவனது காதலியும், அந்த இரவு விடுதியில் பாடகியாக இருந்த சூ ஹார்வி, தனது வேலையை விட்டுவிட்டு ஆலிவுட்டில் புகழ்பெறச் செல்கிறாள். இதனால் அல் மனமுடைந்து போகிறான். இறுதியில், அவளைத் திருமணம் செய்துகொள்ள கலிபோர்னியாவிற்குப் பயணிக்க அவன் முடிவு செய்கிறான். அவனிடம் சாப்பாட்டிற்கு மட்டும் பணமுள்ள நிலையில், அவன் சாலையில் செல்லும் ஊர்திகளில் லிஃப்ட் கேட்டுப் பயணிக்கிறான்.

டிடூர் முழுத் திரைப்படம்; இயங்கும் நேரம் 01:07:59

அரிசோனாவில், பந்தயத் தரகரான சார்லஸ் ஹாஸ்கெல் ஜூனியர், தனது மேற்கூரை அற்ற சொகுசு காரில் அல்லுக்கு லிஃப்ட் கொடுக்கிறார். அவர் தானும் லாஸ் ஏஞ்சல்சுக்குச் செல்வதாகத் தெரிவிக்கிறார். பயணக் களைப்பால் ஹாஸ்கெல் நன்கு தூங்கிவிடுகிறார். அன்று இரவு, அல் காரை ஓட்டிச் செல்லும்போது, திடீரென மழை தொழிகிறது. அதன் காரணமாக, அவன் காரின் மேற்கூரையை மூடுவதற்காக காரை சாலையோரம் நிறுத்துகிறான். தூக்கத்தில் இருந்த ஹாஸ்கெல்லை எழுப்புகிறான். ஆனால் அவர் எழவில்லை. அவன் காரின் முன்பக்கக் கதவைத் திறக்கும்போது, ஹாஸ்கெல் எதிர்பாராமல் வெளியே சரிந்து விழுந்து, பாறையில் தலை அடிபடுகிறது. ஹாஸ்கெல் இறந்துவிட்டதை அல் உணர்கிறான்.

ஹாஸ்கெல் முன்னரே மாரடைப்பால் இறந்திருக்கலாம் என அல் எண்ணுகிறான். காவல்துறையினரை அழைத்தால் தான்னையே கொலையாளி என கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறான். எனவே ஹாஸ்கெல்லின் பிணத்துக்கு தன் ஆடைகளை அணிவித்து சாலையோரப் புதரில் மறைத்துவைத்துவிட்டு, ஹாஸ்கெல்லின் ஆடைகளை தான் அணிந்து அவரின் பணம், அடையாள அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே காரைக் கைவிடும் நோக்குடன் அங்கிருந்து காரை ஓட்டிச் செல்கிறான்.

ஹாஸ்கெல் போல நடித்து, அல் கலிபோர்னியாவுக்குள் நுழைகிறான். வழியில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்துக்கு அருகே தனியாக நின்றிருக்கும் வேரா என்ற பெண்ணுக்கு லிப்ட் கொடுக்கிறான். பயணத்தின் போது, அவள் திடீரென அவனிடம் காரின் உரிமையையாளரை என்ன செய்தாய் என்று கேட்கிறாள். முன்னதாக லூசியானாவில் ஹாஸ்கெல் தன்னை காரில் ஏற்றிக்கொண்டதாகவும், ஆனால் அரிசோனாவில் அவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால் காரிலிருந்து இறங்கிவிட்டதாகவும் அவள் கூறுகிறாள். அவன் நடந்ததைக் கூறுகிறான். அவனை காவல்துறையில் காட்டிக்கொடுப்பதாக மிரட்டி, ஹாஸ்கெல்லின் பணப்பையிலிருந்து எடுத்த பணத்தைத் தருமாறும், காரை விற்று கிடைக்கும் பணத்தைக் கொடுக்குமாறும் அவள் அவனை மிரட்டிப் பணம் பறிக்கிறாள்.

விற்பனை நடவடிக்கைக்கு ஒரு செல்லுபடியாகும் முகவரி தேவைப்பட்டதால், ஆலிவுட்டில் கணவன், மனைவியாக இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கிறனர். காரை விற்க முறுபடுகின்றனர். செல்வந்தரான ஹாஸ்கலின் தந்தை மரணப் படுக்கையில் இருப்பதையும், மகன் பிரிந்து சென்று 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதையும் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றின் மூலம் வேரா அறிந்துகொள்கிறாள். அல்லை ஹாஸ்கலாக வேடமிடவைத்து, அவரது சொத்துகளை ஏமாற்றி பறிக்க வேரா திட்டமிடுகிறாள். ஆனால், அந்த திட்டத்தை முடிக்க தனக்குத் தேவையான விரிவான விவரங்கள் எதுவும் இல்லை என்று கூறி அல் அதை மறுக்கிறான்.

இரவில் நன்றாக மது அருந்திய வேரா, அல் தன் திட்டத்துக்கு சம்மதிக்காவிட்டால், காவல் துறையில் அவனை மாட்டிவிடுவதாக மிரட்டுகிறாள். தொலைபேசியுடன் படுக்கையறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொள்கிறாள். அல் கதவு இடுக்கு வழியே தொலைபேசி வயரை இழுத்து இணைப்பைத் துண்டிக்க முயற்சிக்கிறான். மறுபக்கம் திடீர் அமைதி. அல் படுக்கையறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கிறான். ​​அந்த வயர் வேராவின் கழுத்தை இறுக்கியதால், அவள் இறந்திருப்பதைப் பார்த்து அவன் நொந்துபோகிறான்.

மனம் தளர்ந்த அல், சூவை மீண்டும் தொடர்பு கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டு, வாகனங்களில் இலவசப் பயணம் மேற்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறுகிறான். உலகின் பார்வையில் அல் ராபர்ட்சின் ஆடைகளோடு ஹஸ்கெல்லின் உடல் கிடப்பதால் அல் ஏற்கனவே இறந்துவிட்டான். சட்டத்தின் பார்வையில் அவன் தன் மனைவி வேராவைக் கொன்றதாக தேடப்படும் குற்றவாளி ஹஸ்கெல். "தன் மனைவியின்" கொலை தொடர்பாக ஹாஸ்கெல் தேடப்படுகிறான் என்பதை அல் அறிந்துகொள்கிறான். ரெனோவில் உள்ள அந்த உணவகத்தில், தான் கைது செய்யப்படக்கூடும் என்பதைச் சிந்தித்தபடியே, அவன் அமைதியாக வெளியேறி நெடுஞ்சாலையில் நடக்கத் தொடங்குகிறான். சிறிது நேரத்தில் ஒரு காவல் வாகனம் அவனை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து செல்கிறது.

தயாரிப்பு

[தொகு]

1972-இல் அளித்த நேர்காணல் ஒன்றில், இப்படம் ஆறு நாட்களில் படமாக்கப்பட்டதாக உல்மர் கூறினார். இருப்பினும், 2004ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆவணப்படத்தில், உல்மரின் மகள் ஏரியன் படப்பிடிப்புக்கான திரைக்கதை ஆவணத்தின் முகப்புப் பக்கத்தை முன்வைத்தார்; அதில் "14 ஜூன், 1945 - 29 ஜூன்; படப்பிடிப்பு நாட்கள்: 14" என்று குறிப்பிடப்பட்டிருந்தது [9] மேலும், ஆன் சாவேஜ், டிடோர் தயாரிப்பிற்காக புரொடியூசர்ஸ் ரிலீசிங் கார்ப்பரேஷனுடன் மூன்று ஆறு நாள் வாரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மேலும் அவர் பின்னர் கலிபோர்னியாவின் லான்காஸ்டரில் உள்ள பாலைவனத்தில் கூடுதலாக நான்கு நாட்கள் வெளிப்புறப் படப்பிடிப்புடன், படம் நான்கு ஆறு நாள் வாரங்களில் படமாக்கப்பட்டது என்று கூறினார். [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Detour". Turner Classic Movies. Archived from the original on October 29, 2011.
  2. Ultimate Movie Rankings (retrieved 29 December 2017)
  3. Calver, Charlie (2021-07-26). "An indie film lover's dream: Filmzie is an ode to movie buffs (and it's free)". GQ Australia. Retrieved 2024-11-17.
  4. "URI film professor picks five essential American indie films". Rhody Today. University of Rhode Island. 2023-05-01. Retrieved 2024-11-17.
  5. "Preserved Projects". Academy Film Archive.
  6. Gallagher, Ryan (April 25, 2018). "JANUS FILMS TO TOUR NEW 4K RESTORATION OF EDGAR G. ULMER'S DETOUR". The Film Foundation. Retrieved August 18, 2019.
  7. "Complete National Film Registry Listing". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். Retrieved 2024-11-17.
  8. Kehr, Dave (1992-12-11). "A LONG JOURNEY TO LEGITIMACY". chicagotribune.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-06-04.
  9. Mcgue, Kevin (July 1, 2010). "Detour Movie Review". A Life At The Movies. Archived from the original on March 8, 2012. Retrieved July 12, 2010.
  10. Morton, Lisa; Adamson, Kent (2009). Savage Detours: The Life and Work of Ann Savage. Jefferson, North Carolina: McFarland & Co. ISBN 978-0-7864-4353-6. கணினி நூலகம் 423587955.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிடூர்&oldid=4628471" இலிருந்து மீள்விக்கப்பட்டது