உள்ளடக்கத்துக்குச் செல்

டாலர்கள் முப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாலர்கள் முப்படம்
”பெயரில்லா மனித”னாக கிளின்ட் ஈஸ்ட்வுட்
இயக்கம்செர்ஜியோ லியோனி
தயாரிப்புஅரீகோ கொலம்போ
ஜியார்கியோ பாப்பி
கதைசெர்ஜியோ லியோனி
லூசியானோ வின்சென்சோனி
ஃபல்வியோ மொண்டெல்லா
விக்டர் கட்டேனா
ஏ. பொன்சோன்னி
இசைஎன்னியோ மோரிக்கோனே
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வூட்
லீ வான் கிளீஃப்
கியான் மரியா வோலெண்டே
ஈலை வாலாக்
கலையகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
நாடுஇத்தாலி

டாலர்கள் முப்படம் (Dollars Trilogy, இத்தாலியம்: Trilogia del dollaro) அல்லது பெயரில்லா மனிதன் முப்படம் (Man with No Name Trilogy), என்பது செர்ஜியோ லியோனியின் இயக்கத்தில் கிளின்ட் ஈஸ்ட்வூட் நடிப்பில் வெளியான மூன்று இத்தாலியத் திரைப்படத் தொகுதியினைக் குறிக்கின்றது. அவையாவன: எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (1964), ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965), மற்றும் தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966). இப்படங்கள் உலகெங்கும் மேற்கத்தியப் பாணி திரைப்படங்களின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலில் வெளியான எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் அகிரா குரோசாவாவின் யொஜீம்போ (1961) இன் அனுமதி பெறாத மறுஆக்கமாகும். லியோனி இம்மூன்று படங்களும் தனித்து நிற்கவே விரும்பினார். அவை கதைத் தொடர்ச்சியுடன் ஒரு முப்படத்தின் அங்கமாகக் கருதப்படும் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பார்வையாளர்களும், திரைப்பட வரலாற்றாளர்களும் இம்மூன்று படங்களையும் “பெயரில்லா மனிதன்” பாத்திரத்தின் சாகசங்களைச் சொல்லும் முப்படத்தின் அங்கங்களாகவே கருதுகின்றனர். ”பெயரில்லா மனித”னாக நடித்திருந்த கிளிண்ட் ஈஸ்ட்வுட் மூன்று திரைப்படங்களிலும் ஒரே மாதிரியான ஒப்பனை, பாவனைகளைக் கொண்டிருந்தார்.

”பெயரில்லா மனிதன்” என்ற கருத்துரு முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல. மூன்று இத்தாலியப் படங்களையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றி அமெரிக்காவில் வெளியிட முனைந்த அதன் அமெரிக்க விநியோகிப்பாளர்கள் சந்தைப் படுத்துதலுக்காக “பெயரில்லா மனிதன்” என்ற கருத்துருவை உருவாக்கினர். ஈஸ்ட்வுட்டின் பாத்திரத்தின் பெயர் மூன்று படங்களிலும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவன் மூன்றிலும் வெவ்வேறு செல்லப்பெயர்களால் அழைக்கப்படுகிறான்.

இம்மூன்று படங்களில் இறுதியாக வெளிவந்த தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி கதை நடக்கும் காலப்படி முதலாவதாக அமைந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில் (1861-65) நடைபெறும் இக்கதையில் பெயரில்லா மனிதன் பிற இரு படங்களில் வழக்கமாக அணிந்திருக்கும் உடைகளை அணியும் பழக்கத்தைத் தொடங்குவதாகக் காட்டப்படுகிறது. மேலும் ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் படத்தில் லீ வான் கிளிஃப் நடிக்கும் கதாபாத்திரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு வீரராகக் காட்டப்படுகிறது. மேலும் எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் திரைப்படத்தில் வரும் ஒரு கல்லறையில் இறப்பு ஆண்டு 1873 என்று காட்டப்படுகிறது. இவற்றின் மூலம் கதையின் காலமுறை தெளிவாகிறது. எனினும் இவை சாதாரணக் காலத்தொடர்ச்சி பிழைகளே என்று கருதுவோரும் உள்ளனர். இப்படங்களின் இறுவட்டு மற்றும் புளூரே தகடு வெளியீடுகள் இவற்றை “பெயரில்லாத மனிதன் முப்படம்” என்றே குறிப்பிடுகின்றன.[1][2]

[லியோனியின் திரைப்படங்கள்] ஹாலிவுட்டில் மேற்கத்திய பாணி திரைப்படங்களை அணுகும் முறையினை மாற்றியமைத்தன என நினைக்கிறேன். வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டினை யதார்த்தத்தை விடப் பெரிதாகக் காட்டின. அருமையான, புதுவகையான இசையினைக் கொண்டிருந்தன. ஏனைய மேற்கத்தியப் பாணிப் படங்களில் பயன்படுத்தப்படாத கதைகளைக் கொண்டிருந்தன. அவற்றின் பாங்கும் தோற்றம் அக்காலத்துக்கு புதுமையானதாக இருந்தன. ஜான் வெய்ன் நடித்த தி சர்ச்சர்ஸ் (1956) படத்தைப் போன்று வழமையான கதைக்களத்தை அவை கொண்டிருக்கவில்லை. அவற்றின் கதை பல்வேறு துண்டுகளாக, அத்தியாயங்களாக சிதறியிருந்தது. கதை முதன்மைக் கதைமாந்தனது வாழ்வை சிறு சிறு அத்தியாயங்களாகக் காட்டுகிறது.

—கிளின்ட் ஈஸ்ட்வுட், இப்படங்களின் தாக்கத்தை நினைவு கூறுகையில்.[3]

இம்மூன்று படங்களில் நான்கு நடிகர்கள் இரு வேறு பாத்திரங்களில் தோன்றியுள்ளனர். அவ்ர்கள் - லீ வான் கிளீஃப், கியான் மரியா வோலெண்டே, லூயிகி பிஸ்டில்லி மற்றும் ஜோசப் எக்கர். ஈஸ்ட்வுட்டைத் தவிர மூன்று படங்களிலும் தோன்றும் நடிகர்கள் - மாரியோ பிரேகா, ஆல்டோ சாம்ப்ரெல், பெனிட்டோ ஸ்டெஃபனெல்லி மற்றும் லோரென்சோ ரோப்ளீடோ. மூன்று படங்களுக்கும் என்னியோ மோர்ரிக்கோனி இசையமைத்துள்ளார். மூன்றும் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Eliot, Marc (2009). American Rebel: The Life of Clint Eastwood. Harmony books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-33688-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாலர்கள்_முப்படம்&oldid=3580801" இலிருந்து மீள்விக்கப்பட்டது