டானியல் கிர்க்வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டானியல் கிர்க்வுட்
டானியல் கிர்க்வுட்
பிறப்பு(1814-09-27)செப்டம்பர் 27, 1814
ஃஆர்போர்டு கவுண்டி, மேரிலாந்து
இறப்புசூன் 11, 1895(1895-06-11) (அகவை 80)
இரிவர்சைடு, கலிபோர்னியா
தேசியம்அமெரிக்க ஒன்றிய நாடுகள்
துறைவானியல், கணிதம்
பணியிடங்கள்தெலாவேர் பல்கலைக்கழகம்
இந்தியானா பல்கலைக்கழகம்
ஜெஃபெர்சன் கல்லூரி
சுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்யார்க் கவுண்டி கல்விக்கழகம், யார்க்
அறியப்படுவதுகிர்க்வுட் சந்து கண்டுபிடிப்பு.

டானியல் கிர்க்வுட் (Daniel Kirkwood) (செப்டம்பர் 27, 1814 - ஜூன் 11, 1895) ஒரு அமெரிக்க வானியலாளர்.

இவர் மேரிலாந்தில் உள்ள ஆர்போர்டு எனும் ஊரில் ஜான் என்பவருக்கும் அகனேசு கிர்க்வுட் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இவர் கணிதவியல் இளவல் பட்டத்தை 1838 இல் பென்னிசில்வேனியாவில் யார்க் நகரில் உள்ள யார்க் கவுண்டிக் கல்விக்கழகத்தில் இருந்து பெற்றார். அங்கு ஐந்து ஆண்டுகளுக்குக் கல்வி கற்பித்தார். பிறகு பென்னிசிவேனியாவில் உள்ள இலங்காசயரில் அமைந்த இலங்காசயர் உயர்நிலைப் பள்ளியின் முதல்வரானார்.அங்கே ஐந்தாண்டுகள் கல்வி கற்பித்த்தும் பென்னிசில்வேனியாவில் உள்ள போட்சுவில்லிக் கல்விக்கழகத்தின் முதல்வரானார். இவர் 1851 இல் தெலாவேர் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். பின்னர் 1856 இல் புளூமிங்டனில் உள்ல இந்தியானா பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். இங்கு இவர் ஓய்வுபெற்ற 1886 ஆம் ஆண்டுவரை, 1865–1867 ஆகிய இரண்டாண்டுகள் தவிர,பணிபுரிந்தார். இவ்விரண்டாண்டுகளில் பென்னிசில்வேனியாவில் கானன்சுபர்கில் உள்ள ஜெஃபெர்சன் கல்லூரியில் பணிபுரிந்தார்.

வானியற்பணிகள்[தொகு]

இவரது கணிசமான பங்களிப்புகள் சிறுகோள்கள் வட்டணை ஆய்வுவழி கிடைத்தனவாகும். அவர்காலத்தில் வேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுவந்த சிறுகோள்களை அவை சூரியனில் இருந்து அமையும் தொலைவுப்படி வரிசைப்படுத்தி, அவற்றின் இடையே பல இடைவெளிகள் அமைவதைச் சுட்டிக் கட்டினார்’[2] இந்த இடைவெளிகள் இப்போது கிர்க்வுட் சந்துகள் என அழைக்கப்படுகின்றன. இந்தச் சந்துகளின் உருவாக்கத்தை இவர் வியாழன் வட்டணையின் ஒத்திசைவுகளுடன் உறவுபடுத்தினார். மேலும் இவர் காரிக்கோள் நிலாக்கள் சுற்றிவரும் வட்டணைகளின் ஒத்திசைவுகளின் விளைவால்தான் காரிக்கோள் வலயங்களின் காசினிப் பிரிவினை (காசினிச் சந்து) ஏற்படுவதாகவும் முன்மொழிந்தார். இவரே முதன்முதலாக வால்வெள்ளிகளில் இருந்து பிரிந்த சிதிலங்களே விண்கற்களாகப் பொழிகின்றன எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

இவர் கோள்களின் தொலைவுக்கும் அவற்றின் சுழற்சி காலத்துக்கும் இடையில் உள்ள உறவை இனங்கண்டார். இது கிர்க்வுட் விதி எனப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு வானியலாளர்களிடையே இவருக்குப் பன்னாட்டுப் புகழை ஈட்டித் தந்தது. சியர்சு கூக் வாக்கர் இவரை அமெரிக்க கெப்ளர் எனப் புகழ்ந்தார். மேலும் இவ்விதி மிகப் பரவலாக ஏற்கப்பட்ட சூரிய ஒண்முகில் கோட்பாட்டையும் நிறுவியது எனப் போற்றினார். பின்னர் கோள்சுழற்சிக் கால அளவைகள் இவ்வுறவைப் பொய்ப்பித்த்தால் இவ்விதி வழக்கிழந்தது.

இறப்பு[தொகு]

இவர் தன் 77 ஆம் அகவையில் 1891 இல் சுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வானியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்த இரிவர்சைடில் 1895 இல் இயற்கை எய்தினார்.

தகைமைகள்[தொகு]

இவர் மூன்று நூல்கள் உட்பட 129 வெளியீடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். 1951 AT சிறுகோள் இவரது நினைவாக 1578 கிர்க்வுட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிலாவின் மொத்தற் குழிப்பள்ளம் ஒன்றும் கிர்க்வுட் குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வகமொன்றும் கிர்க்வுட் ஆய்வகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் இந்தியானாவைச் சேர்ந்த புளூமிங்டன் கல்லறையில் புதைக்கப்பட்டார். அந்த வளாகமும் கிர்க்வுட் வளாகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கிர்க்வுட் அமெரிக்க ஒன்ரிய நாடுகளின் உள்ளூராட்சிச் செயலராகவிருந்த சாமுவேல் ஜோர்டான் கிர்க்வுட்டின் உறவினர். பின்னவர் ஜேம்சு ஏ. கார்ஃபீல்டு, செசுட்டர் ஏ. ஆர்த்தர் ஆகிய மெரிக்க்க் குடியரசுத் தலைவர்களின் கீழ் செயலராகப் பணிபுரிந்தவராவார்.[3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58779.html. பார்த்த நாள்: August 22, 2012. 
  2. Kirkwood, Daniel (1866). "On the Theory of Meteors" in Proceedings of American Association for the Advancement of Science for 1866, pp.8-14.
  3. Clark, Dan Elbert, Samuel Jordan Kirkwood, Iowa City, Iowa: Iowa State Historical Society, 1917, p. 8.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டானியல்_கிர்க்வுட்&oldid=2747105" இலிருந்து மீள்விக்கப்பட்டது