டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: எழுத்துகளும் உரைகளும் (நூல் தொகுதி)
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: எழுத்துகளும் உரைகளும் (Dr. Babasaheb Ambedkar Writings and Speeches) என்பது அம்பேத்கரின் எழுத்துகள், உரைகளின் தொகுப்பு ஆகும். 1979 ஆம் ஆண்டு முதல் படிப்படியாக பல பத்தாண்டுகளில் 23 தொகுதிகளாக இவை வெளியாயின. மகாராட்டிர அரசால் வெளியிடப்பட்ட இதில் 17 தொகுதிகள் ஆங்கிலத்திலும், 18, 19, 20 தொகுதிகள் மராத்திய மொழியிலும் உள்ளன. மேலும் 21 ஆம் தொகுதியில் அம்பேத்கரின் கடிதங்களும், பிற தொடர்புகளும், 22 ஆம் தொகுதியில் அம்பேத்கரின் அரிய ஒளிப்பட ஆவணங்களும், 23 ஆம் தொகுதியில் அவரின் கல்வி மற்றும் பிற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.[1]
வரலாறு
[தொகு]அம்பேத்கர் மறைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜே. பி. பன்சோத் என்னும் வழக்கறிஞர் இன்னும் வெளிவராத அம்பேத்கரின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடவேண்டும் என்று வழக்குத் தொடுத்தார். 1978 ஆம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் மூல ஆவணங்கள் வெளியீட்டுக் குழுவை மகாராட்டிர அரசு உருவாக்கியது. இக்குழுவிற்கு டாக்டர் வசந்த் மூன் (1932 - 2002) சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார்.[1]
1979 ஆம் ஆண்டு இதன் முதல் தொகுதி வெளியானது. 2003 அக்டோபர் 4 வரை 17 தொகுதிகள் வெளியாயின. இதில் 16 தொகுதிகளுக்கு டாக்டர் வசந்த் மூன் பதிப்பாசிரியராக இருந்தார்.[2] இவை அனைத்தும் ஆங்கிலத்தில் அம்பேத்கர் எழுதியவை ஆகும். 18 முதல் 20 வரையிலான தொகுதிகள் மராட்டிய மொழியில் அம்பேத்கர் எழுதியவை ஆகும். 22 ஆம் தொகுதியில் அம்பேத்கரின் அரிய ஒளிப்பட ஆவணங்களும், 23 ஆம் தொகுதியில் அவரின் கல்வி மற்றும் பிற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மொழியாக்கம்
[தொகு]1992 ஆம் ஆண்டு அம்பேத்கரின் நூற்றாண்டை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: எழுத்துகளும் உரைகளும் நூல் தொகுதிகளை தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியை ஒன்றிய அரசு தொடங்கியது. 16 ஆங்கிலத் தொகுதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் 1993 தொடங்கி 2005 வரை 37 தொகுதிகளாக வெளியாயின.[3] இப்பணிகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும், பாவை அச்சுக்கூடமும் நிறைவேற்றின. இப்பணியில் அம்பேத்கரின் ஆக்கங்களில் 90 விழுக்காடு தமிழில் வெளியாயின.[1]
2022 ஏப்ரல் 13 அன்று அம்பேத்கரின் ஆக்கங்களை தமிழில் வெளியிடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார்.[1] அதன்படி தமிழ் வளர்ச்சித் துறை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துடன்[4] ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த நூல்களை மக்கள் பதிப்பாக வெளியிட அரசாணை வெளியிடப்பட்டது.[1] இப்பணியின்போது வெவ்வேறு காலகட்டத்தில் செய்த மொழிபெயர்ப்பின் மொழிநடையை செம்மை செய்து, புதியதாகவும் மொழிபெயர்த்து 100 தொகுதிகளாக 2025 ஆம் ஆண்டு வெளியானது.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 வீ.அரசு (2026-01-17). "தமிழ்ச் சமூகம் அண்ணல் அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக் கடன்". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-18.
- ↑ "Vasant Moon Dead". Dalit Voice (in அமெரிக்க ஆங்கிலம்). 2025-05-30. Retrieved 2026-01-18.
- ↑ சித்தார்த்தர், அ ப காரல் மார்க்ஸ் (2026-01-24). "புதியதொரு மொழிபெயர்ப்பே அம்பேத்கருக்கு செய்யும் நன்றிக்கடன் | நூல் வெளி". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-27.
- ↑ தமிழில் வெளிவரும் அம்பேத்கர் ஆக்கங்கள் – 17 புதிய தொகுதிகள் வெளியீடு, தமிழ் வளர்ச்சித் துறை