உள்ளடக்கத்துக்குச் செல்

டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும் (The Durban Declaration and Programme of Action) என்பது, 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற இனவாதத்துக்கு எதிரான உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆவணம் ஆகும். இது, இனவாதம், இனப்பாகுபாடு, அந்நியர் வெறுப்பு, மற்றும் இவை போன்ற சகிப்புத்தன்மை இன்மை ஆகியவற்றுக்கெதிராகப் போராடுவதற்கான வழிமுறைகளை முன்வைக்கும் செயல் நோக்கம் கொண்டது. முழுதளாவிய நோக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், பலவகையான விடயங்களைக் கவனத்துக்கு எடுத்ததுடன் பரவலாகப் பயன்தரக்கூடிய பரிந்துரைகளையும், செயல் திட்டங்களையும் முன்வைத்தது. இந்தச் சாற்றுரை, இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை ஒழிப்பதில் அனைத்துலக சமூகத்தின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. உலகின் பல நாடுகளிலும் காணப்படும் இப் பிரச்சினைகளைக் கையாளுவதை ஒரு அனைத்துலகப் பிரச்சினையாக அணுகும் இந்தச் சாற்றுரைக்குச் சட்டவலு எதுவும் இல்லை. எனினும், இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இது தார்மீக ஆதரவை வழங்குவதாக உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும். முழுமையான ஆவணம் (ஆங்கில மொழியில்)