ஞாயிற்றுப் பிரமிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞாயிற்றுப் பிரமிடு
ஞாயிற்றுப் பிரமிடின் முன் பக்கத் தோற்றம்
இருப்பிடம்தியோத்திவாக்கன், மெக்சிக்கோ மாநிலம்
பகுதிஇடையமெரிக்கா
வகைபிரமிடு, கோயில்
பகுதிதியோத்திவாக்கன்
நீளம்220 மீட்டர் (720 அடி)[1]
அகலம்230 மீட்டர் (760 அடி)[2]
உயரம்65.5 மீட்டர் (216 அடி)[3]
வரலாறு
கட்டப்பட்டதுபொகா 200[4]
பயனற்றுப்போனதுபொகா 750[5]
காலம்இடையமெரிக்கச் செந்நெறிக்காலம்
கலாச்சாரம்தியோத்திவாக்கன்
பகுதிக் குறிப்புகள்
நிலையுனெசுக்கோவால் பாதுகாக்கப்படுகிறது
உரிமையாளர்பண்பாட்டு மரபுரிமை
மேலாண்மைஉலக மரபுரிமைக் குழு
பொது அனுமதிஆம்
உலகின் மூன்றாவது பெரிய பழங்காலப் பிரமிடு.

ஞாயிற்றுப் பிரமிடு (Pyramid of the Sun) என்பது பொகா 200 இல் கட்டப்பட்டதாக நம்பப்படும்,[6] மெக்சிக்கோ நாட்டின் தியோத்திவக்கானில் உள்ள மிகப் பெரிய பிரமிடு ஆகும். அத்துடன், இது இடையமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய பிரமிடுக்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இறந்தோர் நிழற்சாலையை அண்டி நிலாப் பிரமிடுக்கும் குளூடாடெலாவுக்கும் இடையில், பாரிய செர்ரோ கோர்டொ மலையின் நிழலில் காணப்படுகின்றது. இது நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மிகப் பெரிய தொகுதியின் ஒரு பகுதி ஆகும்.

வரலாறு[தொகு]

இப்பிரமிடுக்கு இன்று வழங்கிவரும் பெயர் தியோத்திவாக்கன்நகரம் கைவிடப்பட்டுப் பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் அந்நகருக்கு வந்த அசுட்டெக்குகளினால் வழங்கப்பட்டது. தியோத்திவக்கான் நகர மக்கள் இதை என்ன பெயரால் அழைத்தனர் என்பது தெரியவில்லை. இது இரண்டு கட்டங்களில் கட்டப்பட்டது. பொகா 100 ஐ அண்டி இடம்பெற்ற முதற் கட்டம், பிரமிடை அது இன்று இருக்கும் அளவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாம் கட்டக் கட்டுமானத்தின் மூலம் இது 224.94 மீட்டர் (738 அடி) குறுக்களவையும், 75 மீட்டர் (246 அடி) உயரமும் கொண்ட முழுமையடைந்த அளவு கொண்டதாக ஆனது. இதன் மூலம் இந்தப் பிரமிடு உலகின் மூன்றாவது பெரிய பிரமிடு ஆனது.[7] எனினும் உலகின் மிகப் பெரிய பிரமிடான கீசாவின் பெரிய பிரமிடின் (146 மீட்டர்) அரைப்பங்கு உயரம் கொண்டதாகவே இது உள்ளது இரண்டாம் கட்டத்தில் பிரமிடின் உச்சியில் பலிபீடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்பலிபீடம் இக்காலம் வரை நிலைக்கவில்லை.

இந்த அமைப்புக்களின் மீது தியோத்திவாக்கான் நகரத்தார், அயல் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுண்ணாம்புச் சாந்து பூசினர். இதன் மேல் பிரகாசமான நிறங்களைப் பயன்படுத்திச் சுவரோவியங்கள் வரையப்பட்டன. பிரமிடு பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்த போதும், சாந்தும், வண்ணப் பூச்சும் தற்காலத்தில் தெரியாதபடி அழிந்துவிட்டன. கருஞ் சிறுத்தைத் தலையும் பாதங்களும், விண்மீன்கள், பாம்புகள் என்பன இப்பிரமிடோடு தொடர்புடைய வடிவங்கள்.

தியோத்திவாக்கன் சமூகத்தின் கடவுள் ஒருவரை இப்பிரமிடில் வணங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஆனால், இதற்குப் போதிய சான்றுகள் இல்லை. பிரமிடின் உச்சியில் இருந்த கோயில் வேண்டுமென்றும், இயற்கைச் சீற்றங்களினாலும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் தொடங்கும் முன்பே அழிந்துவிட்டதால், எந்த ஒரு குறிப்பிட்ட கடவுளோடும் இப்பிரமிடை அடையாளம் காண முடியவில்லை.

அமைப்பு, அளவு, அமைவிடம், திசையமைவு[தொகு]

அளவு[8] பெறுமானம்
உயரம் 71.17 மீட்டர் அல்லது 233.5 அடி
அடிச் சுற்றளவு 794.79 சதுர மீட்டர் அல்லது 8,555.0 சதுர அடி
பக்கம் 223.48 மீட்டர் அல்லது 732.2 அடி
1/2 பக்கம் 111.74 மீட்டர் அல்லது 366.6 அடி
சரிவுக் கோணம் 32.494 பாகை
பக்கவாட்டு மேற்பரப்பு 59,213.68 சதுர மீட்டர் 637,370.7 சதுர அடி (எடுகோள்: அடி ஒழுங்கான சதுரம், முகங்கள் வழுவழுப்பானவை)
கனவளவு 1,184,828.31 கன மீட்டர் அல்லது 41,841,817 கன அடி (எடுகோள்: அடி ஒழுங்கான சதுரம், முகங்கள் வழுவழுப்பானவை)

இக்கட்டமைப்பின் திசையமைவு மானிடவியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கக்கூடும். ஆகத்து 12, ஏப்ரல் 29 ஆகிய, ஆண்டின் இரண்டு நாட்கள் மறையும் ஞாயிறு தொடுவானத்தைச் சந்திக்கும் புள்ளியில் இருந்து சற்று வட மேற்கு நோக்கி இப்பிரமிடின் திசையமைவு உள்ளது. ஆகத்து 12 ஆம் தேதி இந்த யுகத்தின் முதல் நாளைக் குறிப்பதாகவும், மாயர்களின் நீண்ட எண்ணிக்கை நாட்காட்டி இந்த நாளிலேயே தொடங்குவதால் இந்நாள் முக்கியத்துவம் பெறுகிறது. இத்துடன், பண்டைய சமூகத்தின் நம்பிக்கைகள், வேளாண்மை போன்றவை தொடர்பிலான பல முக்கியமான வானியல் நிகழ்வுகளை இப்பிரமிடு இருக்கும் இடத்தில் இருந்து கவனிக்க முடியும்.

கட்டமைப்பின் மையத்தின் நேர் கீழே ஆறு மீட்டர் ஆழத்தில் உள்ள குகை ஒன்றை நோக்கிச் செல்லும் மனிதனால் உருவாக்கப்பட்ட சுரங்கம் ஒன்றின் மேலேயே பிரமிட் கட்டப்பட்டுள்ளது. முன்னர் இது ஒரு இயற்கையான எரிமலைக் குழம்பு ஆழ்துளை எனக் கருதப்பட்டதுடன், நகுவா மக்களின் தொன்மங்களின்படி மனிதத் தோற்றம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் எனவும் விளக்கப்பட்டது. அண்மைய அகழ்வாய்வுகளின் பின்னர் இது மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் அரச சமாதியாகப் பயன்பட்டிருக்கக்கூடும் எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.[9] அண்மையில் அறிவியலாளர்கள் மியுவோன் உணரிகளைப் பயன்படுத்தி பிரமிட்டின் உட்பகுதியில் வேறு அறைகள் உள்ளனவா என்று அறிய முயன்றனர்.[10] ஆனாலும் பெருமளவில் இடம்பெற்ற அரும்பொருட் கொள்ளைகள் காரணமாக, தியோத்திவாக்கச் சமூகத்தில் எவ்வாறான செயற்பாடுகளுக்கு இவ்வாறான அறைகள் பயன்பட்டிருக்கக்கூடும் எனக் கண்டுபிடிக்க முடியாது உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Teotihuacán." Britannica School. Encyclopædia Britannica, Inc., 2014. Web. 9 Dec. 2014.
  2. "Teotihuacán." Britannica School. Encyclopædia Britannica, Inc., 2014. Web. 9 Dec. 2014.
  3. "Teotihuacán." Britannica School. Encyclopædia Britannica, Inc., 2014. Web. 9 Dec. 2014.
  4. "Teotihuacán." Early Civilizations in the Americas Reference Library. Ed. Sonia G. Benson, Sarah Hermsen, and Deborah J. Baker. Vol. 2: Almanac, Vol. 2. Detroit: UXL, 2005. 315–332. Student Resources in Context. Web. 14 Dec. 2014.
  5. "Teotihuacán." Britannica School. Encyclopædia Britannica, Inc., 2014. Web. 9 Dec. 2014.
  6. Teotihuacan: Pyramids of the Sun and the Moon, Heilbrunn Timeline of Art History, The Metropolitan Museum of Art, retrieved October 29, 2016
  7. Aston, Michael; Tim Taylor (1998). Atlas of Archaeology. Dorling Kindersley. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7894-3189-9.
  8. Reynolds, Mark (1999). "A Comparative Geometric Analysis of the Heights and Bases of the Great Pyramid of Khufu and the Pyramid of the Sun at Teotihuacan". Nexus Network Journal (Kim Williams Books) 1: 87–92 இம் மூலத்தில் இருந்து 11 August 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060811212945/http://www.nexusjournal.com/Reynolds.html. 
  9. Šprajc, Ivan (2000). "Astronomical Alignments at Teotihuacan, Mexico". Latin American Antiquity 11 (4): p. 410. https://archive.org/details/sim_latin-american-antiquity_2000-12_11_4/page/410. 
  10. A. Menchaca-Rocha et al. (2013). "Search for cavities in the Teotihuacan Pyramid of the Sun using cosmic muons: preliminary results". Proceedings of Science X LASNP 012. https://pos.sissa.it/194/012/pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞாயிற்றுப்_பிரமிடு&oldid=3581856" இலிருந்து மீள்விக்கப்பட்டது