ஞானமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் உயிர் விடத் தீர்மானித்தபோது அவரைக் காத்தருளிய கந்தவேள், தன்னுடைய யோகானுபூதியை அவருக்குக் காட்டி அருளினான். அவனுடைய திருவடித் தாமரைகள் ஞானமலை என்னும் இடத்தில் காணக்கிடைப்பதாய்ச் சொல்லப் படுகிறது. ஆறுமுகன் மீது யோகத்தை அடிப்படையாய் வைத்து அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப்பாடல்களில் நமக்குக் கிடைத்தவை 1,328 பாடல்களாகும். அதில் அவர் நேரில் சென்று தரிசித்த தலங்கள் 200-க்கும் மேல் இருக்கும். அவற்றில் சில தலங்கள் இன்னும் சரிவர அறியப் படவில்லை. அவை ஏழு இருக்கலாம் என்கின்றனர். அப்படி அறியப் படாமல் இருந்து அறியப் பட்ட ஒரு இடமே ஞானமலை என்று சொல்கின்றனர். இந்தத் தலத்தைப் பற்றிப் பத்து வருடங்கள் முன்னால் 1998-லே தான் தெரிய வந்துள்ளது.

சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில், காவேரிப்பாக்கம்-சோளிங்கர் பாதையில் மங்கலம் என்னும் ஊரில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலையில் கோவிந்தச் சேரி என்னும் கிராமத்தில் இந்த ஞானமலை உள்ளதாய்ச் சொல்லப் படுகிறது. சோளிங்கர் ரயில் நிலையம் உள்ள பாணாவரத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் இருப்பதாயும் சொல்கின்றனர். கோவிந்தச் சேரி-கோவிந்தக் குப்பம் என்னும் கிராமங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அழகான மலையைச் சுற்றி ஏரி ஒன்றும், சுற்றிலும் வயல்களுமாகக் காட்சி அளித்துக் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிக்கின்ற இடத்தில் உள்ளது இந்தக் கோயில் எனத் தெரியவருகிறது. “வெப்பாலை” என்னும் ஒரு வகை மரங்கள் மிகுதியாக வளர்ந்துள்ள இந்த மலையில் மலை ஏறிச் செல்ல அழகான படிகளையும், மேற்கூரையும் அமைக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்கின்றனர். வெப்பாலை மரத்தின் இலைகள் தோல் சம்பந்தமான நோய்களுக்கு அற்புத நிவாரணி என்றும் சொல்கின்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதையைச் சீரமைத்தது சென்னையிலுள்ள சிறுவாபுரி முருகன் கோவில் அபிஷேகக் குழுவினர் ஆகும்.

கிட்டத் தட்ட 160 படிகள் ஏறிக் கோயிலை அடைய வேண்டும். கருவறை சிறியதாய் இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். அர்த்த மண்டபம், வெளி மண்டபம் என உள்ளது. மூலஸ்தானத்தில் பிரம்மசாஸ்தா கோலத்தில் ஞானபண்டித ஸ்வாமி காக்ஷி கொடுக்கின்றார். ஞானத்தைத் தேடி அலைவோருக்கு ஞானகுருவாக இருந்து ஞான உபதேசம் செய்யும் முருகன் நான்கு கரங்களோடு காட்சி அளிக்கின்றான். பின்னிரு கரங்கள் ஜபமாலையையும், கமண்டலத்தையும் தாங்கிய வண்ணமும், முன்னிரு கரங்களில் வலக்கரம் “நானிருக்க பயமேன்!” அபயம் என்று சொல்லிக் கொண்டும், இடக்கரம் இடுப்பிலும் வைத்த வண்ணம் காட்சி தருகிறார் முருகன். இந்த பிரம்ம சாஸ்தா வடிவம் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் சொல்லப் படுகிறது.

பிரம்மாவைத் தண்டித்த முருகனையே பிரம்ம சாஸ்தா என வழிபட்டதாகவும், பல்லவர்கள் முற்காலச் சோழர்கள் காலத்திலேயே பிரம்ம சாஸ்தா வடிவம் வழிபடப் பட்டதாகவும் தெரிய வருகிறது. வள்ளி, தேவசேனா சமேதராய்க் காட்சி தரும் கந்தக் கடவுளின் உற்சவர் சிறிய அளவில் இருக்கிறார். வெளிப்புறச் சுவர்களில் திருப்புகழ், ஞானமலைப் பதிகம், சண்முக கவசம் போன்றவை பொறிக்கப் பட்டுள்ளன. அருணகிரியாருக்கு இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும்போது திருவண்ணாமலையில் தான் உயிரை விடத் துணிந்தபோது முருகன் திருவடி காட்டி அருள் புரிந்த காட்சி நினைவில் வந்ததாகவும், அந்தத் திருவடிக் காட்சியை மீண்டும் காண அருள் புரியுமாறும் முருகனிடம் வேண்டியதாய்ச் சொல்கின்றனர். இதற்கான அகச் சான்று ஞானமலைத் திருப்புகழில் மட்டுமே கிடைப்பதாயும் தெரியவருகிறது. அந்தத் திருப்புகழைத் தேடிப் போடுகிறேன்.

“அடியனும் நினைத்து நாளும் உடலுயிர் விடுத்தபோது,
அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே!”

என்ற திருப்புகழும், எனை மனம் உருக்கி, யோக அநுபூதி அளித்த பாதம் என்றும் சொல்லுகின்றார். ஞானமலைத் திருப்புகழ்ப்பாடல்கள் இரண்டு உள்ளன. இந்தக் கோயிலின் தென் பிராகாரத்தில் அருணகிரியாருக்குக் காட்சி கொடுத்த “குறமகள் தழுவிய குமரன்” வடிவம் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மேற்கே ஞானகிரீசுவரர் சமேத ஞானப் பூங்கோதையாரின் திருக்கோயில் உள்ளது. அதன் பின்புறமே முருகன் பாதம் பதிந்த புண்ணிய பூமி உள்ளது. இந்தக் கோயிலின் வடமேற்கில் வள்ளி மலையும், வடகிழக்கில் திருத்தணிகையும் சமதூரத்தில் உள்ளதாகவும். இந்த மூன்று மலைகளும் சேர்ந்து ஒரு முக்கோண அமைப்பில் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். மூன்று மலைகளையும் ஒரே நாள் தரிசித்தல் சிறப்பாய்ச் சொல்லப் படுகின்றது.

மலை அடிவாரத்தில் உள்ள சுனையில் மேற்புறத்தில் காளிங்கராயன் கல்வெட்டு ஒன்று பாதிக்கு மேல் அழிந்த நிலையில் இருபதாகவும், அதில், “சகலலோக சக்கரவர்த்தி, வென்று மண்கொண்ட சம்புவராயரின் (1322-1340) பதினெட்டாவது ஆட்சியாண்டில் சம்புராப் பழரையர் மகன் காளிங்கராயன், இந்த ஞானமலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லப் படிகளை அமைத்தான்” என்று சொல்லுவதாகவும் தெரிய வருகிறது. இதன் கும்பாபிஷேஹம் 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாலாம் தேதி நடந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானமலை&oldid=2057036" இலிருந்து மீள்விக்கப்பட்டது