ஜோஹன்னஸ் குட்டென்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோஹன்னஸ் குட்டன்பர்க்

பிறப்பும் ,வளர்ப்பும்[தொகு]

ஜெர்மனியில், மெயின்ஸ் என்ற ஊரில், 1398ல் பொற்கொல்லர் பிரிலீலேடன், எல்சுவைரிச் தம்பதியரின் மகனாய் பிறந்தார். அரசுக்கு நாணயங்கள் செய்து கொடுக்கும் பணியில், இவரது குடும்பம் ஈடுபட்டு வந்தது. இது தவிர, இவரது தந்தை துணி வியாபாரமும் செய்து, பெரும் செல்வந்தராய் இருந்தார். பள்ளிப் படிப்பை உள்ளூரிலும், உயர்படிப்பை, எப்பர்ட் பல்கலை கழகத்திலும் முடித்தார் குட்டன்பர்க்.தன் தொழிலிலேயே மகனை ஈடுபடுத்த விரும்பினார் தந்தை. எனினும், குட்டன்பர்க்குக்கு அச்செழுத்துக்களை உருவாக்குவதிலேயே கவனம் சென்றது.

அச்சுக்கலை முயற்சிகள்[தொகு]

சீனாவில், கி.பி., 868ல் புத்தகம் வெளியிட்டிருந்தனர். ஆனால், அதை உருவாக்க அதிகமாக சிரமப்பட்டிருந்தனர். களிமண்ணில் எழுத்துக்களை உருவாக்கி, அதில் மையை தடவி, காகிதத்தில் அச்சிட்டவுடன், மண் எழுத்துக்கள் நசுங்கிவிடும். குட்டன்பர்க், முதலில் ரப்பரில் எழுத்துக்களை செய்து, ஒரு மரப்பலகையில் அதை ஒட்டவைத்து, உருளை போன்ற ஒன்றை உருவாக்கி, அதில் பலகையை வைத்து, காகிதத்தில் சுழல்முறையில் அச்சிட்டார். ஆனால், அது சரியாக வரவில்லை. இது ஒருமுறை மட்டுமே பதிக்க வந்தது.

ஒரே அச்சில், பல பக்கங்கள் என்ற முறையில் அச்செழுத்துக்களை உருவாக்க முனைந்தார்.பின், பலகைக்கு பதில் உலோகத்தை பயன்படுத்த நினைத்தார். இதற்கு அவரது குலத்தொழில் பயன்பட்டது. நாணயத்தை உருவாக்குவதற்கு உலோக அச்சு பயன்படுத்தியது, இப்போது அவருக்கு பயன்பட்டது. திடீரென குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. அச்சுக் கருவியை தயாரிக்கும் அவரது முயற்சிக்கு தடை விழுந்தது.எழுத்துக்களை உலோகத்தில் உருவாக்கி, ஒரு உருளையில் அதை பதித்து, மேலிருந்து அழுத்துவதை போல் செய்தால், அச்சு நன்றாக விழும், அதிகமான பிரதிகளும் எடுக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால், அதற்கு நிறைய பணம் தேவைப்பட்டது.

அச்சுக்கூடம் உருவாதல்[தொகு]

அச்சுக்கலை மேல் பற்று கொண்ட செல்வந்தர் ஜோஹனீச் பரீஸ்ட் என்ற செல்வந்தர் அவருக்கு உதவி செய்தார். மிகவும் மகிழ்ச்சியடைந்த குட்டன்பர்க், அச்சு கூடத்தை உருவாக்கினார். இயங்கும் எழுத்து உருக்களை உருவாக்கினார். அந்த அச்சுக் கூடத்தின் மூலம், முதன்முதலில், 1450ல் ஜெர்மானிய கவிதை ஒன்றை அச்சடித்தார். பின், அந்த அச்சுக்களை நவீன முறையில் எந்தவித சிரமமும் இன்றி, ஒவ்வொரு பக்கமும் அச்சு விழும்படி, நகர்த்தும் தொழில் நுட்பத்துடன் இணைத்தார். 1455ல் உலகின் முதல் அச்சு புத்தகம் உருவானது. இலத்தீன் மொழியில், இரு பாகங்களாக 300 பக்க பைபிள் அச்சிடப்பட்டது. புத்தக புரட்சி ஏற்பட்டது.

பொருளாதார சிக்கலும் ,வறுமையும்[தொகு]

அச்சிட்ட, 180 பிரதிகளும், முறையாக விற்கப்படவில்லை. இதனால் பணம் கொடுத்து உதவிய பரீஸ்ட், குட்டன்பர்க்கிடம் கடனை திருப்பி கேட்டார். கடனை திருப்பி கொடுக்க முடியாததால், பரீஸ்ட் நீதிமன்றம் சென்றார். பைபிள் பிரதிகள் மற்றும் அச்சுக்கூடத்தை கடனுக்கு ஈடாக கைப்பற்றினார் பரீஸ்ட். கையில் பணம் இல்லாமல், சிறிது காலம் வேறு சில தொழில்களை செய்து வந்தார் குட்டன்பர்க். பின், மறுபடியும் சிறிய அச்சுக் கூடம் ஒன்றை நிறுவி சிறு சிறு பிரசுரங்களை அச்சிட்டு கொடுத்தார்.இத்தொழிலை உருவாக்கிய குட்டன்பர்க், வறுமையால், பிப்., 3, 1468ல், தன், 70ம் வயதில் மரணம் அடைந்தார்.

அச்சுக்கலை நவீனமாதல்[தொகு]

இன்று, பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. சிறுவர் முதல் பெரியவர் வரை, படித்து அறிவை வளர்க்கிறோம். கல்வி, பத்திரிகை, விளம்பரம், போன்ற துறைகளில் அதிநவீன அச்சு இயந்திரங்கள் வந்துவிட்டன. மணிக்கு, லட்சக்கணக்கான பிரதிகளை அச்சிடும் இயந்திரங்கள் கோலோச்சுகின்றன.கணினி, ஸ்மார்ட் போன், இணையதளம் என, மாற்றங்கள் வந்தாலும், அச்சிட்ட புத்தகங்களை படிப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.குட்டன்பர்க் அச்சிட்ட, உலகின் முதல் விவிலியத்தில், ௨௨ பிரதிகளை, ஜெர்மானியர் இன்றும் பாதுகாத்து வருகின்றனர். அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பின் தான், கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. இன்று, உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன