உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதிர்லதா கிரிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோதிர்லதா கிரிஜா (Jothirlatha Girija, 27 மே 1935 - 18 ஏப்பிரல் 2024) தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டு நகரத்தில் 1935 ஆம் ஆண்டு மீனாட்சி சுப்பிரமணியம் தம்பதியருக்கு இவர் பிறந்தார்.[1] ஜோதிர்லதா கிரிஜாவின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர்.[2] அவர் மூலம் இலக்கிய நூல்கள் ஜோதிர்லதா கிரிஜாவுக்கு அறிமுகம் ஆயின. தீவிர வாசிப்பு அனுபவத்தினால் எழுத்தார்வம் கைகூடியது. நடைமுறை வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து ஏராளமான சிறுகதைகள், புதினங்கள், குறும்புதினங்கள், கட்டுரைகள், நாடகங்கள், வசனக் கவிதைகள் எனப் பலவடிவங்களிலும் எழுதினார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய இவர் தனது படைப்புகளுக்காகப் பல்வேறு இலக்கியப் பரிசுகளையும் பெற்றார்.

ஜோதிர்லதா கிரிஜா சென்னையில், அஞ்சல் துறையில் சுருக்கெழுத்தாளர் பணி சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி பதவி உயர்வு பெற்றார். நிறைய எழுத வேண்டும் என்பதற்காகவே விருப்ப ஓய்வு பெற்று எழுத்துப் பணியில் ஈடுபட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை.

சிறார் இலக்கியம்[தொகு]

பள்ளிப் பருவத்தில் குழந்தை எழுத்தாளராக இவர் அறிமுகம் ஆனார். ஜோதிர்லதா கிரிஜாவின் முதல் சிறுகதை, 1950 ஆம் ஆண்டில் ஜிங்லி சிறுவர் இதழில் வெளியானது.[2] தொடர்ந்து கல்கண்டு, கண்ணன், பூஞ்சோலை ஆகிய இதழ்களில் கதைகள் எழுதினார். எழுத்தாளர் தமிழ்வாணன், ஆர்வி, அழ. வள்ளியப்பா போன்றோரும் ஜோதிர்லதா கிரிஜாவை எழுத ஊக்குவித்தனர்.

நம் நாடு எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 ஆம் ஆண்டில் மாசுகோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது.[3]

இலக்கியவாதி[தொகு]

ஜோதிர்லதா கிரிஜா எழுதிய பெரியவர்களுக்கான முதல் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் 1968-ஆம் ஆண்டில் வெளியானது. ‘அரியும் சிவனும் ஒண்ணு’ என்னும் தலைப்பிலான அக்கதை, கலப்புமணம் பற்றியதாகும். தொடர்ந்து 'அதிர்ச்சி’ எனும் மற்றொரு சிறுகதையும் விகடனில் வெளியாகி வாசக கவனம் பெற்றது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி எனப் பல இதழ்களில் ஜோதிர்லதா கிரிஜாவின் படைப்புகள் வெளியாகின.

பெண்ணியச் சிந்தனைகள், முற்போக்கு எண்ணங்கள், வரதட்சணைக் கொடுமைகள், திருமணப் பிரச்சனைகள், பணியிடங்களில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளால் ஏற்படும் துயர்கள், பாலியல் சிக்கல்கள், பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறைகள், வன்முறைகள், மறுமணம், பொருந்தாத் திருமணம் போன்ற சமூகத்தின் சர்ச்சைக்குரிய கருத்துகளை மையக் கருவாகக் கொண்டு பல கதை, கட்டுரை, புதினங்களை எழுதினார்.

1975 ஆம் ஆண்டில் பெமினா பத்திரிகையில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். இவரது ஆக்கங்கள் டாக்டர் கிருஷ்ண சிறீநிவாசு நடத்தும் போயட்டு இதழில் தொடர்களாக வந்துள்ளன. விமன்சு எரா, தி இந்து, துக்ளக், மற்றும் இணையத்தில் திண்ணையிலும் இவர் படைப்புகள் வெளியாகின.[3]

நூல்கள்[தொகு]

புதினங்கள்[தொகு]

 • அலைகளும் ஆழங்களும்
 • அவசரக் கோலங்கள்
 • அவர்கள் கிடக்கிறார்கள்
 • அழகைத்தேடி
 • அன்பைத் தேடி
 • இதயம் பலவிதம்
 • இப்படியும் ஒருத்தி
 • இல்லாதவர்கள்
 • காதல் தொடர்கிறது
 • காதல் போயின்
 • குருஷேத்திரக் குடும்பங்கள்
 • சாதி இரத்தத்தில் ஓடுகிறது
 • சிறகு முளைத்த பிறகு
 • சுவடிகள் சொன்னதில்லை
 • தனிமையில் இனிமை கண்டேன்
 • துருவங்கள் சந்தித்தபோது
 • தேடி வந்த காதல்
 • தொடுவானம்
 • நாங்களும் வாழ்கிறோம்
 • படி தாண்டிய பத்தினிகள்
 • புதிய யுகம் பிறக்கட்டும்
 • புருஷன் வீட்டு ரகசியம்
 • புறத்தே ஒரு பூப்பந்தல்
 • பெண்களின் சிந்தனைக்கு
 • போராட்டம்
 • மணிக்கொடி
 • மத்தளங்கள்
 • மரபுகள் முறிகின்ற நேரங்கள்
 • மறுபடியும் பொழுது விடியும்
 • மன்மதனைத் தேடி
 • மன விலக்கு
 • வசந்தம் வருமா?
 • வாழத்தான் பிறந்தோம்
 • வித்தியாசமானவர்கள்

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

 • அம்மாவின் சொத்து
 • அரியும் சிவனும் ஒண்ணு
 • கோபுரமும் பொம்மைகளும்
 • ஞானம் பிறந்தது
 • திருப்புமுனை
 • மகளுக்காக
 • வெகுளிப் பெண்

கட்டுரை நூல்கள்[தொகு]

 • இன்றும் நாளும் இளைஞர்கள் கையில்
 • உடன் பிறவாத போதிலும்
 • நாமிருக்கும் நாடு
 • பாரதியார் வாழ்க்கை வரலாறு

நாடகம்[தொகு]

 • பொன்னுலகம் நோக்கிப் போகிறார்கள்

சிறார் நூல்கள்[தொகு]

 • தாயின் மணிக்கொடி
 • நம் நாடு
 • நல்ல தம்பி
 • புரட்சிச் சிறுவன் மாணிக்கம்
 • வனஜாவின் அண்ணன்

ஆங்கில நூல்கள்[தொகு]

 • Gandhi Episodes
 • Mahabharatha
 • Mini Bharat
 • Pearls from the Prophet
 • Ramanayana in Rhymes
 • Voice of Valluvar

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

 • தினமணி கதிர் நாவல் போட்டியில் பரிசு
 • கல்கி பொன்விழா வரலாற்று நாவல் போட்டியில் பரிசு
 • லிலி தேவசிகாமணி அறக்கட்டளையின் சிறுகதைத் தொகுதிக்கான பரிசு
 • அமுதசுரபி நாவல் போட்டி
 • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருது
 • திருப்பூர் கலை இலக்கியப் பேரவையின் சமுதாய நாவல் பரிசு
 • தமிழக அரசின் மிகச் சிறந்த நாவலுக்கான பரிசு
 • மன்னார்குடி, செங்கமலத் தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி என்ற சமூக அமைப்பு இவரை “2012 க்கான சிறந்த பன்முக எழுத்தாளராகத் தேர்ந்தெடுத்து பரிசும், விருதும் அளித்தது.
 • கம்பன் கழகத்தின் சிவசங்கரி விருது

இறப்பு[தொகு]

சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோதிர்லதா கிரிஜா தனது 89 ஆவது வயதில் சென்னை அண்ணாநகரிலுள்ள தனது இல்லத்தில் 18.04.2024 அன்று மாலை 5 மணியளவில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா காலமானார்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/writer-jyotirlata-girija-passed-away--/3603330. பார்த்த நாள்: 19 April 2024. 
 2. 2.0 2.1 "ஜோதிர்லதா கிரிஜா". அரவிந்த். தென்றல். மே 2015. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2015.
 3. 3.0 3.1 "மணிக்கொடி". திண்ணை. 5 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்லதா_கிரிஜா&oldid=3945240" இலிருந்து மீள்விக்கப்பட்டது