உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோதிர்மயீ கங்கோபத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜோதிர்மயீ கங்கோபாத்யாய் (1889-1945) ஒரு பெங்காலி கல்வியாளர், பெண்ணியவாதி மற்றும் பிரம்ம சமாஜ உறுப்பினராக இருந்தவர் ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜோதிர்மயீ 1889 சனவரி 25 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை துவாரகநாத் கங்குலி ஒரு சமூக சீர்திருத்தவாதியும், பிரம்ம சமாஜத்தின் தலைவரும் மற்றும் ஒரு இந்திய தேசியவாதியும் ஆவார். இவரது தாயார் கடம்பினி தேவி கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் மாணவி ஆவார். [2]

தொழில்[தொகு]

ஜோதிர்மயீ பிரம்ம பாலிகா ஷிக்ஷாலயாவில் (பிரம்ம பெண்கள் பள்ளி) பட்டம் பெற்றார் மற்றும் கொல்கத்தாவின் பெதூன் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார். 1908 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். இவரும் பெதுன் கல்லூரிப் பள்ளி, ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தல் பணியையும் மேற்கொண்டார். இலங்கையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியில் சேரும் பொருட்டு இலங்கைக்கு சென்றார். 1920 ஆம் ஆண்டில் இவர் ஜுல்லுண்டூர் கன்யா மகாவித்யாசாலையின் முதல்வராக பணியாற்றினார். 1925 ஆம் ஆண்டில் இவர் பிரம்ம பெண்கள் பள்ளியின் முதல்வராகவும், அடுத்த ஆண்டு வித்யாசாகர் பானி பவனிலும் பணியாற்றினார். இவர் 1929 இல் இலங்கை புத்த கல்லூரியில் சேர்ந்தார். 1920களின் முற்பகுதியில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். [2]

ஜோதிர்மமயீ இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு பெண் தன்னார்வப் படையை வளர்த்தார். 1926 ஆம் ஆண்டில் இவர் சமூக சேவைக்கான மாணவர் சங்கத்தைத் தொடங்கினார். இவர் வங்க மாகாண காங்கிரஸ் கமிட்டி மற்றும் சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்தார். இவர் மகளிர் சத்தியாகிரக குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினார். 1930 மற்றும் 1932 ஆம் ஆண்டுகளில் சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டதற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆரியஸ்தான் காப்பீட்டு நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார். கொல்கத்தா மாநகராட்சிக்கு நகர்மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942 ஆம் ஆண்டில் இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றமைக்காக கைது செய்யப்பட்டார். [2]

இறப்பு[தொகு]

ராமேஸ்வர் பானர்ஜியின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களின் ஊர்வலத்தின் போது 1945 நவம்பர் 22 அன்று காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் ஜோதிர்மயீ கொல்லப்பட்டார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. Ray, Bharati (1995). From the Seams of History: Essays on Indian Women (in ஆங்கிலம்). Oxford University Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563226-2.
  2. 2.0 2.1 2.2 2.3 Mohanta, Sambaru Chandra. "Gangopadhyay, Jyotirmayee". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 12 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்மயீ_கங்கோபத்யாய்&oldid=3077994" இலிருந்து மீள்விக்கப்பட்டது