உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோசே சரமாகூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோசே சரமாகூ
பிறப்புஜோசே டி சூசா சரமாகூ
நவம்பர் 16, 1922 (1922-11-16) (அகவை 102)
அசின்ஹாகா, ரீபாட்டேஜோ, போர்த்துக்கல்
இறப்பு18 சூன் 2010(2010-06-18) (அகவை 87)
தொழில்நாடகாசிரியர், புதின எழுத்தாளர்
தேசியம்போர்த்துக்கேயர்
காலம்1947–இன்றுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்Baltasar and Blimunda, The Year of the Death of Ricardo Reis, Blindness, The Gospel According to Jesus Christ
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1998

ஜோசே டி சூசா சரமாகூ (José Saramago பி. நவம்பர் 16, 1922 - இ. ஜூன் 18, 2010), நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கேய எழுத்தாளரும், நாடகாசிரியரும், பத்திரிகையாளரும் ஆவார். உருவகத்தன்மை கொண்ட இவரது சில ஆக்கங்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கு மறைமுகமான நோக்கைக் கொடுப்பதுடன், அதிகாரபூர்வமாக வழங்கப்படும் செய்திகளுக்கு மாறாக மனிதநேயம் சார்ந்த நோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சரமாகூவுக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, லிஸ்பனில், பிரீட்டாஸ் மாகல்ஹேயஸ் போன்ற வேறும் சிலருடன் சேர்ந்து பண்பாட்டுப் பதுகாப்புக்கான தேசிய முன்னணி என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். ஸ்பெயினின் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேயில் வாழ்ந்து வந்த இவர் ஜூன் 2010ல் மரணமடைந்தார்.

வரலாறு

[தொகு]

சரமாகூ, போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து வடகிழக்கில் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரீபாட்டேஜோ மாகாணத்தில் உள்ள சிறிய ஊரான அசின்ஹாகாவில் பிறந்தார். இவரது குடும்பம் நிலமற்ற குடியானவக் குடும்பம். இவர் தந்தையார் ஜோசே டி சோசா (José de Sousa), தாயார் மரியா டி பியடாடே (Maria de Piedade). சரமாகூ என்பது ஒரு காட்டு மூலிகைச் செடியைக் குறிக்கும் ஒரு சொல். இது இவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். ஆனால் தவறுதலாக பிறப்புப் பதிவின்போது இவர் பெயருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1924ல் சரமாகூவின் குடும்பம் லிஸ்பனுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே இவரது தந்தை காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர்கள் தலைநகருக்குப் போன சில மாதங்களில் சரமாகூவின் அண்ணன் பிரான்சிஸ்கூ இறந்தார்.

படிப்பும் தொழிலும்

[தொகு]

சரமாகூ ஒரு சிறந்த மாணவனாக இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 வயதில் தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், தானுந்து பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி நாளேடு ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே பிள்ளை 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

பால்தாசர் அண்ட் பிளிமுண்டா

[தொகு]

சரமாகூ தனது ஐம்பது வயதின் நடுப்பகுதியில் இருந்தபோதே அவருக்கு உலக அளவிலான கவனம் கிடைத்தது. இவரது வெளியீடான பால்தாசர் அண்ட் பிளிமுண்டா என்னும் நூலே இவருக்கு உலக அளவில் வாசகர்களை உருவாக்கியது. இந்தப் புதினத்துக்கு போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது. சரமாகூ 1969 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயப் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இவர் ஒரு இறைமறுப்பாளரும் ஆவார். இவரது கருத்துக்கள், சிறப்பாக, யேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி நற்செய்தி என்னும் அவரது நூல் வெளிவந்த பின்னர், போர்த்துக்கலில் பெருமளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. நாட்டின் கத்தோலிக்க சமூகத்தினர் சரமாகூ யேசுவைத் தவறு செய்யக்கூடிய மனிதனாகக் காட்டியதையிட்டுப் பெரும் கோபமடைந்தனர். போர்த்துக்கலின் பழமைவாத அரசு, இவரது நூல் கத்தோலிக்கரைப் புண்படுத்துகிறது என்று கூறி அதனை ஐரோப்பிய இலக்கியப் பரிசுக்குப் போட்டியிடுவதைத் தடை செய்யும் என்பதனால், அவரும் மனைவியும் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேக்கு இடம் பெயர்ந்தனர்.

அரசியல் சர்ச்சைகள்

[தொகு]

லெபனானிலும், பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமும் இவர் சர்ச்சையை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டில், எல் பாரிஸ் என்னும் அனைத்துலக ஸ்பானிய மொழிப் பத்திரிகையில், யூதாயிசத்தின் காரணமாகவே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொடுமைப் படுத்துகிறது என்று எழுதினார். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லெபனான் போரின் போது, இவர், தாரிக் அலி, ஜான் பர்கர், நோம் சொம்ஸ்கி, எடுவர்டோ கலியானோ, நவோமி கிளயேன், ஹரோல்ட் பின்ட்டர், அருந்ததி ராய், ஹோவார்ட் சின் ஆகியோடுடன் சேர்ந்து அறிக்கையொன்றில் கையெழுத்து இட்டார். இதில் அவர்கள், இஸ்ரேலின் நீண்டகால இராணுவ, பொருளாதார, புவியியல் நடவடிக்கைகளின் அரசியல் நோக்கம் பாலஸ்தீனத் தேசத்தை அழிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசே_சரமாகூ&oldid=2714753" இலிருந்து மீள்விக்கப்பட்டது