உள்ளடக்கத்துக்குச் செல்

ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா
Alauddin Riayat Shah II
ஜொகூர் சுல்தான்
ஆட்சிஜொகூர் சுல்தானகம்:
1528–1564
முடிசூட்டு விழா1528
முன்னிருந்தவர்சுல்தான் மகமுட் ஷா, மலாக்கா
பின்வந்தவர்சுல்தான் முசபர் ஷா II
துணைவர்இளவரசி கெசுமா தேவி
Princess Kesuma Dewi
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
மர்கும் சாயிட் ஆச்சே
Marhum Syahid di Acheh
தந்தைசுல்தான் மகமுட் ஷா, மலாக்கா
தாய்துன் பாத்திமா
இறப்பு1564
ஆச்சே
சமயம்இசுலாம்

ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா அல்லது சுல்தான் அலாவுதீன் ரியாத் ஷா II (மலாய் மொழி: Sultan Alauddin Riayat Shah II ibni Almarhum Sultan Mahmud Shah; ஆங்கிலம்: Alauddin Riayat Shah II of Johor); என்பவர் ஜொகூர் சுல்தானகத்தின் முதலாவது அரசர். இவரின் அசல் பெயர் ராஜா ராடன் அலி (Raja Raden Ali). இவர் ஜொகூர் சுல்தானகத்தை 1528-ஆம் ஆண்டில் இருந்து 1564-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர்.

இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா, மலாக்காவின் 8-ஆவது அரசரான சுல்தான் மகமுட் ஷாவிற்கும்; துன் பாத்திமாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன் ஆவார். ஜொகூர் சுல்தானகத்தை 36 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்.[1] இவர் அப்போதைய பகாங் அரசின் மன்னர் மன்சூர் ஷாவின் மகளான பகாங் இளவரசி கேசுமா தேவியை (Princess Kesuma Dewi) மணந்தார்.

அந்த வகையில் ஜொகூர் மாநிலம், மலாக்காவின் வாரிசு மாநிலமாக இருந்தது. அலாவுதீன் ரியாத் ஷா II, அவரின் ஆட்சிக்காலம் முழுவதும், போர்த்துகீசியர்களிடம் இருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்.

வரலாறு

[தொகு]

சுல்தான் மகமுட் ஷாவுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.

  1. சுல்தான் அகமட் ஷா
  2. அலாவுதீன் ரியாட் ஷா II
  3. முசபர் ஷா I

இவர்களில் சுல்தான் அகமட் ஷா என்பவர் மலாக்காவின் சுல்தான் பதவியை ஏற்றுக் கொண்டார். சுல்தான் மகமுட் ஷாவின் மூத்த மகன். 1513-இல் மலாக்காவைப் போர்த்துகீசியர்களிடம் இருந்து மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார். அதன் விளைவாக தன் தந்தை சுல்தான் மகமுட் ஷாவினால் கொல்லப் பட்டார்.[2]

பின்னர் சுல்தான் மகமுட் ஷாவே தன்னை மலாக்காவின் சுல்தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். அந்த வகையில் சுல்தான் மகமுட் ஷா, மலாக்காவின் 10-ஆவது சுல்தானாகவும் பொறுப்பில் இருந்து உள்ளார். சுல்தான் மகமுட் ஷாவின் இரண்டாவது மகன் அலாவுதீன் ரியாட் ஷா II-வின் இளைய சகோதரர் முசபர் ஷா I, பின்னர் காலத்தில் பேராக் சுல்தானகத்தை உருவாக்கினார்.

ஜொகூர் சுல்தானகம்

[தொகு]

1529 ஆம் ஆண்டில், அலாவுதீன் ரியாத் ஷா II, தன் முதல் தலைநகரை ஊஜோங் தானா (Hujung Tanah) எனும் இடத்தில் நிறுவினார். இந்த இடம் கோத்தா திங்கியில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பெக்கான் துவா (Pekan Tua) என்று இப்போது அழைக்கப் படுகிறது.[3]

அங்கு கோத்தா காரா (Kota Kara) எனும் கோட்டை ஆற்றின் கரையோரத்தில் நிறுவப்பட்டது. 1535-இல், எஸ்டெவாவோ டா காமா (Estêvão da Gama) என்பவரின் தலைமையில் சுமார் 400 போர்த்துகீசியப் படைகள் ஜொகூர் மீது படையெடுத்தன.[3]

கோத்தா காரா கோட்டை

[தொகு]

கோத்தா காரா கோட்டை மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அந்தக் கோட்டை தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டது. இருப்பினும் போர்த்துகீசியத் துருப்புக்கள் கோட்டையின் மீது தொடர்ந்து வெடி குண்டுகளை வீசின. ஆனாலும் ஒரு கட்டத்தில் பின்வாங்க வேண்டி இருந்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் படை எடுத்து அந்தக் கோட்டையை எரித்து விட்டனர்.

அலாவுதீன் ரியாட் ஷா II, ஜொகூர் ஆற்றின் மேல்புறமாக இருந்த சயோங் பினாங்கு (Sayong Pinang) எனும் இடத்திகுப் பின்வாங்கினார். அவரின் தலைமை அதிகாரி செரி நர திராஜா (Seri Nara Diraja), சயோங் பினாங்கில் காலமானார்.[3]

அமைதி ஒப்பந்தம்

[தொகு]

அலாவுதீன் ரியாட் ஷா II, சிறிது காலத்திற்குப் பிறகு பெக்கான் துவாவுக்குத் திரும்பி கோட்டையை மீண்டும் கட்டினார். மீண்டும் 400 போர்த்துகீசிய துருப்புக்களால் கோட்டை தாக்கப்பட்டது. அந்தப் படையெடுப்பில் 30 போர்த்துகீசியத் துருப்புக்கள் கொல்லப் பட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜொகூருக்கும் போர்த்துகீசியர்களுக்கும் இடையே ஓர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

1540-ஆம் ஆண்டில், அலாவுதீன் ரியாத் ஷா தனது தலைநகரை ஜொகூர் லாமாவுக்கு மாற்றினார். ஜொகூர் லாமா ஜொகூர் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் உள்ளது.

ஆச்சே தாக்குதல்

[தொகு]

சுமத்திராவின் வடக்கு முனையில் இருந்த அச்சே சுல்தானகத்தால் ஜொகூர் அச்சுறுத்தப்பட்டது. 1539-ஆம் ஆண்டில், சுமத்திராவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஜொகூர் சுல்தானகத்தின் துணை மாநிலமான அரு, 160 கப்பல்களைக் கொண்ட 12,000 கடற்படையினரால் தாக்கப்பட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அச்சே மக்கள், மலாக்கா மலாய் மக்கள், மலபார் மக்கள், குஜராத்திகள் மற்றும் துருக்கிய மக்கள். அலாவுதீன் ரியாட் ஷா தனது நண்பர்களான பேராக் மற்றும் சியாக் ஆளுநர்களின் உதவியுடன் ஒரு கடற்படையைச் சேகரித்து, 1540-இல் அருவைத் தாக்கினார்.

சுங்கை பனே போர்

[தொகு]

அவர் அருவை மீண்டும் கைப்பற்றினார். அந்தத் தாக்குதலில் 14 அச்சே கப்பல்கள் மட்டுமே மிஞ்சின. ஆயிரக் கணக்கான அச்சே துருப்புக்கள் இறந்தனர். இந்தப் போர் சுங்கை பனே போர் (Battle of Sungai Paneh) என்று அழைக்கப்படுகிறது.

1564-ஆம் ஆண்டில், அச்சேயின் சுல்தான், அலாவுதீன் அல்-காகர் (Alauddin al-Qahar), அருவின் மீது படையெடுத்து தோற்கடித்தார். அருவில் இருந்து ஜொகூர் ஆட்சியாளர்களை வெளியேற்றினார்.

மர்கும் சாயிட் அச்சே

[தொகு]

அச்சே சுல்தான், பின்னர் அருவில் இருந்து ஜொகூர் லாமா மீது தாக்குதலைத் தொடங்கினார். காரா கோட்டையும் ஜொகூர் லாமா நகரமும் அழிக்கப்பட்டன. அலாவுதீன் ரியாத் ஷா கைப்பற்றப்பட்டு அச்சேவுக்குக் கொண்டு வரப்பட்டார்.

பின்னர் அங்கு அலாவுதீன் ரியாத் ஷா கொல்லப் பட்டார். அவரின் மரணத்திற்குப் பின்னர் மர்கும் சாயிட் அச்சே (Marhum Syahid di Acheh) எனும் சிறப்பு பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. அலாவுதீன் ரியாத் ஷாவிற்குப் பிறகு அவரின் மகன் இரண்டாம் முசாபர் ஷா (Muzaffar Shah II) ஆட்சிக்கு வந்தார்.

ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியாளர்கள்

[தொகு]
ஜொகூர் சுல்தான்கள் ஆட்சி காலம்
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II
1528–1564
சுல்தான் முசபர் II
1564–1570
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா I
1570–1571
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா II
1571–1597
சுல்தான் அகமட் ரியாட் ஷா III
1597–1615
சுல்தான் அப்துல்லா மாயாட் ஷா
1615–1623
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா III
1623–1667
சுல்தான் இபுராகிம் ஷா
1677–1685
சுல்தான் மகமுட் II
1685–1699
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ஷா IV
1685–1699
மலாக்கா ஜொகூர் வம்சாவழி
சுல்தான் அப்துல் ஜாலில் ரகமட் ஷா IV
1718–1722
பெண்டகாரா வம்சாவழி
சுல்தான் சுலைமான் பட்ருல் ஆலாம் ஷா
1722–1760
சுல்தான் அப்துல் ஜாலில் முவாசாம் ஷா
1760–1761
சுல்தான் அகமட் ரியாட் ஷா
1761–1761
சுல்தான் மகமுட் ஷா III
1761–1812
சுல்தான் அப்துல் ரகுமான் முவாசாம் ஷா
1812–1819
சுல்தான் உசேன் ஷா
1819–1835
சுல்தான் அலி இசுகந்தர் ஷா
1835–1855
தெமாங்கோங் வம்சாவழி
ராஜா தெமாங்கோங் இபுராகிம்
1855–1862
சுல்தான் அபு பாக்கார்
1862–1895
சுல்தான் இபுராகிம்
1895–1959
சுல்தான் இசுமாயில்
1859–1981
சுல்தான் இசுகந்தர்
1981–2010
சுல்தான் இபுராகிம் இசுமாயில்
2010–இன்று வரையில்

மலாக்கா சுல்தானகத்தின் ஆட்சியாளர்கள்

[தொகு]
மலாக்கா சுல்தான்கள் ஆட்சி காலம்
பரமேசுவரா
1400–1414
மெகாட் இசுகந்தர் ஷா
1414–1424
சுல்தான் முகமது ஷா
1424–1444
பரமேசுவரா தேவ ஷா
1444–1446
சுல்தான் முசபர் ஷா
1446–1459
சுல்தான் மன்சூர் ஷா
1459–1477
சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா
1477–1488
சுல்தான் மகமுட் ஷா
1488–1511
சுல்தான் அகமட் ஷா
1511–1513
சுல்தான் மகமுட் ஷா
1513–1528

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jaime Koh; Stephanie Ho Ph.D. (22 June 2009). Culture and Customs of Singapore and Malaysia. ABC-CLIO. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-35116-7.
  2. Jaime Koh; Stephanie Ho Ph.D. (22 June 2009). Culture and Customs of Singapore and Malaysia. ABC-CLIO. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-35116-7.
  3. 3.0 3.1 3.2 "The history of Kota Johor Lama began in 1540 when Sultan Alauddin Riayat Shah II (second King of Johor 1528-1564) moved to Tanjung Batu which is located on the banks of the Johor River. He built a city built of stone and then reclaimed with the construction of this city". பார்க்கப்பட்ட நாள் 13 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
ஜொகூர் சுல்தான் இரண்டாம் அலாவுதீன் ரியாட் சா
மலாக்கா - ஜொகூர் வம்சாவழி
இறப்பு: 1564
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் ஜொகூர் சுல்தானகம்
1528–1564
பின்னர்

மேலும் காண்க

[தொகு]