ஜெயகௌரி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயகௌரி
பிறப்பு தெமட்டகொடை, கொழும்பு
தொழில் நாடக, திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 1970கள்-1990கள்
பெற்றோர் அப்புக்குட்டி, கல்யாணி
குறிப்பிடத்தக்க படங்கள் சமுதாயம்

ஜெயகௌரி இலங்கைத் தமிழ் நாடக, மற்றும் திரைப்பட நடிகை ஆவார். சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஐநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இந்தியாவின் கேரளத்தில் இருந்து இலங்கையில் குடியேறிய குடும்பம் ஒன்றில் கொழும்பு தெமட்டகொடையில் அப்புக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தவர் ஜெயகௌரி. இவருடன் ஓர் ஆண் சகோதரனும் ஏழு பெண்களும் கூடப் பிறந்தவர்கள். இவர் ஐந்தாவது பெண். தந்தை ஓர் அரச சேவையாளர், நாடகங்களிலும் நடித்தவர். தெமட்டகொடை மாளிகாகந்தை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு கப்பித்தாவத்தை தொண்டர் பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தார்.[1]

பாடசாலை நாட்களிலேயே நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டில் பஞ்சிகாவத்தையில் கவின்கலை மன்றத்தின் சார்பில் மேடையேறிய நூதன லஞ்சம் என்ற நாடகத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொரளை வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் கவின் கலை மன்றம் அரங்கேற்றிய "எழுத்தாளனின் காதலி" நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வரணியூரான் எழுதிய சங்கிலியன் நாடகத்தில் தினக்குரல் அதிபர் எஸ். பி. சாமியோடு இணைந்து நடித்தார்.[2]

வி. கே. டி. பாலனுடன் "பேசும் விழிகள்", எஸ். எஸ். சந்திரனுடன் தீச்சுடர், கம்பளைதாசனுடன் விளக்கேற்றி வைத்தவள், மேலும், லடிஸ் வீரமணி தயாரித்த வண்டரித்த மலர் போன்ற பல நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கலைவாணர் நாடக மன்றம், தமிழ் முன்னேற்ற மன்றம், மனோரஞ்சித நாடக சபா மேடை நாடகங்களிலும், சானா, வாசகர் ஆகியோரின் வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். காதலுக்கு என்ன விலை என்ற தொலைக்காட்சி நாடகத்தில் பிரபா கணேசனுக்கு மாமியாராக நடித்தார்.[1]

திரைப்படத்தில்[தொகு]

ஹென்றி சந்திரவன்ச தயாரிப்பில் 1952 இல் வெளியான சமுதாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. இவருடன் கதாநாயகனாக நடித்தவர் எஸ். என். தனரெத்தினம். 16 மிமீ அகலத்தில் வெளிவந்த இத்திரைப்படம் டெக்னிக் வண்ணத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் கொழும்பில் ஒரு வாரம் மட்டுமே ஓடியிருந்தாலும், தமிழ்ப் பகுதிகளில் ஓரளவு வெற்றிகரமாக ஓடியது.[3]. ஜெயகௌரி நடித்த ஒரேயொரு திரைப்படம் சமுதாயம் ஆகும்.[1]

சிறப்புகள்[தொகு]

  • இலங்கை அரசின் "கலாபூசணம்" விருது
  • மானாவின் தோட்டத்து ராணி நாடகத்தில் சிறந்த துணை நடிகை
  • 1994ல் அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் நடத்திய நாடக விழாவில் ஊமைகள் உறங்குவதில்லை என்ற நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பாராட்டு சான்றிதழ்
  • 1996 இல் வினோதன் ஞாபகார்த்தமாக கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட பாட்டுக்கொரு புலவன் நாடகத்தில் நடித்தமைக்காக கெளரவ விருது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "திரும்பிப் பார்க்கின்றேன்". தினகரன். 20 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "ஞாபக வீதியில்". தினகரன். 8 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, தம்பிஐயா தேவதாஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயகௌரி_(நடிகை)&oldid=3214083" இலிருந்து மீள்விக்கப்பட்டது