உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெபமணி மாசிலாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெபமணி மாசிலாமணி
இந்திய விடுதலை போராட்ட வீரர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1937–1941
தொகுதிதூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 7, 1890
குருவிநத்தம்
இறப்புநவம்பர் 7, 1977
பல்லாவரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்மாசிலாமணி
பணிஅரசியல்வாதி
சமயம்கிறிஸ்துவர்

ஜெபமணி மாசிலாமணி இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாசிலாமணியின் மனைவியாகவும் இவர் அறியப்படுகிறார். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்துவப் பெண்[1] சட்டமன்ற உறுப்பினரானார் ஜெபமணி. மீண்டும் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இவர் போட்டியின்றி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இளமைக்காலம்

[தொகு]

அக்டோபர் 7, 1890 ஆம் ஆண்டு காமநாயக்கன்பட்டியை அடுத்த குருவிநத்தம் என்ற ஊரில் பிறந்தார் ஜெபமணி. தந்தை டி. சவரிராயப் பிள்ளை, தாய் செபஸ்தியம்மாள். ஆகஸ்டு 20, 1909 அன்று ஓட்டப்பிடாரத்தை அடுத்த கொம்பாடியைச்[2] சேர்ந்த மாசிலாமணிப் பிள்ளைக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார் ஜெபமணி[3]. தூத்துக்குடி நகரில் வாழ்க்கையைத் தொடங்கிய ஜெபமணி தம்பதியினருக்கு நான்கு பெண்களும், இரண்டு ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.

விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம்

[தொகு]

மரக்கடை தொழில் செய்து வந்த மாசிலாமணி, காந்தியின் மீது கொண்ட பற்றால் தன் மரக்கடையில் கதராடை நெய்வதற்கான இராட்டைகளைச் செய்தார்[2]. இந்த இராட்டைகளை மக்களுக்கும் இலவசமாகச் செய்து வழங்கி வந்தார். கணவருடன் போராட்டங்களில் துணை நின்றார் ஜெபமணி. இருவரும் சுதந்திரம், சுயாட்சி என்று மேடைகளில் முழங்கி வந்தனர். "சிம்மக் குரலோன்" என்று அழைக்கப்பட்ட மாசிலாமணி காந்தி, நேரு போன்ற தலைவர்களின் மேடைப் பேச்சைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்[4].

இருவரும் தூத்துக்குடி மட்டுமல்லாது சிவகங்கை தாலுகா பொது கூட்டங்களிலும் பேசி வந்துள்ளனர். சொந்தமாக தாங்களே மெட்டமைத்து விடுதலை வேட்கையைத் தூண்டும் பாடல்களையும் பாடி வந்தனர். 1933 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று மதராஸில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி மாசிலாமணி கைது செய்யப்பட்டார். கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டுக் கைதானார்[3].

1941- இல் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனிநபர் சத்தியாகிரகத்தில் தொடக்கமாக இறங்க வேண்டுமென்பதே காங்கிரஸ் வழிகாட்டுதலாக இருந்தது. அப்போது ஜெபமணி அம்மாள் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். காந்தியடிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று கணவர் மாசிலாமணியும் சேர்ந்து மனைவியுடன் களமிறங்கினார். 20 ஜனவரி, 1941- இல் தூத்துக்குடி கடற்கரையில் காலை 10 மணிக்கு சத்தியாகிரகம் செய்து மாசிலாமணி கைதானார். அவருக்கு ஆறு மாதச் சிறை தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது. கணவர் கைதுக்குப் பின்னர் ஜெபமணி அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தார். அவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனையும் ரூ. 200 அபராதமும் விதிக்கப்பட்டது.

அரசியல் பணி

[தொகு]

1934 மற்றும் 1937 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் மாகாண சட்டமன்றத் தேர்தலில் ஜெபமணி காங்கிரஸ் கட்சியினரின் வேட்பாளாராக தூத்துக்குடி தொகுதியில் களமிறங்கினார்[1]. 3680 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றவர், மதராஸ் மாகாணத்தின் சட்டமன்றத்தில் நுழைந்த முதல் கிறிஸ்துவப் பெண்ணானார்.

கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்க்க மேய்ச்சல் நிலங்களைத் தனியே ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் இதனால் வேளாண் நிலங்கள் பாதிக்கப்படாது என்றும் சட்டசபையில் வலியுறுத்தினார் ஜெபமணி. விவசாயிகள் நலம் காக்க இந்த நடவடிக்கையை அரசே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இவர் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டமன்ற உறுப்பினராக அரசியல் பணியைத் தொடர்ந்தார்.

இறப்பு

[தொகு]

1949 ஆம் ஆண்டு மாசிலாமணி மரணமடைந்தார். அத்துடன் தன் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஜெபமணி அம்மாள். பல்லாவரத்தில் தன் மூத்த மகன் ராஜா ஜோசப்பின் வீட்டில் இறுதிக் காலத்தைக் கழித்த ஜெபமணியம்மாள், நவம்பர் 7, 1977 அன்று மரணமடைந்தார்.

தூத்துக்குடி அடுத்த கிராமம் ஒன்றின் நூலகத்திற்கு மாசிலாமணிப் பிள்ளையின் பெயர் சூட்டப்பட்டு அங்கு அவரது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெபமணி அம்மாளின் நினைவாக இதுவரை எந்தச் சிலையும், உருவப்படமும் இடம்பெறவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 லூயிஸ், நிவேதிதா (2019). முதல் பெண்கள் (2nd ed.). p. 213.
  2. 2.0 2.1 "தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்கள் பாகம் - 13". TNPSC THERVU PETTAGAM.
  3. 3.0 3.1 "History of tamilnadu freedom fighter jebamani maasilamani". தமிழருவி.
  4. "மாசிலாமணி பிள்ளை ஜெபமணி அம்மாள்". Azadi ka Amrit Mahotsav.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெபமணி_மாசிலாமணி&oldid=4237355" இலிருந்து மீள்விக்கப்பட்டது