ஜீன்-பிரான்கோயிஸ் சாம்போலியன்
ஜீன்-பிரான்கோயிஸ் சாம்போலியன் | |
---|---|
லியோன் காக்னிட் வரைந்த ஜீன்-பிரான்கோயிஸ் சாம்போலியன் ஓவியம் | |
பிறப்பு | 23 திசம்பர் 1790 ஃபிகேக், பிரான்சு |
இறப்பு | 4 மார்ச்சு 1832 பாரிஸ், பிரான்சு | (அகவை 41)
துறை | எகிப்திய சித்திர எழுத்துகள் |
கல்வி கற்ற இடங்கள் | பிரான்ஸ் கல்லூரி Institut national des langues et civilisations orientales |
அறியப்படுவது | எகிப்திய சித்திர எழுத்துகளை புரிந்துகொள்ளுதல் |
துணைவர் | ரோசின் பிளாங்க் |
பிள்ளைகள் | 1 |
ஜீன்-பிரான்கோயிஸ் சாம்போலியன் (Jean-François Champollion, பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ fʁɑ̃swa ʃɑ̃pɔljɔ̃] ) அல்லது சாம்போலியன் தி யங்கர் ('தி யங்கர்'; 23 திசம்பர் 1790 – 4 மார்ச் 1832) என்பவர் ஒரு பிரெஞ்சு மொழியறிவியலாளர், கீழ்த்திசை மொழிப்புலமையாளர் ஆவார். இவர் முதன்மையாக எகிப்திய சித்திர எழுத்துகளின் புதிர் விடுவிப்பாளராகவும், எகிப்தியவியல் துறை நிறுவன நபராகவும் அறியப்படுகிறார். இவரது அண்ணனான ஜாக் ஜோசப் சாம்போலியன்-ஃபிகேக் என்பவரின் வழிகாட்டுதலில், தன் பதின்ம வயதின் நடுப்பகுதியில் எகிப்தின் பண்டைய எழுத்துகளை புரிந்துகொள்வது குறித்த தனது முதல் ஆய்வறிக்கையை சமர்பித்தார். ஒரு இளைஞனாக, இவர் அறிவாய்வு சார்ந்த வட்டாரங்களில் புகழ்பெற்றார். மேலும் காப்டிக், பண்டைய கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், அரபு மொழிகளில் பேசுபவராக இருந்தார்.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், எகிப்து மீது நெப்போலியன் படையெடுத்தபோது, அவர் பல அறிவியலாளர்களையும், அறிஞர்களையும் உடன் எகிப்த்துக்கு அழைத்துச் சென்றார். 'எகிப்தோமேனியா ' என்று குறிக்கப்பட்டும் அக் காலத்தில் எகிப்தின் பண்டைய வரலாறு குறித்த ஆர்வம் உண்டானது. நெப்போலியன் எகிப்தில் தனது போர்த்தொடரின் போது (1798-1801) எகிப்தில் மும்மொழி ரொசெட்டாக் கல் கண்டுபிடிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. அறிஞர்கள் எகிப்திய நாகரிகத்தின் காலம் மற்றும் உருவரை எழுத்துமுறையின் தன்மை, அது எந்த மொழியில் பதிவுசெய்யப்பட்டது, ஒலிப்பு (பேச்சு ஒலிகளைக் குறிக்கின்றன) அல்லது கருத்தியல் (சொற்பொருள் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்தல்) ஆகியவற்றை விவாதித்தனர். எழுதுகள் புனிதமான மற்றும் சடங்கு செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும், அது மறைமுக மற்றும் மெய்யியல் கருத்துக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்யாததால், அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்க வாய்ப்பில்லை என்று பலர் நினைத்தனர். ஆனால் சாம்பொலியனின் இந்த அனுமானங்கள் தவறானவை என்று கருதினார். மேலும் பண்டைய எகிப்தியர்களால் பதிவுசெய்யப்பட்ட பல வகையான தகவல்களை மீட்டெடுக்கத் தொடங்கினார்.
சாம்பொலியன் பிரான்சில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த காலத்தில் வாழ்ந்தார். இந்த சூழல் இவரது ஆராய்ச்சிகளை பல்வேறு வழிகளில் சீர்குலைக்கதக்க அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்துவந்தது. நெப்போலியப் போர்கள்களின் போது, இவரால் கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க முடிந்தது. ஆனால் இவரது நெப்போலியன் விசுவாசத்தால் அடுத்தடுத்த ஆட்சியர்களால் சந்தேகத்திற்குரியவராக கருதப்பட்டார். ஜோசப் ஃபூரியே மற்றும் சில்வெஸ்ட்ரே டி சேசி போன்ற முக்கியமான அரசியல் மற்றும் அறிவியல் சார் பிரமுகர்களுடனான இவரது உறவுகள் இவருக்கு உதவியது, இருப்பினும் சில காலம் இவர் அறிவியல் சார் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கபட்டார்.
1820 ஆம் ஆண்டில், சாம்பொலியன் உருவரை எழுத்துமுறையைப் புரிந்துகொள்ளும் முனைப்பில் தீவிரமாக இறங்கினார். விரைவில் 1819 க்கு முன்னர் அந்த எழுத்து முறைகளை புரிந்துகொள்வதில் முன்னோடியான பணிகளில் ஈடுபட்ட பிரித்தானிய பல்துறையறிஞரான தாமஸ் யங்கின் சாதனைகள் மங்கும்படி பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் ஆய்வுகளை மேற்கொண்டார். தன்னுடைய 30 வது வயதில் தன் குறிப்புகளை தொகுத்து முடித்தார். கேநோபிலில் இருந்து பாரீசுக்கு சென்று ரொசெட்டாக் கல்லின் சித்திர எழுத்துகளைத் தீவிரமாக வாசித்தார். கடின உழைப்பின் பயனாக செனட்டா கல்லின் மர்மத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். சாம்பொலியன் ரொசெட்டா கல்லில் இருந்த எழுத்துமுறையைப் புரிந்துகொள்வதில் திருப்புமுனையை ஏற்படுத்திய முதல் கருத்தியலை வெளியாட்டார். இந்த எகிப்திய எழுத்து முறையானது ஒலிப்பு மற்றும் கருத்தியல் குறியீடுகளின் கலவை என்பதை வெளிப்படுத்தினார். 1824 ஆம் ஆண்டில், இவர் ஒரு குறிப்புரையை வெளியிட்டார், அதில் இவர் எகிப்திய சித்திர எழுத்துகளின் புதிரை விடுவிகும் வகையில் அவற்றின் ஒலிப்பு மற்றும் கருத்தியல் அடையாளங்களை விளக்கி விவரித்தார். 1826 ஆம் ஆண்டில் ஜானின் மேதமைக்காக இத்தாலியின் லூவர் அருங்காட்சியகத்தின் எகிப்து சின்னங்களின் காப்பாளராகப் பணியில் அமர்த்தபட்டார்.[1] 1829 ஆம் ஆண்டில், இவர் எகிப்துக்குச் சென்றார், அங்கு இவர் இதுவரை ஆய்வு செய்யாத பல சித்திர எழுத்துகளைப் படித்தார். மேலும் சித்திர எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகளின் புதிய வரைபடங்கள் கொண்ட பெரிய தொகுப்பை வீட்டிற்கு கொண்டு வந்தார். 1830இல் இவருக்கு எகிப்தியலில் (எகிப்த்து பழமை காப்பு மையம்) பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் இவரது உடல் நிலையால் நீண்டகாலம் இப்பணியில் ஈடுபட முடியவில்லை. எகிப்திய சித்திர எழுத்துகளின் ஆய்வில் மேற்கொண்ட கடின உழைப்பினால் ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பால், பேராசிரியர் பணியைக் கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் தன் 41 வது வயதில் 1832 இல் பாரிஸில் இறந்தார். இவரது பண்டைய எகிப்திய இலக்கணம் இவரது இறப்பிற்குப் பின் வெளியிடப்பட்டது.
இவரது வாழ்நாளிலும், இவரது மரணத்திற்குப் பிறகும், எகிப்தியவாய்வாளர்கள் மத்தியில் இவரது புரிந்துகொள்ளுதலில் உள்ள தகுதிகள் பற்றிய தீவிர விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. யங்கின் துவக்கக்காலக் கண்டுபிடிப்புகளுக்குப் போதிய அங்கீகாரத்தை இவர் வழங்கவில்லை என்று சிலர் இவரைக் குறைகூறினர். இவர் மீது கருத்துத் திருட்டு குற்றம் சாட்டினர். மற்றவர்கள் நீண்ட காலமாக இவரது புரிந்துகொள்ளுதலில் உள்ள துல்லியத்தை மறுத்தனர். ஆனால் இவரது முடிவுகளைக் கொண்டு ஆய்வில் முன்னேறிய அறிஞர்களால் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் மற்றும் உறுதிப்படுத்தல்கள் படிப்படியாக இவரது படைப்புகளை பொதுவாக ஏற்றுக்கொள்ளலும் நிலைக்கு கொண்டுவந்தன. யங்கின் பங்களிப்பை இவர் ஒப்புக்கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் இன்னும் வாதிட்டாலும், இவரது விளக்கங்கள் தற்போது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆய்வுத் துறையின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. இதன் விளைவாக, இவர் "எகிப்தியலின் நிறுவனர், தந்தை" என்று கருதப்படுகிறார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "குழந்தை மேதைகள் 14: எகிப்தின் வரலாற்றை உலகறியச் செய்தவர்!". Hindu Tamil Thisai. 2023-03-08. பார்க்கப்பட்ட நாள் 2023-05-27.
- ↑ Bianchi 2001, ப. 261.