ஜி சியான்லின்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இஞ்சி சியாலின் Ji Xianlin | |
---|---|
பிறப்பு | லின்ச்சிங், இழ்சடாங், சிங் குலம் | ஆகத்து 6, 1911
இறப்பு | சூலை 11, 2009 பெய்ச்சிங், சீனக் குடியரசு | (அகவை 97)
தொழில் | மொழியறிஞர், தொல்லெழுத்து அறிஞர், வரலாற்று அறிஞர், எழுத்தாளர் |
தேசியம் | சீனர் |
பிள்ளைகள் | இஞ்சீ செங் Ji Cheng [1] |
ஜி சியான்லின் (ஆகஸ்ட் 6, 1911 – ஜூலை 11, 2009) ஒரு பன்முகக் கலைஞர். இந்திய சீன மொழியியல் ஆய்வாளராக, எழுத்தாளராக, வரலாற்று ஆசிரியராக என்று பல அடையாளங்களுடன் திகழ்ந்த இவர் பிறந்தது சீனாவில் கிங்பிங் (இது தற்போது லின்ச்சிங் என்று அழைக்கப்படுகிறது) நகரில். மறைந்தது பெய்ஜிங் நகரில். ஜி சியான்லின், தன்னுடைய நேர்மை, நாணயம் போன்ற சிறந்த குணநலன்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர். சீனத் தலைவர் வென்ஜியாபாவ் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜி சியான்லின் தான் தன்னுடைய வழிகாட்டி என்று சொல்லி இருக்கிறார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]ஜி சியான்லின் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் பிறந்தார். சனேஜி, ஜினன் ஆகிய ஊர்களில் பள்ளிப்படிப்பையும், ஷாந்தோங் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியையும் முடித்த ஜி சியான்லின், சிங்குவா பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய இலக்கியம் படித்தார். கோத்தின்ஜன் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், பாலி முதலான புராதன மொழிகளைக் கற்றார். 1941-ல் முனைவர் பட்டம் பெற்றார். அதன்பிறகு வழக்கற்றுப் போன இந்திய ஐரோப்பிய மொழிவகைகள் குறித்து கற்றறிந்து, 1946-ல் சீனா திரும்பி பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார்.
அதன் பின் வாழ்நாள் அர்ப்பணிப்பில் இந்திய மொழிகள், இந்தியக் கலாச்சாரம் ஆகியவை குறித்த ஆராய்ச்சிகளில் சைனாவின் முக்கிய ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். இந்தியாவிலிருந்து புத்தமதம் சைனாவுக்குப் பரவிய விதம் தொடங்கி, சைனாவிலிருந்து காகிதம் பட்டு போன்றவை எப்படிப் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பது வரை பரவலாகவும் ஆழமாகவும் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் கிழக்கு ஆசிய மொழிகளுக்காகத் தனித் துறையையே தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 40 கட்டுரைகளும் 13 ஆய்வுக் கட்டுரைகளும் அந்தத் துறை சார்பில் வெளிவரச் செய்தார். 1956-ஆம் ஆண்டு சீன அறிவியல் கழகத்தின் சமூக அறிவியல் பிரிவுக்கு ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1966க்கும் 1976-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சைனாவில் கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டிருந்த போது (en:Cultural Revolution) சைனாவின் முன்னேற்றத்துக்குத் தடையாக பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன என்கிற நம்பிக்கை வலுப்பெற்று, பழைய இலக்கியங்கள், கலாச்சார நடவடிகைகள், பழக்க வழக்கங்கள், தொல்பொருட்கள் எல்லாமே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காலகட்டத்தில் ஜி சியான்லின் மிகத் துணிச்சலாக ஒருகாரியம் செய்தார். ரகசியமாக இராமாயணத்தை அதன் கவிதை நடை சிதையாமல் சீன மொழியில் மொழி பெயர்த்தார். 1998-ல் MEMOIRS FROM THE COWSHED என்கிற நூலில் அந்தக் காலகட்டத்தில் தன்னுடைய வாழ்வில் நேர்ந்த கடினமான அனுபவங்களை விளக்கி உள்ளார்.
1978-ல் ஜி பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் துனைத் தலைவராகவும் சீன அகாதெமியின் தெற்காசிய ஆய்வுமையத்தின் இயக்குநராகவும் பதவியில் அமர்ந்தார். மொழியியல் சம்பந்தமான பல அமைப்புகளில் (Chinese Foreign Literature Association, Chinese South Asian Association, Chinese Language Society) தலைமைப் பொறுப்பை ஏற்றார். சீனாவின் கலாச்சாரம், தெற்காசியத் தொடர்பு, சம்ஸ்கிருத மொழி, மற்றும் கலாச்சார மொழியியல் ஒப்பீடுகள் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் 11 நூல்கள், 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். 1998-ல் வழக்கொழிந்து போன இந்திய நாட்டியக்கலையின் ஓர் அம்சம் (மைத்ரேயசமிதி நாடகம்) குறித்த மொழிபெயர்ப்பு பகுப்பாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டார்.
இந்திய சரித்திரம் பற்றிய நூல், சீன கரும்புச் சர்க்கரை பற்றிய நூல் என்று இவருடைய படைப்புகளின் எண்ணிக்கை நீளும். 24 பாகங்களாக இவருடைய எல்லா எழுத்துக்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகள், சீன இந்திய கலாச்சார உறவுகள், புத்தமதம், நாட்டுப்புற இலக்கியம், இலக்கிய மொழிபெயர்ப்புகள் என்று பலவகை எழுத்துக்களும் அவற்றில் உள்ளன.
உடல்நிலையும் குறிப்பாகக் கண்பார்வையும் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட தன் எழுத்துப்பணியையோ ஆராய்ச்சிப் பணியையோ நிறுத்தாத ஜி சியான்லின், தன் 98-ஆம் வயதில், ஜூலை 11 2009-ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஜி சியான்லினின் கொள்கைகள்
[தொகு]“கலாச்சாரப் பரிமாற்றம் மட்டுமே மனிதத்தின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமான ஒன்று. அடுத்த சமூகத்தின் நற்குணங்களையும் நல்ல தன்மைகளையும் அறிந்து பின்பற்ற முன்வரும் போதுதான் சமூகத்தில் முன்னேற்ற நிலையும், இணக்கமான சூழலும் சாத்தியப்படும்” என்று அழுத்தமாக நம்பினார் ஜி.
அவரைப் பொருத்தவரை மனிதக் கலாச்சாரம் நான்கு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. சீன-இந்தியக் கலாச்சாரம், அராபிய இஸ்லாமியக் கலாச்சாரம், ஐரோப்பியக் கலாச்சாரம், அமெரிக்கக் கலாச்சாரம். இவற்றின் கலப்பு ஏற்படவேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு அதற்கான கருத்தரங்குகள், ஏற்பாட்டு நிகழ்வுகள் என்று எது நடந்தாலும் அவற்றில் ஆர்வமாகப் பங்கேற்றார்.
“சீனக் கலாச்சாரம் என்கிற நதியில் நீர்ப் போக்கு சிலசமயம் அதிகமாகவும் சில சமயம் குறைவாகவும் இருந்திருக்கிறது. அது என்றுமே காய்ந்து போய் விடாமல் அதற்கு புதுநீர்ப் பாய்ச்சல் கொடுத்ததில் இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு” என்று பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பரிசுகளும் விருதுகளும்
[தொகு]- 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம நாள் சீன கன்ஃப்யூஷியஸ் அமைப்பு, ‘ஜி சியான்லின் ஆராய்ச்சி நிறுவனம்’ ஒன்றை ஏற்படுத்தியது. அதில் ஜி சியான்லின்னுடைய படைப்புகள் மட்டுமே சிறப்பு ஆராய்ச்சி செய்யப்படுகின்றன.
- 2006 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனை விருது அளித்து கௌரவித்தது.
- 2008 ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது. முதன்முறையாக ஒரு சீனருக்கு அந்த விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. உடல்நலமின்றி மருத்துவமனையிலிருந்த ஜி சியான்லின்னுக்கு அந்த விருதினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி நேரில் சென்று வழங்கிச் சிறப்பித்தார்.