ஜாவி கோயில், கிழக்கு ஜாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாவி கோயில்

ஜாவி கோயில் (Jawi temple) ( இந்தோனேசிய மொழி: Candi Jawi , அசல் பெயர்: Jajawa), இந்தோனேசியாவில் உள்ள, சிங்காசாரி ராச்சியத்தைச் சேர்ந்த இந்து-பௌத்த கோயிலாகும். இக்கோயில் 13 நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகும். இக்கோயில் இந்தோனேசியா, கிழக்குச் சாவகத்தில் பசுருவான், கேகமடான் பிரிகேன், சன்டி வேட்ஸ் கிராம வெலிராங் மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. பசுருவான் நகரத்திற்கு 31 கிலோ மீட்டர் மேற்கே அல்லது சுரபாயாவிற்கு 41 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது.[1] இக்கோயில் கெகமதன் பாண்டன் - கெகமதன் ப்ரிஜென் மற்றும் பிரிங்கேபுகான் இடையே உள்ள முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஒரு இந்து-பௌத்த வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. இருப்பினும் சிங்காசாரியின் கடைசி மன்னரான கெர்த்தனேகர என்னும் மன்னரை கௌரவிப்பதற்காக இந்த கோயில் சவக்கிடங்கு கோயிலாக அர்ப்பணிக்கப்பட்டது. மறைந்த மன்னரின் அஸ்தி சிங்காசாரி மற்றும் ஜாகோ கோயில் ஆகிய இடங்களில் உள்ள மேலும் இரண்டு கோயில்களிலும் வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

நாகரக்ரேதகமா எனப்படுகின்ற நூலில் 56 ஆவது காண்டத்தில் இந்த கோயில் ஜஜவா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்காசாரி மன்னர் கெர்த்தனேகர மன்னர் சைவ-பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது. அவர் இவ்வாறான, இரு மதங்களுக்குமான ஒத்திசைவை ஆதரித்து வந்தார்.[1]

கட்டிடக்கலை[தொகு]

கோயில் வளாகம் 40 x 60 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 2 மீட்டர் உயர சிவப்பு செங்கல் சுவர் இணைந்த நிலையில் உள்ளது. கோயிலைச் சுற்றி பூக்கும் தாமரை செடிகளைக் கொண்ட அகழி உள்ளது. இந்த கோயில் 24.5 மீட்டர் உயரத்தில் 14.2 x 9.5 மீட்டர் அடித்தளத்தில் கொண்டுள்ளது.[1] கோயில் அமைப்பானது மிகவும் உயரமாக உள்ளது. அதன் கோபுரம் போன்ற கூரையானது கியூப்புகள் மற்றும் ஸ்தூபிகளின் இணைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை செல்லாவின் (செவ்வியல் கட்டுமானத்தில் கோயிலின் உள் பகுதி) கதவு மற்றும் பிரதான படிக்கட்டுகள் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளன.

நாகரக்ரேதகமா[தொகு]

ரோவுலன் அருங்காட்சியகத்தில் உள்ள ஜாவி கோயிலின் சிறிய வடிவ மாதிரி

நாகரக்ரேதகமா என்ற கவிதை நூலின்படி கி.பி.1359 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணங்களில் ஒரு நீட்டிக்கப்பட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்து திரும்பியதும் மஜாபகித்தின் மன்னரான ஹயாம் வுரூக் வெலிராங் மலையின் கிழக்குச் சரிவில் இருந்த இந்தக் கோயிலின் அருகே வந்தார். அவருடைய நோக்கம் சிங்காசாரியின் கடைசி மன்னரான அவரது கொள்ளுத்தாத்தாவான கெர்த்தனேகர நினைவாகக் கட்டப்பட்ட அந்தக் கோயிலில் எதையாவது படைக்க வேண்டும் என்பதேஅவரது நோக்கமாக இருந்தது. .நாகரக்ரேதகமாவில் இந்தக் கோயில் வளாகத்தின் சிறப்புத் தன்மை மிகவும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. முதன்மையான கட்டட அமைப்பு மிகவும் வித்தியாசமான பாணியில் அமைந்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அது பௌத்த ஆபரணம் சூட்டப்பட்ட நிலையில் அமைந்த சைவக்கோயில் ஆகும். அவ்வகையில் அது தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. கெர்த்தனேகர பின்பற்றி வந்த மேம்பட்ட மத தத்துவத்தை இது தெளிவாக பிரதிபலித்தது, அவர் இறந்தபோது 'சிவபௌத்த' நிலைக்கு திரும்பியதாகக் கூறப்பட்டார். இந்தக் கோயிலில் மன்னரின் இரண்டு சவக்கிடங்கு சிலைகள் இருந்தன. இது இரு மதங்களின் சாரத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும், பிரபங்கா தனது கவிதையில் விளக்குவது போல, 1331 ஆம் ஆண்டில் இக் கோயிலை மின்னல் தாக்கிய நேரத்தில் அங்கிருந்த புத்த அக்ஷோபியாவின் உருவம் மர்மமாக மறைந்துவிட்டது. சிலை மறைந்துவிட்டது என்று அனைவரும் வருத்தப்பட்ட நிலையில், இது புத்தரின் மிகச்சிறந்த வெளிப்பாட்டின் அடையாளமாக, சூன்யதா என்ற நிலையில் ,ஏற்றுக்கொள்ளப்பட்டது, அது இல்லாதது அல்லது ஒன்றுமில்லாதது என்ற நிலையைக் குறிப்பதாகும்.[2]

அக் கோயிலின் முக்கிய இடங்களில், குறிப்பாக கோஷ்டங்களில் நந்தீஸ்வரர், துர்கா, விநாயகர், நந்தி மற்றும் பிரம்மா போன்ற சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன, இருப்பினும் இந்த சிலைகள் அகற்றப்பட்டு அருங்காட்சியகங்களில் சேமிப்பில் வைக்கப்பட்டுள்ளன. துர்காவின் சிலை சுரபயாவின் எம்பு டான்டுலர் அருங்காட்சியகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள சிலைகள் ரோவுலன் அருங்காட்சியகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பிரம்ம சிலை காணவில்லை, சிலைகளின் உடைந்த துண்டுப் பகுதிகள் கோயிலின் உள்ளே உள்ள ஒரு அறையில் உள்ளன.. இந்த கோயில் இரண்டு முறை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு உட்பட்டது, முதலாவதாக 1938–1941 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயும், இரண்டாவதாக 1975–1980 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயும் சீரமைப்பு நடந்தது. கோவில் புனரமைப்புப் பணியானது 1982 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Candi Jawi". Perpustakaan Nasional Republik Indonesia இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103182721/http://candi.pnri.go.id/jawa_timur/jawi/jawi.htm. 
  2. "Shiwa – Buddha". East Java.com, Memory of Majapahit. http://www.eastjava.com/books/majapahit/html/shiwa.html. 

வெளி இணைப்புகள்[தொகு]