உள்ளடக்கத்துக்குச் செல்

சாவக மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாவா மனிதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாவக மனிதனின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமான சஙீரானிற் கண்டெடுக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழைமையானவை எனக் கருதப்படும் மானிட மண்டையோடுகள்

ஜாவா மனிதன் என்பது 1891 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின், கிழக்கு சாவகத்தில் உள்ள பெஙாவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஓமோ எரெக்துசு (Homo erectus) என்னும் உயிரியற் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபொய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus)[1] என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது.

வரலாறும் முக்கியத்துவமும்

[தொகு]

டுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதிற் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆய்வுகள்

[தொகு]
மருத்துவர் யூசின் டுபாய்(1858–1940)
வோன் கேனிக்சுவல்டு

குரங்கு மனிதனைக் குறித்த ஆய்வுகளில் இருவர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானதாக உள்ளன.

யூசின் டுபாய்

[தொகு]

1891 ஆம் ஆண்டு, டாக்டர் யூசின் டுபாய் (Eugène Dubois), என்னும், இடச்சுப் படையைச் சேர்ந்த மருத்துவர், ஜாவா தீவின் நடுவே, திருநில் என்னும் சிற்றூருக்கு அருகிலுள்ள சோலோ ஆற்றுப்படுகையிலே, ஆறு அறுத்துச் சென்றமையால், இப்போதுள்ள தரைமட்டத்திற்கு அறுபது அடி கீழே காணப்படும் எரிமலை மண் படிவிலே, சில பாசில் எலும்புகளைக் கண்டெடுத்தார்.[2] டுபாய் மருத்துவராய் இருந்ததமன்றி, மானிடவியல் ஆராய்ச்சியிலும் விருப்பமிக்கவர். மனித இனத்தின் பரிணாம இரகசியங்களை சாவா போன்ற இடங்களில் அறியலாம் என்பது அவருடைய திடநம்பிக்கை. இந்த நோக்கத்துடனேயே அவர் அந்நாட்டுக்கு வந்தார். திருநில்லில் அவருக்கு முதலில் அகப்பட்ட அந்தப் பாசில்கள் மண்டையோட்டின் மேற்பகுதி ஒன்று, தொடையெலும்பு ஒன்று. வேறாகக்கிடந்த மேற்கடை வாய்ப்பற்கள் இரண்டு, சிலகாலம் சென்ற பிறகு ஒரு முன் கடைவாய்ப் பல், அதே படிவுகளில் கிடைத்தது. இந்தப் படிவுகளின் காலம், பிளைஸ்ட்டோசீன் பனிக் கட்டிக் கால வட்டங்களிலே முதல் வட்டத்தின் முடிவு. ஐரோப்பாவில் இரண்டாம் பனிக்கட்டிக் காலம் நடந்து கொண்டிருந்தபோது, அதாவது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஜாவாவில் எரிமலை பொங்கியிருக்க வேண்டும். அந்தப் படிவிலே இவ்வெலும்புகள் பாசில்களாகிக் கிடைத்திருக்கின்றன. ஜாவா தீவு, பிளையோசீன் காலத்திலும், ஆதி பிளைஸ்ட்டோசீன் காலத்திலும், அதாவது சுமார் பத்துலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆசியாக் கண்டத்தின் அகல்நிலப் பகுதியோடு இணைந்திருந்தது. பிறகே சாவாத் தீவாக மாறிற்று எனக் கருதிகின்றனர்.

வோன் கேனிக்சுவல்டு

[தொகு]

1938 ஆம் ஆண்டு, அதே புவியியற்காலக் கிடைமட்டத்தில், பொன் கேனிக்ஸ்வல்டு (Von Koenigswald) என்பவ,ர் அந்த ஓட்டை எல்லா அமிசங்களிலும் ஒத்த ஓர் ஓட்டைக் கண்டெடுத்தார்.[3] அது முன்கண்ட ஓட்டைக் காட்டிலும் முழுமையானது. ஆனால், அது சிறியது. அது ஒரு பெண்ணின் தலையோடு ஆகும். பிறகு, இதே ஜாவாவகையைச் சேர்ந்த ஓடுகள் நான்கும், நான்கு கீழ்த்தாடைகளும் அகப்பட்டன. ஜாவாவின் கிழக்குக் கோடியில், 'மோடு ஜொக்கார்ட்டா' என்னும் இடத்தில், கேனிக்ஸ்வல்டு, 'பிளைஸ்ட்டோசீன்' தொடக்கக் காலத்துக்குரிய படிவில் ஒரு குழந்தையின் ஓட்டைத் தோண்டியெடுத்தார். முதலில் டுபாய் கண்டெடுத்த இரண்டு கடைவாய்ப் பற்களும், வானரப் பண்புடையவை. அவை பிதிக்காந்த்திரோப்பஸ் ஓட்டுக்குச் சம்பந்தப்பட்டவையல்ல. அக்காலத்திலிருந்த ஏதோ வானரத்தின் பற்கள். முன்கடைவாய்ப் பல் என்னவோ மனிதப் பண்புள்ளதே. இந்தப்பல் பிதிக்காந்த்திரோப்பஸின் பல்லே என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது.இனி, பிதிக்காந்த்திரோப்பஸ் இரெக்ட்டஸின் மண்டையோட்டில் அடைத்துக்கொண்டிருந்த மண் முதலியவற்றை அகற்றிவிட்டு, அதன் உட்புறப்பரப்பை ஆராய்வதற்காக வார்ப்பு எடுத்தனர். அந்த எலும்பைக்கொண்டு தலையின் அளவைக் கணக்கிட்டனர். மண்டையோடு மூளையின் வடிவத்தோடு நெருங்கியிருக்கும், அதில் அடங்கியிருந்த மூளை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கவேண்டும் என்றும், வார்ப்பிலிருந்து மூளையின் எவ்வெப்பாகங்கள் எவ்வெவ்வள வுக்கு வளர்ச்சியுற்றிருந்தன என்றும் ஆராய்ந்து முடிவு எடுத்தனர்.

அம்முடிவுகளைப் பார்க்கும்போது, டுபாய் கண்டெடுத்த ஓட்டிற்குரிய மூளையளவு 950 க. செ. அது ஓர் ஆண் என எண்ணுகின்றனர். பெண் ஓட்டிற்குரிய மூளை 750 க. செ. குழந்தை யோட்டின் அளவு 650 க. செ. இருந்தது ; அது வளர்ந்து முதிர்ச்சியுற்றால் அதன் அளவு 800-900 வரை ஆகலாம். ஆதலால் பிதிக்காந்த்திரோப்பஸ் மனிதனே என்றுத் தெளிவாகியது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவக_மனிதன்&oldid=3761244" இலிருந்து மீள்விக்கப்பட்டது