உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் ஹோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஹோல்ட்
1980இல் ஜான் ஹோல்ட்
பிறப்பு(1923-04-14)ஏப்ரல் 14, 1923
நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசெப்டம்பர் 14, 1985(1985-09-14) (அகவை 62)
பணிநூலாசிரியர் , பயிற்றுநர்

ஜான் கால்டுவெல் ஹோல்ட் (ஏப்ரல் 14, 1923 - செப்டம்பர் 14, 1985) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கல்வியாளர், வீட்டுக்கல்வியின் ஆதரவாளரான இவர் இளைஞர்களின் உரிமை கோட்பாடுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்தார்.[1]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜான் கால்ட்வெல் ஹோல்ட் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். பட்டப் படிப்பை முடித்ததும் அமெரிக்க கப்பற்படையில் சேர்ந்து, இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கி யுத்தக்கப்பலில் படை வீரராக பணியாற்றினார். போரின் முடிவுக்குப் பின் அணு ஆயுதப் பெருக்கம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து ,, அமெரிக்க கப்பல் படையிலிருந்து வெளியேறி, பெடரலிஸ்ட் அமைப்பில் இணைந்து அணு ஆயுத எதிர்ப்பு பரப்புரையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.தமது தங்கையின் விருப்பத்திற்கிணங்க, நியூயார்க் நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.பல ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிபுரிந்து, மாணவர்களை தரம் உயர்த்த முயன்றும் அவரால் பெரிய அளவில் எதையும் செய்ய இயலவில்லை. அவர், கல்வியில் மாணவர்களது சுயவிருப்பம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்தார். விரைவில் பாஸ்டன் நகர் பள்ளிக்கு ஆசிரியராகச் சென்றார். கிராமம், நகரம் என எங்கும் கல்வியின் மந்தப் போக்கும், வகுப்பறை வன்முறையும் ஒன்றாகவே உள்ளதை கண்டறிந்தார்.[1]

நூல்கள்[தொகு]

தமது சக ஆசிரியரான பில்ஹீல் என்பவரோடு இணைந்து பள்ளிக் கல்வி செயல் திட்ட சோதனைகளில் நேரடியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.ஒருவர் கற்பிக்கும் போது மற்றவர் கவனிக்க வேண்டும் என்பதே அந்த சோதனையின் மையக் கரு .பத்தாண்டுகள் கடுமையாக பயிற்சி சோதனைகளை நடத்தி, ஆயிரக்கணக்கான குழந்தைகளிடம் நேரடி ஆய்வு நடத்தி தொகுத்த செய்திகளை, புள்ளி விவரங்களோடு, ஆதாரங்களோடு நூல்களாக வெளியிட்டார்.[1][2]

குழந்தைகள் ஏன் தேர்வில் தோற்கிறார்கள்[தொகு]

பதினொரு ஆண்டு ஆசிரியப்பணிக்குப் பின் 1964 ஆம் ஆண்டு, ‘ குழந்தைகள் ஏன் தேர்வில் தோற்கிறார்கள் ? ‘(How children Fail?) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். மேலும், ‘ குழந்தைகள் தேர்வில் தோற்பதற்கு காரணம், பள்ளியால் வரும் பயம் தான்’ என்பதை தமது ஆய்வின் முடிவாக அறிவித்தார்.இந்த நூல், குழந்தைகள் பள்ளிக் கூடத்தை விரும்பாதது ஏன் என்பதை ஆய்வு செய்துள்ளது என்பதால், அமெரிக்கா முழுவதும் அதன் தாக்கம் ஏற்பட்டது. ஜான் கால்ட்வெல் ஹோல்ட் பத்திரிக்கை முதல் தொலைக்காட்சி வரை எங்கும் பேச அழைக்கப்பட்டார். அவர் தமது கருத்துக்களை சமரசம் செய்து கொள்ளாமல் துணிவுடன் வெளிப்படுத்தினார்.[1][2]

குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்[தொகு]

‘ குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் ’ (How children learn) என்னும் நூலை 1967 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில் பள்ளிக்கூடங்களின் பலவீனத்தை மிக அழகாக ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். மேலும், “மனிதன் இயல்பாகவே கற்க விரும்பும் விலங்காவான், தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் விடப்பட்டால் அவன் அதிகம் கல்வி கற்க முடியும்” என்று அந்நூலில் குறிப்பிட்டார். குழந்தைகளின் கற்கும் முறையை விரிவாக, படிப்படியாக விளக்கியுள்ளார். கல்வியை குழந்தைகளின் விருப்பத்திற்கும், சுதந்திரத்திற்கும் விட்டுவிட அரசுகள் ஒருக்காலும் சம்மதிக்காது என்பதைக் கண்ட ஜான் கால்ட்வெல் ஹோல்ட், பள்ளிக்கே செல்லாமல் இருப்பது தான் அதிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார்.[1][2]

கல்விக்குப் பதிலாக[தொகு]

கல்விக்குப் பதிலாக (Instead of Education) என்றும் நூலை 1976 ஆம் ஆண்டு வெளியிட்டார். வீட்டிலிருந்தே சுதந்திரமாய் கல்வி கற்பது மிகவும் நல்லது என்று அந்நூலில் விவாதித்து சான்றுகளை முன்வைத்தார். அதையொட்டி அமெரிக்கா உட்பட பலநாடுகளில் ஜான் கால்ட்வெல் ஹோல்ட் ஆதரவாளர்கள் குழந்தைகளை பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளத் தொடங்கினார்கள்.[1][2]

குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிக்க[தொகு]

தங்களுக்கு எதிரான 'பள்ளி சார்ந்த – சாராத' வன்முறைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்கி, குழந்தைப் பருவத்தில் இருந்து தப்பிக்க(Escape from childhood) என்னும் நூலை வெளியிட்டார். அப்பொழுது, குழந்தைகளின் உரிமைகள் குறித்து உலகளாவிய விவாதங்களும், போராட்டங்களும் தொடர்ந்தன. குழந்தைகள் தாங்கள் சார்ந்திருக்க வேண்டிய மதம், பள்ளிக்கூடம், பெற்றோர் அல்லது பாதுகாவலரை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டுமென்பது ஜான் கால்ட்வெல் ஹோல்ட் கருத்து. குழந்தைகள் நலனுக்கான தனி பட்ஜட், குழந்தைகளுக்கும் ஒட்டுப் போடும் உரிமை என அவரது கனவுகள் பரந்து விரிந்தன. மேலும், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பாடமுறை மாற்றப்பட வேண்டுமென அவர் முன் மொழிந்தார்.[1][2]

மரணம்[தொகு]

ஜான் கால்ட்வெல் ஹோல்ட் 1985 ஆம் ஆண்டு காலமானர். அப்பொழுது 117 நாடுகளில் குழந்தை உரிமை பேராயங்கள் நிறுவப்பட்டிருந்தன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "John Holt (educator)". Wikipedia. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "'உலகக் கல்வியாளர்' ஜான் ஹோல்ட்". கீற்று. 17 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹோல்ட்&oldid=2918338" இலிருந்து மீள்விக்கப்பட்டது