ஜானக பெரேரா
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா Janaka Perera | |
---|---|
இலங்கை, வடமத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் | |
தனிநபர் தகவல் | |
இறப்பு | அக்டோபர் 6, 2008 அனுராதபுரம், ![]() |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பணி | அரசியல்வாதி |
தொழில் | இராணுவம் |
விருதுகள் | ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம், உத்தம சேவா பதக்கம் |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | ![]() |
கிளை | இலங்கை இராணுவம் |
பணி ஆண்டுகள் | 1967-2001 (34 ஆண்டுகள்) |
தர வரிசை | மேஜர் ஜெனரல் |
படையணி | கொமாண்டோ படை |
படைத்துறைப் பணி | இலங்கை இராணுவத் தளபதி, வட பிரதேச கட்டளைத் தளபதி, General Officer Commanding (GOC) of the 53 Division |
சமர்கள்/போர்கள் | 1987-89 கிளர்ச்சி, இலங்கை உள்நாட்டுப் போர் |
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா (Janaka Perera, இறப்பு: அக்டோபர் 6, 2008) இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியும், அரசியல்வாதியும் ஆவார். 34 ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரிந்த ஜானக பெரேரா 2001 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் ஆஸ்திரேலியா, மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் தீவிர அரசியலில் இறங்கி எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வடமத்திய மாகாணசபை தேர்தல்களில் போட்டியிட்டு அம்மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]. 2008, அக்டோபர் 6 இல் அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார். தமிழ் மக்களுக்கு எதிரான போரில் முதன்மைப் பங்கை வழங்கியவர் ஜானக பெரேரா. அதேவேளை பெருமளவில் தமிழின அழிப்புக்கும், யாழ்ப்பாணம் செம்மணி படுகொலைகளுக்கும் காரணமாக இருந்தார் என தமிழர் தரப்பு, மற்றும் பன்னாட்டு மன்னிப்பு அவை ஆகியன இவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளது[2].
வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]
ஜானக பெரேரா கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் நிலவியல் பட்டப்படிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டில் இவர் இலங்கை இராணுவத்தில் இணைந்தார்[3]. இங்கிலாந்தில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார்[4]. பயிற்சி முடிந்ததும் இவர் இரண்டாம் லெப்டினண்டாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொமாண்டோ படையில் சேர்ந்தார்[5].
இராணுவ சேவைகள்[தொகு]
1987-89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜேவிபியினரின் ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதில் இவருக்கு முன்னணிப் பங்கு உண்டு. அப்போது அவர் வடமேற்கு மாகாணத்தின் இராணுவத் தளபதியாகப் பணியாற்றினார்[4]. ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீரவைக் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கைக்கு இவர் தலைமை வகித்திருந்தார்[6].
ஈழப்போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில், முக்கியமாக யாழ்ப்பாணம், வெலிஓயா பகுதிகளில் இடம்பெற்ற போர்களில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விடுதலைப் புலிகளிடம் இருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்தப்பட்ட ரிவிரெச நடவடிக்கையில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார்[7].
2000 ஆம் ஆண்டில் இவர் இலங்கை இராணுவத்தினரின் Chief of Staff ஆக பதவி உயர்வு பெற்றார். இராணுவத்தின் உயர் பதவியான இராணுவத் தளபதி பதவி கிடைக்காமல் போகவே இவர் 2001 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இருந்து இளைப்பாறினார்[8].
போர்க்குற்றவாளி[தொகு]
யாழ்ப்பாணப் படையினர் இவரது தலைமையின் கீழ் இருந்த காலத்தில்தான் அங்கு பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி யாழ். செம்மணிப் பகுதியில் வைத்து இராணுவச் சிப்பாய்களால் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார். அத்துடன் 1996-97 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் குடாநாட்டில் எழுநூறுக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் பிடித்துச் கெல்லப்பட்டு இரகசியமாகக் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்ட சம்பவத்துக்கு இவரே பொறுப்பேற்க வேண்டும் என்று அப்போது பேசப்பட்டது.
செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் இராணுவம் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், தளபதி ஜானக பெரேராவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி விசாரித்து உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று, பன்னாட்டு மன்னிப்பு அவை உட்பட மனித உரிமை அமைப்புகள் குரலெழுப்பி வந்தன[2][9].
அரசியலில்[தொகு]
2001இல் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவுடன் ஜனக பெரேரா இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவராக அங்கு அனுப்பிவைத்தது இலங்கை அரசு. இவரது நியமனத்துக்கு எதிராக ஜூன் 2001 இல் சிட்னியில் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன. கிட்டத்தட்ட 300 தமிழர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கெதிரே கருப்புக் கொடி காட்டி தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்[2].
பின்னர் சிறிது காலம் இந்தோனேசியத் தூதராகவும் பணியாற்றினார். 2008 இல் நடந்த வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியிருந்தார் ஜானக பெரேரா. அந்த மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டார். அங்கு ஐக்கிய தேசியக் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. எனினும் ஏனைய வேட்பாளர்களை விட, வடமத்திய மாகாணத்தில் அதிகபடியான விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
படுகொலை[தொகு]
அனுராதபுரத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 2008, அக்டோபர் 6 திங்கட்கிழமை இடம்பெற்றபோது காலை 8:45 நிமிடமளவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஜானக பெரெராவும் அவரது மனைவி உட்பட 29 பேர் கொல்லப்பட்டு, 80 பேர் காயமடைந்தனர்[10]. இப்படுகொலை தொடர்பாக செங்கலடியைச் சேர்ந்த சண்முகநாதன் சுதாகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்த இவர் 2014 ஆகத்து 22 இல் வடமேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.[11] 2014 செப்டம்பர் 5 அன்று சுதாகரனுக்கு அனுராதபுரம் மேல்நீதிமன்ற நீதிபதி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கினார்.[12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1]
- ↑ 2.0 2.1 2.2 Suicide blast hits Sri Lanka town
- ↑ "Janaka rejects police bodyguards Firmly believes in military victory against LTTE, The Island". 2008-08-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 "SRI LANKA: THE UNTOLD STORY, Chapter 40: Rohana Wijeweera's killing - still a mystery". 2016-04-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maj. Gen. Janaka Perera retires after 34 years of service". 2009-12-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Can Janaka Deliver?". 2008-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "EELAM WAR III, Sri Lanka Army". 2008-09-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Maj. Janaka Perera's Politics". 2008-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ அநுராதபுரத்தில் குண்டுவெடிப்பு முன்னாள் இராணுவ உயரதிகாரி ஜானகப்பெரேரா அவரது மனைவி உட்பட 22 பேர் பலி! (உதயன்)
- ↑ "Major Gen Janaka Perera among 27 killed, 80 injured". 2008-10-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-06 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஜானக பெரேரா கொலை; புலி உறுப்பினருக்கு எதிராக செப். 5இல் தீர்ப்பு, தமிழ்மிரர், ஆகத்து 22, 2014
- ↑ Tiger sentenced to 20 yrs RI for killing Janaka, 30 others[தொடர்பிழந்த இணைப்பு], தி ஐலண்டு, செப்டம்பர் 6, 2014
வெளி இணைப்புகள்[தொகு]
- www.sundaytimes.lk
- Major General Janaka Perera's Vital Importance to Sri Lanka பரணிடப்பட்டது 2008-10-11 at the வந்தவழி இயந்திரம்
- Janaka Perera Recalled
- THE JAFFNA DEBACLE பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம்
- “I know nothing about politics” – Maj. Gen. Janaka Perera பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்