ஜஸ்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜஸ்பூர் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் உதம் சிங் நகர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரம் மற்றும் நகராட்சி வாரியம் ஆகும்.

புவியியல்[தொகு]

ஜஸ்பூர் 29.28 ° வடக்கு 78.82 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 320 மீட்டர் (1050 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த சிறிய நகரமானது ராம்நகர் கார்பெட் தேசிய பூங்காவிலிருந்து 45 கி.மீ தொலைவிலும், புதுதில்லியில் இருந்து 210 கி.மீ தொலைவிலும், நைனிடாலில் இருந்து 110 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இது உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லை நகரமாகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி ஜஸ்பூரின் மக்கட் தொகை 39,048 ஆகும். மொத்த மக்கட் தொகையில் 53% வீதமானோர் ஆண்களும், 47% வீதமானோர் பெண்களுமாக காணப்பட்டனர். ஜஸ்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 60% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 67% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 52% வீதமாகவும் இருந்தது.[2]

ஜஸ்பூர் மக்கட் தொகையில் 17% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள். இப்பகுதியின் பொதுவான மொழி இந்தி ஆகும். ஆனால் சிலர் பஞ்சாபி மொழி, உருது மொழி மற்றும் ஆங்கிலத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.

கலாச்சாரம்[தொகு]

மக்கட் தொகையில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் ஆவார்கள். சீக்கியர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆவார்கள். இந்த நகரம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த நகரில் ஒருபோதும் இனவாத மோதல்கள் நடந்ததில்லை. மக்கள் அனைவரும் பிற மதத்தவர்களின் பண்டிகைகளில் பங்கேற்கிறார்கள். இப்தார் விருந்துக்கு இந்துக்கள் அழைக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் இந்து பண்டிகையான ஹோலியில் பங்கேற்கிறார்கள். அனைத்து மக்களும் பௌத்த பண்டிகைகளுக்கும் அழைக்கப்படுகிறார்கள்.

பொருளாதாரம்[தொகு]

ஜஸ்பூர் நகரம் இந்தியாவின் மர நகரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந் நகரத்தில் பாரம்பரியமான மரத் தொழிலும், வேளாண்மைத் தொழில்களும் நடைப்பெறுகின்றன. நகரத்தின் பொருளாதாரம் முக்கியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், நகரத்தில் பலர் சுயதொழில்களையும், வர்த்தக நிலையகங்களையும் நடத்துகிறார்கள். நகருக்கு அருகில் உள்ள நந்தேஹியில் ஒரு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. மேலும் நகரின் அருகே பல அரிசி மற்றும் காகித ஆலைகள் உள்ளன. நகரத்தில் ஏராளமான மருத்துவமனைகள் காணப்படுகின்றன. , துணிமணிகள் மற்றும் ஆடைகள், புத்தகக் கடைகள், நகைக்கடைகள், மிட்டாய் பொருட்கள், இரும்புக் கடைகள், நிறப்பூச்சு கடைகள், இனிப்பு கடைகள் மற்றும் உணவகங்கள் போன்ற பல வணிகங்கள் நகரத்தில் நடைப்பெறுகின்றன. இந்த நகரத்தில் சிறந்த விருந்து மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

போக்குவரத்து[தொகு]

இது மாநிலங்கள் மற்றும் பிராந்தியத்தின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. என்.எச் -74 சாலை உத்திரஞ்சலில் உள்ள ஹரித்வாரை பிலிபிட் வழியாக உத்தரபிரதேசத்தின் பரேலியுடன் இணைக்கிறது. என்.எச் 74 சாலையின் மொத்த நீளம் 333 கி.மீ ஆகும். இது ஜஸ்பூரை ஹல்ட்வானி, காசிப்பூர், கடர்பூர், ருத்ராபூர், கிச்சா, ராம்நகர், ஹரித்வார் மற்றும் டெஹ்ராடூன் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. நகரத்திற்கு உரிய உள்ளூர் பேருந்து நிலையம் உள்ளது. அரசாங்க பேருந்து நிலையம் நகரின் புறநகரில் அமைந்துள்ளது. காசிப்பூர் நகரை ஜஸ்பூரின் வழியாக தம்பூருடன் இணைக்கும் ரயில்வே திட்டம் விரைவில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்பூர்&oldid=2868422" இருந்து மீள்விக்கப்பட்டது