ஜலவிஹார்
ஜலவிஹார் (Jalavihar) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரில் 12.5 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நீர் விளையாட்டுப் பூங்காவாகும். சஞ்சீவையா பூங்காவுக்கு அருகிலும், உசேன் சாகர் ஏரியிலும் அமைந்துள்ள இந்தப் பூங்கா 20 மே 2007 அன்று திறக்கப்பட்டது.
பின்னணி
[தொகு]வெளிநாடு வாழ் இந்தியரான ஆர்.ஜே ராவ் என்பவருடன் தனிநபர்கள் குழு, உள்ளூர் சுற்றுலாத் துறையுடன் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ₹220 மில்லியன் (அமெரிக்க டாலர் $3.1 மில்லியன்) நிதி திரட்டப்பட்டு இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக உசேன் சாகர் ஏரியைக் கடந்து நெக்லஸ் சாலையில் 12.5 ஏக்கர் (5.1 ஹெக்டேர்) நிலத்தை துறை அனுமதித்தது.
2000ஆம் ஆண்டில் ஆந்திராவின் முதல்வராக இருந்த நா. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசின் உள்ளூர் நிர்வாக மன்றத்தால் இந்த நிலம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் உரிமையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. இது தவிர, திட்டங்களை ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து உள்ளூர் அரசாங்கத்தால் விசாரணை தொடங்கப்பட்டது. உள்ளூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பிராந்திய உயர்நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இந்திய உச்ச நீதிமன்றம் 2006ன் நடுப்பகுதியில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது போன்ற பொது-தனியார் கூட்டு மாதிரியின் இலாபத்தன்மை காரணமாக, உள்ளூர் அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் இந்த போக்கைத் தொடர முன்மொழிந்தது. [1]
வசதிகள்
[தொகு]18000 சதுர அடிகள் கொண்ட நாட்டில் மிகப் பெரிய இந்தப் பூங்கா ஒரே நேரத்தில் சுமார் 1,000 பேருக்கு இடமளிக்க முடியும். கட்டப்பட்ட பகுதி பூங்காவின் மொத்த பரப்பளவில் 10% மட்டுமே கொண்டது. உசேன் சாகர் ஏரியைச் சுற்றி குப்பைகளைத் தடுக்க பூங்கா முழுவதும் சரியான வேலி அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா பொழுதுபோக்கு மற்றும் விருந்து என இரண்டு முக்கியப் பகுதிகளைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்குப் பகுதியில் நீர் விளையாட்டு, அலை குளம், மலை சறுக்கு, வன ஆற்றுச் சவாரி, சிறு தொடர்வண்டி, உணவகங்கள் போன்றவை உள்ளன. விருந்துப் பகுதியில் சுமார் 2,000 பேர் தங்கக்கூடிய திறந்த புல்வெளிகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AP Tourism to rope in more private parties". Business Line. 27 May 2010. http://www.thehindubusinessline.com/2010/05/27/stories/2010052751682100.htm.