உள்ளடக்கத்துக்குச் செல்

ச. தண்டபாணி தேசிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ச.தண்டபாணி தேசிகர் (1903 - 1990)[1] தமிழ் அறிஞர் ஆவார். திருக்குறள் உரைக்களஞ்சியம், சைவ இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளிட்ட பல படைப்புகளை இவர் வழங்கியுள்ளார். தமிழுக்கான சேவைக்காக இந்திய அரசின் பத்ம பூஷன் விருதையும் தமிழ்நாட்டு அரசின் திருவள்ளுவர் விருதையும் இவர் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

திருகைட்டங்குடி என்னும் கிராமத்தில் 1903-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் நாள் சடையப்ப தேசிகர் மற்றும் பாலம்மாள் ஆகியோருக்கு மகனாக ச.தண்டபாணி தேசிகர் பிறந்தார். இக்கிராமம் சிதம்பரத்தை அடுத்த நன்னிலம் பகுதியில் அமைந்துள்ளது.

கல்வி

[தொகு]

தமிழறிஞர் உ. வே. சாமிநாதையர் மற்றும் சு.பொன்னோதுவார் மூர்த்திகள் ஆகியோரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் தேர்வை எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

கல்வித் துறையில் பணி

[தொகு]

மதுரை மீனாட்சி கல்லூரி, மதுரை ஆதீனக் கல்லூரி, திருப்பனந்தாள் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல கல்வி நிறுவனங்களில் தமிழாசிரியராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். மு. கருணாநிதி , நீதியரசர் மு. மு. இஸ்மாயில், குன்றக்குடி அடிகளார் ஆகிய பிரபலங்களுக்கு தமிழாசிரியராக விளங்கினார்.

இலக்கியப் படைப்புகள்

[தொகு]

சைவத்தின் மறுமலர்ச்சி, முருகன், ஆடவல்லான், பஞ்சாட்சர தீபம் ஆகிய நூல்களை இயற்றினார். பஞ்சாட்சர தீபம் என்னும் நூல் திருமந்திரத்திற்கான விளக்க நூலாகும். திருக்குறளுக்கான விரிவான உரைக்களஞ்சியத்தை உருவாக்கினார். பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் திரட்டி, தேவையான இடங்களில் விளக்கங்களையும் முடிவுகளையும் சேர்த்து இந்நூலை உருவாக்கினார். இந்நூல் மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. தமிழ் நாட்டு அரசு இவரது படைப்புகளை 2007இல் நாட்டுடைமையாக்கியது.[2]

விருதுகளும் கௌரவங்களும்

[தொகு]

வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகச் செய்த சேவைகளுக்காக இந்திய அரசு பத்ம பூசண் விருதை 1990ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்தது.[3] பஞ்சாட்சர தீபம் என்னும் நூலுக்காக திருவாடுதுறை ஆதீனம் மகாவித்துவான் என்னும் பட்டத்தை வழங்கியது. தமிழ் மொழிக்காக ஆற்றிய தொண்டினை பாராட்டி தமிழ்நாட்டு அரசு திருவள்ளுவர் விருதை வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பேரவைச் செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தை அளித்து கௌரவித்தது. புதுச்சேரிப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கி.வேங்கிட சுப்ரமணியம் தலைமையில் ஆயிரம் வெண்காசுகளுடன் கௌரவ முதுமுனைவர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anna Centenary Library- ச.தண்டபாணியார்". www.annacentenarylibrary.org. Retrieved 2026-02-02.
  2. "நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் விவரம்". Retrieved 2026-02-02.
  3. "NATIONAL AWARDS FOR DISTINGUISHED AND XCELLENT SERVICE" (PDF). PIB. January 26, 1990. Retrieved 2026-02-02.

வெளி இணைப்புகள்

[தொகு]

ச. தண்டபாணி தேசிகர் நூல்கள் - TVA Digital library

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._தண்டபாணி_தேசிகர்&oldid=4460164" இலிருந்து மீள்விக்கப்பட்டது