சௌந்தரிய லகரி

| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
சௌந்தரிய லகரி (சௌந்தர்ய லஹரி) (Saundarya Lahari) என்பது புஷ்பதந்தர் என்ற சிவ பக்தன், கந்தர்வ ராஜன் செய்யப்பட்டு, ஆதிசங்கர பகவத்பாதரால் 8 அல்லது 9-ம் நூற்றாண்டில் வடமொழியில் தொகுக்கப்பட்ட சக்தி வழிபாட்டில் முக்கியமான ஒரு சமய நூல் / சமஸ்கிருதத் துதிப் பாடலாகும். தேவி மஹா திரிபுரசுந்தரி மீது செய்யப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். அம்பிகையைப் புகழ்ந்து எழுதப்பட்ட இந்நூல் மொத்தம்103 ஸ்லோகங்களைக் கொண்டது, எனினும் வழக்கில் 100 ஸ்லோகங்கள் உள்ளது. முதல் 40 சுலோகங்கள் அம்பிகையின் அருளைப் புகழ்கின்றன. இது ஆனந்த லஹரி (ஆனந்த வெள்ளம்). அடுத்த 60 ஸ்லோகங்கள் அம்பிகையின் அழகைப் புகழ்கின்றன. அது சௌந்தரிய லஹரி (அழகு வெள்ளம் / அம்பிகை அழகின் அலை). இந்த நூல் திரிபுரசுந்தரி எனப்படும் தேவியின் தத்துவமும் வடிவழகும் பற்றிய விளக்கமாக அமைந்துள்ளது.
இந்த நூலில் தேவியை பரம்பொருளாகக் காணும் சாக்த மரபின் கருத்துகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆனந்த லஹரி பகுதியில் சக்தி தத்துவம் மற்றும் யோகக் கோட்பாடுகள் விளக்கப்படுகின்றன. சக்கர வழிபாடு மற்றும் குண்டலினி சக்தியின் எழுச்சி பற்றிய கருத்துகளும் இதில் இடம்பெறுகின்றன. சௌந்தர்ய லஹரி பகுதியில் தேவியின் அங்க அங்கங்களின் அழகை வர்ணிக்கும் செய்யுட்கள் உள்ளன. இந்த வர்ணனைகள் உடல் அழகை மட்டும் அல்லாமல் தெய்வீக அர்த்தங்களையும் சுட்டிக்காட்டுகின்றன. சௌந்தர்ய லஹரி சமய இலக்கியம் தத்துவம் கவிதை ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. இந்த நூல் இந்தியாவின் பல பகுதிகளில் வழிபாடு பாராயணம் மற்றும் விளக்க உரைகளில் பயன்படுத்தப்படுகிறது. பல அறிஞர்கள் இந்த நூலுக்கு உரைகள் எழுதியுள்ளனர்.
தமிழ் மொழிபெயர்ப்பு
[தொகு]சௌந்தரிய லகரியினை 12-ம் நூற்றாண்டில் வீரை கவிராச பண்டிதர் "அம்பிகைப் பாடல்" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்.[1] அழகின் அலை என்பது இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லஹரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லஹரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லஹரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.[2]
முழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லஹரி - அழகின் அலை - என்றும் ஆனது.
வடமொழி நூலிலுள்ள பகுப்பைப் போலவே 40, 60 என்னும் பகுப்பு தமிழ்நூலிலும் உள்ளது.
- ’ஆனந்த லஹரி, சௌந்தரிய லஹரி, அலங்கார லஹரி முற்றும்’ என நூலின் முடிவில் வரும் தொடர் [3] இந்த நூலமைப்பை விளக்கும் தொடர்.
நூலின் பாங்கைக் காட்டும் பாடல் ஒன்று எடுத்துக்காட்டுக்குத் தரப்படுகிறது.
சிவமெனும் பொருளும் ஆதி சத்தியொடு
- சேரின் எத் தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
- அரிதெனா மறை இசைக்குமால்
தவபெரும் புவனம் எவ் வகைத் தொழில்
- நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின் கண் ஒரு தவமிலார் பணியல்
- ஆவதோ பரவல் ஆவதோ [4]
- சைவ எல்லப்ப நாவலர் என்பர் இவர் காலத்திலேயே இந்த நூலுக்கு ஒரு உரையும் எழுதியுள்ளார்.
சௌந்தரிய லகரி, அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்
[தொகு]சௌந்தரிய லகரி, அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்: அம்பிகையின் அருளைப் போற்றும் இந்த மூன்று புனித நூல்களும் சாக்த வழிபாட்டில் (சக்தி வழிபாடு) மிக முக்கியமானவை. இவற்றின் ஒப்பீட்டை கீழே காணலாம்.
பொதுவான ஒற்றுமைகள்: இந்த மூன்றுமே பராசக்தியை (லலிதா மகா திரிபுரசுந்தரியை/அம்பிகையை) முழுமுதற் கடவுளாகப் போற்றுகின்றன. இவை அனைத்திலும் தேவியின் அழகைப் பாதாதிகேசம் (பாதம் முதல் தலை வரை) அல்லது கேசாதிபாதம் என வர்ணிக்கும் பகுதிகள் உள்ளன. மேலும், ஸ்ரீ வித்யா உபாசனை மற்றும் குண்டலினி யோக ரகசியங்கள் இம்மூன்றிலும் அந்தந்த மொழிகளுக்கேற்ப மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றைத் துதிப்பவர்களுக்கு லௌகீகமான செல்வங்களும், ஆன்மீகமான முக்தியும் கிட்டும் என்பது பொதுவான நம்பிக்கை.
ஒவ்வொன்றின் சிறப்பம்சங்கள்: சௌந்தரிய லகரி (அழகின் அலை): இதன் முதல் 41 பாடல்கள் 'ஆனந்த லகரி' என்றும், மீதமுள்ளவை 'சௌந்தரிய லகரி' என்றும் அழைக்கப்படுகின்றன. இது வெறும் துதிப் பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திர சாஸ்திரம். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட எந்திரம் (Yantra) மற்றும் பலன் உண்டு. அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை இது மிக அழகாக விளக்குகிறது.
அபிராமி அந்தாதி: இது தமிழில் அமைந்த மிகச்சிறந்த பக்தி இலக்கியம். ஒரு பாடலின் கடைசிச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும் 'அந்தாதி' முறையில் இது பாடப்பட்டுள்ளது. மரண பயத்தைப் போக்கி 'அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய' வரலாற்றுப் பின்னணி இதற்கு உண்டு. எளிய தமிழில் இருப்பதால், பாமர மக்களும் அம்பிகையிடம் உருகிப் பிரார்த்தனை செய்ய இது ஒரு சிறந்த கருவியாகும்.
லலிதா ஸஹஸ்ரநாமம்: இதில் தேவியின் 1000 பெயர்கள் எவ்விதத் திரும்பக் கூறலும் (Repetition) இன்றி இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு உபதேசித்ததாக இது அமைகிறது. தேவியின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்து தொழில்களையும் (பஞ்ச கிருத்யம்) இது விரிவாக விவரிக்கிறது. இதனைப் பாராயணம் செய்வது அனைத்து தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
| அம்சம் (Feature) | சௌந்தரிய லகரி | அபிராமி அந்தாதி | லலிதா சகஸ்ரநாமம் |
|---|---|---|---|
| மொழி | சமஸ்கிருதம் | தமிழ் | சமஸ்கிருதம் |
| ஆசிரியர் | ஆதி சங்கரர் | அபிராமி பட்டர் | வாக் தேவதைகள் (பிரம்மாண்ட புராணம்) |
| நூலின் அமைப்பு | 100 ஸ்லோகங்கள் (மந்திர வடிவம்) | 100 பாடல்கள் (அந்தாதி முறை) | 1000 திருநாமங்கள் (பெயர்கள்) |
| இலக்கிய முறை | காவியம் மற்றும் தந்திர சாஸ்திரம் | அந்தாதி (செய்யுள் வகை) | ஸஹஸ்ரநாமம் (நாமாவளி) |
| முதன்மை நோக்கம் | ஸ்ரீவித்யா உபாசனை மற்றும் யோகம் | பக்தி மற்றும் சரணாகதி | தேவியின் திருப்புகழைப் பாடுதல் |
| குறிப்பிடத்தக்க சிறப்பு | ஒவ்வொரு பாடலுக்கும் தனி எந்திரம் மற்றும் பலன் உண்டு | அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய பக்தித் திறன் கொண்டது | திருநாமங்கள் மீண்டும் வராமல் (Repetition-free) அமைக்கப்பட்டவை |
திரைப்படங்களில் சௌந்தரிய லகரி
[தொகு]தாய் மூகாம்பிகை (1982) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜனனி ஜனனி” என்ற பாடலில் எளிமையாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் சௌந்தரிய லகரி வெளிப்படுகிறது. இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. பாடல் வரிகளை வாலி எழுதியுள்ளார். தெய்வீக தத்துவத்தை இசை வழியாக பொதுமக்களிடம் கொண்டு சென்றதில் இந்தப் பாடல் முக்கிய இடம் பெறுகிறது.
| “ | சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும் ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி |
” |
இந்த தத்துவக் கருத்தே இந்தப் படம் அன்னையாக விளங்கும் மூக்காம்பிகை தெய்வத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சௌந்தரிய லகரியின் முதல் செய்யுள் ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. சிவம் மற்றும் சக்தி ஒன்றிணைந்தால்தான் உலக இயக்கம் நடைபெறும் என்பதை விளக்குகிறது. சக்தியே உலகின் அடிப்படை காரணமாகவும் அனைத்தையும் இயக்கும் மூலமாகவும் இதில் வர்ணிக்கப்படுகிறது. தேவர்கள் கூட சக்தியின் அருளால் தான் முழுமை பெறுகின்றனர் என கூறப்படுகிறது. அன்னை உலகமாகவும் ஆன்மாவாகவும் காணப்படுகிறாள். இந்த கருத்து சௌந்தரிய லகரியின் சக்தி தத்துவத்தின் மையமாக உள்ளது.
அன்னை உலகின் அடிப்படை சக்தி என்றும் தெய்வீக சக்தி தாய்மையாக வெளிப்படுகிறது என்றும் இரண்டிலும் கூறப்படுகிறது. சௌந்தரிய லகரியில் தத்துவமாக சொல்லப்பட்ட சிவ சக்தி ஒன்றிணைவு என்ற எண்ணம், அந்தப் பாடலில் உணர்ச்சிமிக்க தாய் வடிவில் பொதுமக்கள் எளிதில் உணரும் வகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகத்தை உருவாக்கும் காரணமாகவும் அனைத்தையும் நிறைவு செய்பவளாகவும் அன்னை வர்ணிக்கப்படுகிறாள். தத்துவ நூலில் சொல்லப்பட்ட ஆழ்ந்த கருத்து, திரைப்படப் பாடலில் உணர்ச்சிமிக்க தாய் வடிவில் மக்கள் மனதைத் தொடும் வகையில் வெளிப்படுகிறது.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ Nagaswamy, R. (n.d.). "Saundarya Lahari in Tamil (Volume 19)". Tamil Arts Academy. Archived from the original on 10 பிப்ரவரி 2021. Retrieved 26 September 2020.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Saundarya lahari in Tamil". Archived from the original on 2021-02-10. Retrieved 2016-11-18.
- ↑ புலவர் புராணம்
- ↑ பாடல் 1