உள்ளடக்கத்துக்குச் செல்

சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழிய ஏனாதி திருக்குட்டுவன் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னன் ஒருவனின் மகன் [1]
இவன் நன்செய் வயல் சூழ்ந்த வெண்குடை என்னும் ஊரில் இருந்துகொண்டு சேரநாட்டின் நிலப்பகுதி ஒன்றை ஆண்டுவந்தான் [2]
இவன் தன் கற்பாறை போன்ற மார்பில் சந்தனப் பூச்சுடன் காணப்படுவான் [3]

இவன் சிறந்த கொடைவள்ளல். என்றாலும் இவனிடம் பரிசில் பெற யாரும் செல்லவேண்டாம் என்று இவனைப் பாடும் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடல் பாடியுள்ளார். [4]

இந்த மாடலன் மதுரைக்குமரனார் ஒருநாள் விடியற்காலையில் இவனது அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு இவனது தந்தையின் வஞ்சிமாநகரைப் பாடினாராம். இந்தக் குட்டுவன் தன் தந்தையைப் பாடியதைக் கேட்டு வெளியே வந்து போர்க்களிறு ஒன்றைப் பரிசாக நல்கினானாம். புலவர் யானையைக் கண்டு அஞ்சி நடுங்கி விலகினாராம். இதனைக் கண்ட குட்டுவன், புலவர் பரிசில் போதவில்லை என எண்ணி விலகுவதாக எண்ணிக்கொண்டு மற்றுமொரு போர்யானையை நல்கினானாம். இதனால் இவனிடம் பரிசில் பெறச் செல்லவேண்டாம் என்று புலவர் பாடுகிறார். (இவனிடம் சென்றால் வேண்டிய அளவு யானைகளைப் பரிசிலாகப் பெறலாம் என்பது புலவர் சொல்லும் செய்தி)

அடிக்குறிப்பு

[தொகு]
  1. இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி
  2. ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்
  3. சிலை உலாய் நிமிர்ந்த வண்டுபடு மார்பு
  4. புறநானூறு 394